காலம் ஒருநாள் மாறும்...

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
mubee
Posts: 531
Joined: Tue Jul 09, 2013 6:04 pm
Cash on hand: Locked

காலம் ஒருநாள் மாறும்...

Post by mubee » Thu Sep 26, 2013 11:50 am

அது மார்கழி மாதத்தின் அதிகாலை நேரம்... எங்கோ சேவல் கூவும் ஓசை.... மலைகளை வெள்ளித்திரையிட்டு மூடி வைத்தது போல பனி மூட்டம். சிலு சிலுவென்று உடம்பை விறைக்க வைத்தது குளிர். அதையும் அசட்டை செய்தவர்களாக, அதிகாலையிலேயே எழுந்து முற்றத்தில் சாணி தெளித்துக் கோலம் போட்டுக் கொண்டிருக் கிறார்கள் அந்தப் பெண்கள். மார்கழி மாதம் என்றாலே லயத்து வாசலெங்கும் பளிச் சென்று பலவகையான கோலங்கள்...! ம்.... சில பாரம்பரியங்கள் காலங்காலமாக அப்படியே தான் இருக்கின்றன. எவ்வித மாற்றமும் இல்லாமல்.... அவர்களது அவல வாழ்க்கையைப் போலவே....

பக்கத்துக் காம்பிராவில் பெண்களும் வாண்டுகளும் போடுகின்ற சத்தத்தில் விழிப்பு வந்து விடுகிறது மீனாவுக்கு. படுத்திருந்த ராமுவைக் காணவில்லை. பாவம், வெள்ளனவே எழுந்திருப்பான். குளிருக்கு இதமாகக் கம்பளியை நன்றாகப் போர்த்திக்கொண்டு சுகமாகப் படுத்திருக்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு... ஆனால் அப்படியெல்லாம் இருந்து விட முடியுமா?..... பெருமூச்சுடன் மெதுவாக எழுந்து நடந்தாள்.

“அடேய், ராசா, ரொட்டிய தின்னுப்புட்டு, வெரசா பயணம் வையேண்டா... இந்த எளவு ஈரெவெறகு எரியவும் மாட்டேங்குது. அதுல நீ வேற மசமசனு நின்னுகிட்டு...”

அடுப்பில் புகையோடு போராடிக் கொண்டிருந்த மேட்டுலயத்து மேனகா அக்காவின் கணீரென்ற குரல் செவியில் மோதுகிறது. பாவம், பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவிட்டு, பச்சப்புள்ளையோடு பரக்கப் பரக்க புள்ளமடுவத்துக்கு ஓட வேண்டுமே என்ற அவசரம் அவளுக்கு. அந்த அவசரத்திலும் அவள் சுடும் ரொட்டியின் வாசம் கமகமவென்று காற்றில் கலந்து வந்தது. வாயிலே ஊறிய எச்சிலைத் துப்பிவிட்டு லோட்டாவில் இருந்த தண்ணீரில் வாயைக் கழுவிய மீனா, காய்ந்த மிலாறுக்கட்டு ஒன்றை அடுப்பில் திணித்துக் குளிர் காய்ந்து கொண்டிருந்த ராமுவைக் கண்டதும் தானும் போய் அருகில் குந்திக் கொண்டாள்.

கேத்தலில் ‘தள புள’ வென்று கொதிக்கும் தண்ணீர். அவளுக்குக் குளிர் காய்வதற்கு வசதியாக ராமு ஒரு கைப்பிடி மிலாறு எடுத்து ஒடித்துப் போட்டதும் ‘திகு திகு’ வென எரிகின்றது அடுப்பு. முரட்டுக் கம்பளியை இறுக்கிப் போர்த்தி, கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிக் கொண்டு குளிர் காயும் மீனாவுக்கும் சேர்த்தே சாயத்தண்ணியை ஊற்றுகிறான் ராமு. கோப்பையில் கருஞ்சிவப்பு நிறத்தில் ஆவி பறக்கும் தேநீர்... அருகில் சிறிய போத்தலில் கருப்பட்டித் துண்டுகள்....

ஒரு வாய் உறிஞ்சியதும் உடம்பில் கதகதவென உஷ்ணம் பரவுகிறது அவளுக்கு. “வெறும் சாயத்தண்ணியாப் போச்சு. கொஞ்சம் பாலும் இருந்தா ஒனக்கு நல்ல இருக்குமில்ல” ராமு தேத்தண்ணியை உறிஞ்சியவாறு அவளைப் பார்த்து மெதுவாகக் கூற, மீனாவின் குரல் சலிப்பாக ஒலிக்கிறது.

“ங்குங்... அந்த பார்வதியக்கா வீட்டுல பாலுன்னு வெறும் பச்சத்தண்ணிய தான தாராளுங்க. அதவிட இது தேவல மச்சான்...”

ஒப்புக்காகப் பேசும் மீனாவுக்குப் பதில் எதுவும் சொல்லாமல் கோப்பைகளை அலசுவதற்காக எடுத்துக் கொண்டு வாசலுக்குப் போகிறான் ராமு.

“நீ இப்பவே பயணம் வச்சா தான் மெதுவா தார் ரோட்டுக்குப் போயி மொத பஸ்ஸ புடிக்கலாம்.” அக்கறை தொனிக்கப் பேசுகின்ற அவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே, அடுப்பில் இருந்து பல் தேய்க்க வாகாக ஒரு கரித்துண்டையும் உப்புத்தூளையும் எடுக்கிறாள் மீனா.

“ஆமா மச்சான், நேத்து ரொம்பவும் பிந்திப் போச்சினு அந்த வூட்டம்மா சத்தம் போட்டாங்க” ராமு அண்டாவில் அளாவி வைத்திருந்த சுடுதண்ணியில் முகம் கழுவியபோது குளிருக்கு ரொம்பவும் இதமாக இருந்தது.

பச்சைக் கம்பளம் விரித்தது போல் தெரியும் மலைகளின் இடையே நீண்ட மலைப்பாம்பாக வளைந்து சென்றது பாதை. தூரத்தே பஸ் வண்டி ஏதும் வருகிறதா என்பதை நோட்டமிட்டவாறே, முதல் நாள் ராமு துவைத்துப் போட்டிருந்த சேலையை எடுத்து, லேசாக உதறிவிட்டுக் கட்டிக் கொண்டாள் மீனா. சிவப்பு நிற சின்னாளப்பட்டு அவளுக்குப் பாந்தமாக இருந்தது. ரவிக்கையை சற்று இழுத்து பின் குத்திக் கொண்டாள். வேலைக்குப் போக ஆரம்பித்ததும், உடம்பு கொஞ்சம் பூசினாப்போல் இருப்பது புரிந்தது. ராமு பணிய லயத்துக் கடையில் வாங்கி வந்திருந்த பாண் சீந்துவாரில்லாமல் மேசையில் கிடந்தது. அவளுக்கு ஏனொ சாப்பிடப் பிடிக்கவில்லை. சில்லறையைச் சரிபார்த்துக்கொண்டு, மண்பாதையில் மெதுவாக இறங்கிப் பீலிக்கரையை நெருங்கியதும், வீட்டைப் பூட்டிவிட்டு வந்த ராமுவும் அவளோடு சேர்ந்து கொண்டான்.

“கொஞ்சம் அசந்தமுனா அவ்வளவுதான். அந்த நாசமாப் போன டைவரு நிக்காம போயிருவான். முந்தாநேத்தும் அப்படித்தான் வேகுவேகுனு ஓடிப் போயி ஏறவேண்டியதாப் போச்சி”

மீனா தினமும் இப்படி பஸ் வண்டியில் அல்லாடிக்கொண்டு வேலைக்குப் போவது அவனுக்குக் கொஞ்சமும் பிடித்தமில்லாவிட்டாலும் வழக்கம் போல் அவளுடன் வந்து பஸ் வரும் வரை துணையாக நின்றான் ராமு. தூரத்து மூங்கில் குத்து வளைவில் பஸ் வருவது தெரிகிறது. மீனா கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு ஏறிக்கொண்டதும், அங்கிருந்த அகன்ற பாறையில் சற்றே அமர்ந்து கொண்டான். பஸ் வண்டி மலைப்பாதையில் வளைந்து வளைந்து முன்னோக்கிச் சென்று மறைய, அவனது மன நினைவுகளோ பின்னோக்கிச் சென்று அந்த மகிழ்ச்சியான நாட்களை அசை போட ஆரம்பித்தது.

‘தெனம் வேலைக்குப் போய் பத்தாந்தேதியானா சொளையா சம்பளம் வாங்கினவன் தான். மீனாவோட சோடியா நாவலப்பிட்டி டவுணுக்குப் போயி சாரதா பொடவக்கடையில உடுப்பு, துணிமணியும் சிட்டி சென்டரில மளிக சாமானும் வாங்கிக்கிட்டு வந்த காலத்த மறக்க முடியுமா? பாவம்... பெத்தவங்கள விட்டுட்டு என்னய மட்டுமே நம்பி வந்தவ மீனா. நம்ம தலயெழுத்து.... பொழப்பு இப்பிடி சீரழிஞ்சி சின்னாபின்னமாப் போச்சு...’

அவனும் தான் என்ன செய்வான்? தோட்ட நிர்வாகம் கைமாறியதும் ராமுவின் வேலை பறிபோனது. வெளிவேலை செய்து கிடைக்கும் பணத்தில் எப்படியோ ஒப்பேத்தி வந்தாள் மீனா.

பெரிய கிளாக்கர் விக்டர் ஐயா தங்கமானவர். நாவலப்பிட்டியில் இருந்த அவரது தங்கை முழுகாமல் இருப்பதால், வீட்டில் பகலில் கூடமாட உதவிக்கு யாரும் இருந்தால் நல்லது என்று மீனாவை அனுப்பும்படி சொன்னார். அவளுக்கும் ஒரு வேலை செய்தது போல் இருக்கும், செலவுக்கும் உதவியாக இருக்கட்டும் என்ற நினைப்பு அவருக்கு. ஆனால், உச்சிமலை தோட்டத்தில் இருந்து நாவலப்பிட்டி டவுனுக்கு பஸ்ஸில் போய் வரவேண்டுமே.... அதற்கான பணத்தையும் தனியாகத் தந்து விடுவதாகச் சொல்லியிருந்தார். ஆனால் ராமுவுக்குத்தான் சங்கடமாக இருந்தது.

“என்னாங்க மச்சான்.... வீட்டுல நானு சும்மா தானே இருக்கேன், கிளாக்கர் ஐயா சொன்ன வேலைக்கிப் போனாதான் என்னா? எனக்கு எப்பிடியும் வேல சரி வந்திடும்”

“அதுவும் சரிதான், ஆனா அது வரைக்கும் போயிட்டு வாரேனே மச்சான்.... பொம்பளங்க பஸ்ஸில போயி வேல பார்க்காமலா இருக்காங்க?”

‘இருந்தாலும் நீ எப்படி புள்ள....’ ராமு தயங்கியதும் சட்டென தொடர்ந்தாள் மீனா. ‘நம்ம தோட்டத்து இஸ்கூல் டீச்சர் கூட ஆறேழு வருசமா பஸ்ஸில தானே இங்க வந்து போகுது. அதோட தானே இரண்டு புள்ளங்களையும் பெத்துக்கிருச்சி. இப்பவும் வந்து போய்க்கிட்டுத்தான் இருக்கு. நீங்க சும்மா இருங்க மச்சான். நான் போகத்தான் போறேன்’

மீனா பிடிவாதமாகக் கேட்டபோது அவளோடு மல்லுக்கு நிற்க அவனால் முடியவில்லை. அரைமனதோடு மீனாவை அனுப்பிவிட்டு, கிடைக்கும் கூலி வேலை யைச் செய்வதோடு, அவளுக்கு சிரமம் இல்லாதவாறு வீட்டு வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து வந்தான்.

“என்ன. ராமண்ணே...! இப்பிடி செல கணக்கா மல்லாந்து கெடக்கிaங்க... தங்கராசு குரல் கேட்டதும் தூக்கிவாரிப் போட்டது அவனுக்கு. நினைவுகளை உதறி விட்டு நிமிர்ந்தான்.

‘ராமண்ணே! கண்டாக்கு ஐயா வீட்டுல சுண்ணாம்பு அடிக்கணுமாம். கூட்டியாரச் சொன்னாக. வாரிகளா.....’

“வாரேன்... தங்கராசு!” துள்ளியெழுந்து கொண்டான். சும்மா இருந்தவனுக்கு அன்றைக்கு ஒரு வேலை கிடைத்த மகிழ்ச்சி

“பாவம்... அந்தப் புள்ளக்கி வாய்க்கு ருசியா எதுனாச்சும் செஞ்சு வைக்கலாம்...”

அவன் நடையில் உற்சாகம் தெரிந்தது.

வளைவுகளில் சென்ற பஸ் வண்டியின் போக்குக்குக ஈடுகொடுக்க முடியாமல் நெரிசலில் இடிபட்டவாறு, பயணித்துக் கொண்டிருந்தாள் மீனா. வண்டிச் சத்தத்தை விடவும் பெரிதாக அலற வைத்திருந்த ரேடியோவில் இரட்டை அர்த்தம் கொண்ட மட்டமான பாடல் ஒன்று நாராசமாக ஒலித்துக் கொண்டிருந்தது. அதையும் சிலர் சுகமாக இரசித்துக் கொண்டிருந்தனர். மீனாவுக்கு உடம்பெல்லாம் கூசியது. “தூத்தெறி! இதயெல் லாம் ஒரு பாட்டுனு எழுதிப் பாடுறாங்களே, அவுங்கள நிக்க வச்சி சுடணும்.. சீ.” பார்வையை யன்னலுக்கு வெளியே ஓட விட்டவளுக்குப் பஸ் வண்டி பவ்வாகம பாலத்தை நெருங்கி விட்டது தெரிந்தது. பாலத்தின் அடியில் பளிங்குபோலப் பாய்ந்து ஓடும் மகாவலி கங்கை. அப்பாடா! அவளுக்குச் சற்று நிம்மதியாக இருந்தது பாலத்தைக் கடந்துவிட்டாலே நாவலப்பிட்டிக்கு வந்தமாதிரி தான். சில நிமிடத்தில் மாரியம்மன் கோவில் முன்னால் இறங்கிக் கொண்டவள், “தாயே நீ தான் தொணயா இருக்கணும்” மனதார வணங்கி, விபூதியைப் பூசியவாறு, கோயிலை ஒட்டி இருந்த வீதியில் ஓட்டமும் நடையுமாக விரைந்தாள். அதிக தொலைவு இல்லை. பாதையோரமாக இருக்கும் வீடு தான். கேட்டைத் திறந்து வாசலில் நுழையும்போதே பெரியம்மாவின் குரல் பெரிதாக ஒலித்தது.

“ஏண்டி, மீனா, இப்படி நெனச்ச நேரம் வாறியே, இருக்கிற வேலைய யாரு செய்யிறதாம்?”

முழுகாம இருக்கிற எம்பொண்ணுக்கு சரியா நேரத்துக்கு எல்லாஞ் செய்ய வேணாமா....? அந்த அம்மாவுக்குப் பதில் சொல்ல அவளால் முடியவில்லை. அத்தனை களைப்பு. அப்படியே சொன்னால் மட்டும் அவளது நிலைமை அவருக்குப் புரியவா போகிறது?

குளிர்ந்த தண்ணீரை எடுத்து மடமடவென்று குடித்தாள். சில்லென்ற தண்ணீர் தொண்டையில் இதமாக இறங்கியது. அலங்கோலமாகக் கிடந்த சமையலறையைக் கூட்டி ஒழுங்குபடுத்தி, பாத்திரங்களை அலசி, அடுக்கி வைத்தாள். மின்சார கேத்தலில் ஒரு நெடியில் கொதித்த தண்ணீரில் தேநீர் தயாரித்து வீட்டாருக்குக் கொடுத்து விட்டுத் தானும் குடித்தாள். ஆகா! என்ன வாசம்! பாலும் சீனியும் அளவாகக் கலந்து கள்ளிச் சொட்டாகக் குடிக்கையில் சொர்க்கம் தெரிந்தது. இன்று முழுநாளும் பசியே எடுக்காதே.

“மீனா! தேத்தண்ணி குடிச்சதும் கடைக்குப் போயிட்டு வந்திரு” அலுமாரியில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டே பெரியம்மா சொல்வது கேட்டது. அந்த வீட்டில் கடைகண்ணிக்கும் அவள் தான் போக வேண்டும்.

“சின்னம்மாவுக்குப் பிஞ்சு வெண்டிக்காயாப் பாத்து வாங்கிட்டு, சிறுகீரையும் நல்ல பழங்களும் வாங்கிக்க.”

சின்னம்மாவுக்கு நிறைய பழங்கள் சாப்பிடக் கொடுப்பார்கள். அப்பத்தான் பிறக்கும் குழந்தை கொழுகொழுவென்று இருக்குமாம்.

“என்னாடி, இப்படி ஆடி அசஞ்சு வாறியே... சின்னம்மாவுக்குத் தோடம்பழம் கொடுக்கிற நேரமினு தெரியாதா....? ஒனக்கு வச்ச சாப்பாடும் அப்படியே கெடக்குது பாரு...”

பெரியம்மா எப்பவும் அப்படித்தான். ஊருக்கே கேட்கும்படி உரத்துக் கத்துவாள். ஆனால் உண்மையில் மனசு சொக்கத்தங்கம். ஊரில் இருந்து ஐயா கொண்டு வந்திருந்த உயர்ந்த சாதிப் பழங்களில் இரண்டை எடுத்தாள் மீனா. பழச்சாறு தயாரித்து மேசையில் வைத்துவிட்டுக் குளியலறையில் கிடந்த உடுப்புகளைச் சவர்க்காரப் பவுடர் போட்டு ஊற வைத்தாள். சின்னம்மாவுக்கு வழுக்கிவிடக் கூடாதென்பதற்காகக் குளியலறையை எப்போதும் பளிச்சென்று வைத்திருக்க வேண்டும். தலையைத் தேய்த்துக் கழுவி விட்டு எழுந்தபோது, பசி இனியும் தாங்க முடியாது போல தோன்றியது.

தட்டை எடுத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தாள். அவளுக்கென்று, தட்டில் பாண் துண்டுகளும் முதல் நாள் சமைத்த மீன் குழம்பும் வைத்திருந்தார் பெரியம்மா. அரக்குளா மீன் குழம்பு தேவாமிர்தமாக இருந்தது. புளிப்பும் காரமும் சேர்ந்த பழங்கறி சுண்டக் காய்ச்சியதால் சுவை ஒருபடி கூடியேயிருந்தது.

சின்னம்மா பேருக்குக் கொஞ்சம் பழச்சாறு குடித்துவிட்டு தொலைக்காட்சி முன் அமர்ந்து கொண்டார். வைத்திருந்த பழச்சாறு மேசையில் அப்படியே இருந்தது. அதை ஊற்றி மீனாவிடம் கொடுத்தார் பெரியம்மா. அவளும் மறுபேச்சில்லாமல் வாங்கிச் சொட்டு மீதம் வைக்காமல் குடித்தாள்.

“சின்னம்மாவுக்கு வடை சாப்பிடனுமாம்... ஆசையாக கேக்கிறா.... கடலைப்பருப்பை ஊறப் போட்டு விடு மீனா.”

பெரியம்மா சொன்னதைச் செய்துவிட்டு, அடுப்படிக்குச் சென்றாள் மீனா.

சாப்பாட்டறையில் சிரிப்பும் கும்மாளமுமாக உணவு வேளை நடந்து கொண்டிருந்தது. அப்படி என்ன தான் பேசுவார்களோ? மீனாவுக்கு வியப்பாக இருக்கும். சின்னம்மாவை ஆளாளுக்குச் சீராட்டி, வேளாவேளைக்கு விரும்பியதைச் செய்து கொடுத்துத் தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தாங்குகிறார்கள். எள் என்றால் எண்ணெய்யாக நிற்கும் அண்ணன்மார், வசதியான கணவன், முதல் குழந்தை என்று பாசத்தைக் கொட்டும் பெற்றோர். சாப்பிடுவதற்குப் பிகு பண்ணுகின்ற சின்னம்மாவுக்குச் சிறு குழந்தை போல் ஊட்டிவிடும் போது, சிலவேளைகளில் மீனாவுக்குப் பொறாமையாகக் கூட இருக்கும்.

“நாமளுந்தான் பொம்பளயாப் பொறந்திருக்கடே, நெதமும் நாய் படாத பாடு. ‘ஆச இருக்கு அரசாள, அதிஷ்டமிருக்கு கழுத மேய்க்க’ ங்கிற மாதிரி நமக்கு இப்பிடி ஒரு தலவிதி.”

தன் நிலையை எண்ணியபோது, அவளையறியாமலேயே பெருமூச்சு எழுந்தது. கண்கள் குளமாயின.

அன்று தோட்டத்தில் சம்பள நாளாகையால் மாலையில் பஸ் வண்டியில் சனக்கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த வண்டியை விட்டால் வீடு செல்ல வேறு வழியுமில்லை. வண்டி வளைவான மேடுகளில் குலுங்கியவாறு சென்றது. கம்பியைப் பிடித்தவாறு நின்றிருந்த மீனாவுக்கு அதற்கு மேல் சமாளிக்க முடியவில்லை. கண்கள் இருட்டிக் கொண்டு வர, அருகில் நின்றிருந்த ஒரு பெண்மேல் அப்படியே மயங்கிச் சாய்ந்துவிட்டாள்.

வண்டியில் இருந்த பெண்கள் அவளைப் பிடித்து ஆசுவாப்படுத்தினர். முகத்தில் தண்ணீர் பட்டதும் மெதுவாகக் கண்விழித்தாள் மீனா, ஒரு பெண் தன்னிடம் இருந்த போத்தலில் உள்ள நீரை குடிக்கக் கொடுத்துவிட்டு. அவளை ஏறஇறங்கப் பார்த்தாள். “ஏம்மா... நீ ராமு பொண்டாட்டி தானே...

முழுகாம இருக்கிறதா சொன்னாங்களே, அதான் இப்பிடி... கொஞ்சம் இங்க ஒக்காந்துக்க...” அவள் காட்டிய இடத்தில் உட்கார்ந்து கொண்ட மீனாவுக்கு சற்று நேரத்தில் களைப்பு நீங்கியிருந்தது. முகத்தைத் துடைத்துக்கொண்டாள். இறங்கவேண்டிய இடம் வந்தது. மெதுவாக இறங்கினாள். வழமையாகப் பீலியோரப் பாதையில் காத்து நிற்கும் ராமுவையும் காணோம்.

சூடான அண்டா நீரில் கைகால் கழுவிக் கொண்டு, அசதி மேலிட கட்டிலில் சாய்ந்து கொண்டாள். சுடச்சுட தேநீர் ஊற்றிக் கொண்டு வந்த ராமுவின் கையில் மணம் வீசும் பருப்பு வடைகள். “நானே செஞ்சது புள்ள... களைச்சிப்போய் வந்திருக்கியே.... ரொம்ப ருசியா இருக்கும்... சூடா இருக்கு... சாப்பிடு...”

வாஞ்சையோடு கொடுத்ததை வாங்கிக்கொண்டாள். அதில் பருப்புடன் அவனது பாசமும் அன்பும் கலந்திருந்தால் ருசி அதிகமாகவே இருப்பது புரிய, அவள் கண்கள் பனித்தன.

எங்கோ தூரத்து லயத்தில் “நெஞ்சம் மறப்பதில்லை” நிகழ்ச்சியில் செளந்தராஜனின் கம்பீரமான குரல் காற்றில் மிதந்து வந்தது.

“காலம் ஒருநாள் மாறும்.... நம் கவலைகள் யாவும் தீரும்...”
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”