எனது பள்ளி பருவத்தை பற்றி பார்ப்போமா?

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
vsjagan
Posts: 15
Joined: Sat Feb 22, 2014 2:55 pm
Cash on hand: Locked

எனது பள்ளி பருவத்தை பற்றி பார்ப்போமா?

Post by vsjagan » Sat Feb 22, 2014 8:25 pm

எனது பள்ளி திருவாரூரில் உள்ளது. நான் எனது பள்ளி என்று குறிப்பிடுவது ஒன்பதாம் வகுப்பிலிருந்து துவங்கிய பள்ளியைத்தான் அதற்கு முன்னால் நான் படித்தது கிராமத்திலுள்ள எலிமெண்டரி ஸ்கூல்தான். அங்கே குறிப்பிடும்படியாக எந்த மாற்றங்களும் நட்பும் ஏற்படாததால் அதை நான் அதிகம் பகிரவில்லை. நான் படிக்கும் காலத்தில்தான் S S L C நீக்கப்பட்ட இரண்டாவது வருடம். குதுகலமான பள்ளி வாழ்க்கை. ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் போது அந்த பள்ளிக்கு புதியவன் என்பதால் எனக்கு மனதில் இனம் புரியாத பயம். யாரைப்பார்த்தாலும் புதிய முகம். என்னால் முதல் இரண்டு மாதங்களுக்கு படிக்க முடியாத நிலை. சக மாணவர்களிடமும் பேச கூச்சம் இப்படியே இரண்டுமாதம் கடந்த நிலையில் நண்பர்களை சேர்க்கத் தொடங்கியபின் தான் சகஜ நிலைக்கு வந்தேன். அதன் பின் அந்த பள்ளியையே ஆட்டிப்படைத்தேன் என்பது ஆச்சர்யம். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே நான் பலகுரலில் பேசும் திறமை பெற்றிருந்ததால் வகுப்பறையில் ஆசிரியர் வராத நேரத்தில் நான் அமர்ந்திருக்கும் பெஞ்ச் களை கட்டும். இதை கவனித்து விட்ட என் தமிழாசிரியர் பள்ளியில் எடுக்கப்பட்ட வானொலி கலை நிகழ்ச்சியில் என்னை பலகுரலில் பேச வைத்து விட்டார். அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பின் போது என் குடும்பத்தாரோடு கேட்டபோது ஏற்பட்ட மகிழ்ச்சி இருக்கிறதே சொல்லி மாளாது.அப்படி ஒரு மகிழ்ச்சி. அதன் பின் பள்ளியில் எந்த நிகழ்ச்சி என்றாலும் நான் இல்லாமல் இருந்ததில்லை.
இதனால் எனக்கென்று ஒரு நட்பு வட்டமும் ஆசிரியர்கள் மத்தியில் நற்பெயரும் என்னை தெரியாதவர்கள் யாருமில்லாத நிலை. நான் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சென்றவுடன் என்னுடன் படித்தவர்களுக்கு பெருமை. அது மட்டுமல்ல ஒருபடி மேலாக நாடகங்கள் எழுதி இயக்க ஆரம்பித்தேன். நாடகத்தில் வரும் கதாபாத்திரங்களை வாயசைக்க சொல்லிவிட்டு பின்னணியில் அவர்களுக்கான டயலாக்கை நானே பேசி (பெண் குரல் உள்பட) அப்போது எல்லோரிடமும் பாராட்டுதல்களும் பெற்றேன். எனது சக மாணவர்கள் என்னுடன் மேலும் நெருங்கிப்பழக ஆரம்பித்து விட்டார்கள். திறமை இருப்பவர்களை அனைவரும் விரும்புவார்கள் என்பது இயற்கைதானே. அந்த வகையில் நான் கொஞ்சம் கொஞ்சமாக எனது சகமாணவர் களிடத்தில் மனதில் இடம் பிடித்தேன். எனது பள்ளியில் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் எனது கலை நிகழ்ச்சி நடை பெற்றது. மேலும் எங்கள் ஊரில் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது அல்லவா. அதில் எங்கள் பள்ளி மாணவர்களை மக்களை ஒழுங்கு படுத்தவும் சேவை செய்யவும் பயன் படுத்தி கொள்வார்கள். அந்த சேவையில் மகிழ்ச்சியுடன் ஈடு பட்டு மக்களிடம் நன்மதிப்பை பெறுவோம். எங்கள் பள்ளியின் முன் உள்ள கமலாலயம் குளத்தில் ஒருமுறை ஒரு மூதாட்டி விழுந்து இறந்துவிட தீயணைப்புதுறைக்கு உதவியாக நாங்களும் களமிறங்கி மூதாட்டியை தேடி மூதாட்டியின் உடலை கைப்பற்றி அவர்களின் பாராட்டுதல்களை பெற்றது பெருமையாக இருந்தது.
எங்கள் பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லை என்பதற்காக போராட்டங்கள் நடத்தியுள்ளோம். கட்டிடங்கள் போதுமான அளவு இல்லாமல் மரத்தடியில் பாடம் நடத்தப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் புதிய கட்டிடங்கள் தேவை என்பதை உணர்ந்து அதற்காக நிர்வாகத்தினருடன் போராடியும் பேச்சு வார்த்தை நடத்தியும் உள்ளோம். பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது எங்கள் பள்ளி உயர்நிலை பள்ளியாக மட்டுமே இருந்தது. அதன் பின்னர் மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. எனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி பெற்றவுடன் அதே பள்ளியிலேயே பதினோராம் வகுப்பு (+1) தொடரும் வாய்ப்பு கிட்டியது. இருப்பினும் சீனியர் மாணவர்கள் என்பதால் பொறுப்புகளும் அதிகம் எங்களுக்கு வழங்கப்பட்டது. பள்ளி தூய்மை சுகாதாரம் போன்றவற்றில் எண்களின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. எது செய்வதாக இருந்தாலும் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் எங்களிடம் கலந்து ஆலோசிக்க ஆரம்பித்தார்கள்.
பள்ளி வளர்ச்சிப்பணிகளில் எங்களுடைய பங்கு இன்றியமையாதது என எங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. எங்கள் வகுப்பை சேர்ந்த ஒருவரை பள்ளி மாணவர் தலைவனாக நியமித்தனர்.
அந்த கால கட்டத்தில் என்னுடன் படித்த ஒரு மாணவன் பள்ளிக்கு வரும் பொது லாரி மோதி இறந்தான். கூடப்படிக்கும் மாணவனின் இழப்பு என்பது அப்போதைய பருவத்தில் மிகவும் துக்ககரமாகவே தோன்றியது. அப்போதெல்லாம் விபத்து என்பது ரொம்ப அரிதாக நடக்கக்கூடிய காலம் நெஞ்சை விட்டு நீங்காத அந்த சோகத்தை இப்போது நினைத்தாலும் வருத்தமுறுவேன்.
பதினொன்றாம் வகுப்பு முடிந்து பன்னிரண்டாம் வகுப்பு சென்ற காலத்தில் பொதுத்தேர்வு எழுத வேண்டிய வருடத்தில் கூட எங்களின் போதுச்சேவையும் பொறுப்புகளும் குறைக்கப் படவில்லை. அப்போது எங்கள் பள்ளியின் நிறுவனர் இயற்கை எய்தினார். அன்றைய தினம் முழுவதும் நாங்கள் அவர் வீட்டில் இருந்து ஈமக்கிரியைகள் வரை நின்று பிறகு வீடு திரும்பினோம்.
ஒருமுறை பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் எங்கள் வகுப்பறை வாசலில் நின்று விசில் அடித்துவிட்டு ஓட நாங்கள் தான் செய்தோம் என்று எங்கள் அனைவரையும் தலைமை ஆசிரியர் அழைத்து விசாரணை செய்தது மறக்கமுடியாத ஒன்று.
எவ்வளவுதான் வாழ்க்கையில் முன்னேறியிருந்தாலும் பல தடைகளை தாண்டி வந்திருந்தாலும் பள்ளி பருவத்தில் நடந்த நினைவுகளை யாராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது..
பொது சேவையானாலும் மனமுவந்து நண்பர்களுடன் சேவை செய்யும் அந்த நாள் வாழ்வில் மறக்கமுடியாத நாள்.
பள்ளிப்பருவம் என்பது மீண்டும் ஒருமுறை வராத ஒன்று.
எத்தனையோ மகிழ்ச்சிகளை வாழ்வில் அனுபவித்திருக்கலாம்.
எத்தனையோ சுக துக்கங்களை எதிர்கொண்டிருக்கலாம். வறுமை, பசி, பட்டினி, சோகம் என்று எது இருந்தாலும் பழைய பள்ளி நினைவுகளை நினைவு கூறும்போது இவை அனைத்தும் மறந்து
ஒரு மகிழ்ச்சியின் சாயல் அனைவரின் மனத்திலும் வந்து போவது தானே உண்மை. மிகவும் வயதான ஒரு வயோதிகரிடம் கூட தன் பாலசிநேகிதனை காணும்போது ஏற்படும் சந்தோஷத்தை நாம் கண்கூடாக காணலாம். அப்படிப்பட்ட இந்த பள்ளிப்பருவம் இனி கிடைக்குமா. ஆரம்பத்தில் பயத்துடன் ஆரம்பித்த என் பள்ளி வாழ்க்கை பொதுத்தேர்வு முடிந்து பள்ளியை விட்டு வரும் போது எனது சக மாணவர்களுடன் விடை பெறும்போது கண்கள் குளமானது. இனி வருமா அந்த பொற்காலம்! வாழ்வில் மறக்கமுடியாத இனிய நாட்கள். அந்த பருவம் விட்டு அடுத்த பருவம் ஏன் வந்ததோ என்று இன்று வரை ஏங்கிய காலம்.
அந்த வயதிலேயே இருந்திருக்கலாமே என்று ஒவ்வொரு மனிதனும் ஏங்குவது இயற்கையே. வறுமை, பசி, பட்டினி, சுகம்,துக்கம் என்ற எதையுமே பெரிதாக நினைக்காத பள்ளிப்பருவம் இனி வரப்போவதும் இல்லை. அது போன்ற ஒரு மகிழ்ச்சி பொங்கும் நாளை நாம் வாழ்வில் இனி அடையப்போவதும் இல்லை. மலரும் நினைவுகளாய் நம் மகிழ்ச்சியை நினைவு கூற பள்ளிபருவம் ஒரு நினைவுச்சின்னம்.
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”