Page 1 of 1

அன்னமயகோசம்

Posted: Sun Dec 15, 2019 10:47 am
by marmayogi
சுவாமி சிவானந்த பரமஹம்சர் அருளுரை;

சுவாமி! தேகம் அன்னமயகோசம் என்றும் அதனால் அன்னம் புசித்தாலே ஜீவித்திருக்க முடியும் என்றும், தேகம் அன்னத்தை கொண்டு போஷிப்பதாகும் என்றும் சொல்கின்றனர்.

அன்னம் என்பது என்னவென்றாகும் நீர் கருதி இருக்கிறீர்?
அன்னம் என்பது ஏதொன்றைப் புசிக்கிறோமோ,குடிக்கிறோமோ அவையாவும் விசேஷமாக சாதமும் ஆகும்.

இவற்றை மட்டும் புசிப்பதனாலோ,குடிப்பதனாலோ ஜீவித்திருப்பதற்கு முடியுமா?

ஆம், முடியும்.

எனில் உலகில் இதுவரை யாரும் செத்துப் போனதில்லையா?

ஏராளமாகச் செத்துப் போயிருக்கிறார்கள்.

அதென்ன காரணம்?
"அன்னம் புசித்தாலே ஜீவித்திருப்பார்"என்று நீரே சொல்கிறீர்.எனில் செத்தவர் எல்லாம் நீர் சொன்ன அன்னத்தைப் புசிக்காதவர் ஆவாரோ?

அவரெல்லாம் புசித்தவரேயாவார்.

அதெப்படியாகும்? "அன்னம் புசித்தாலே ஜீவித்திருப்பார்" என்றும் அன்னத்தை கொண்டு தான் தேகத்தை போஷிப்பிக்கிற தென்றும் நீர் சொன்னீர் அல்லவா? அப்படி செய்திருந்தால் அவர் செத்துப் போவதற்கு காரணமென்ன?

ஆயுள் குறைந்து போனதால்.

ஆயுள் குறைந்து போவதென்று சொல்வது மிகவும் தப்பிதமாகும்.

எனில் உலகத்தில் அன்னத்தைப் புசிப்பதில்லை.

அன்னத்தைக் கொண்டே ஜீவித்திருக்க முடியும் என்பதற்கு சந்தேகமில்லை.

ஆனால் அன்னத்தை நாம் அறிவதில்லை.

அன்னம் என்பது அசனம்.

அசனம் என்றால் அசுவாயிருக்கின்ற பிராணனை அயனம் செய்கிறது.

அயனம் என்றால் தடுத்து நிறுத்துதல்.

அதாவது தன்னுள்ளிலுள்ள பிராணனை வெளியினுள் விடாமல் தன் உள்வழியே பிரம்மரந்திரம் வரை நேரே கொண்டு போகின்றதாகும்.

அந்த பிராணன் ஜீவசக்தியாய் இருக்கின்ற வாயு.

அந்த ஜீவன் போனால் பிணம்.

அந்த பிணத்திற்கு ஏதேனும் புசிப்பதற்கு முடியுமோ? முடிவதில்லை.

காரணமென்ன?

ஜீவசக்தியாகிய வாயு, அசனம் இல்லாததால்.

அதல்லாமல் ஏறக்குறைய ஏழெட்டு நாள் வரை சோறு முதலியவை புசிக்காதிருந்தால் ஜீவன் இல்லாமற் போகுமா?

இல்லை.

அதல்லாமல் ஒரு நாள் பூராவும் தாகத்திற்கு தண்ணீருங்கூட குடிக்காமல் இருந்தால் செத்துப் போவோமா?

இல்லை?

எனில் வாயு ஒரு நிமிஷ நேரம் நமக்குக் கிடைக்காமல் இருந்தால் என்னவாய் தீருவோம்?

செத்துப் போவோம்.

அப்பொழுது நமக்கு ஆகாரமாய் இருப்பது எது?

வாயு

அதனால் தான் அன்னமயம் அதாவது அன்னத்தினால் போஷிப்பிக்கின்றது அதாவது வளர்த்துவது அன்னமயம் என்றும்,

அன்னமயத்திலிருந்து உண்டானது சைதன்னியம் என்றும், அந்தச் சைதன்னியத்தால் அதாவது தேஜஸ்ஸினால் உண்டானது உலகம் என்றும் சொல்வது.

அதனால் இக்காணுகின்ற உலகம் எதனுடைய சைதன்னியமாகும்?

வாயுவினுடைய சைதன்னியமாகும்.

அதனால் ஜீவசக்தியாய் இருக்கின்ற வாயுவாகும் அன்னம்.

அந்த வாயுவை பக்ஷித்தால்(உட்கொண்டால்) மட்டுமே ஜீவித்திருக்க முடிகிறது.

அதனால் தான் அன்னத்தால் போஷிப்பிப்பதாகும் தேகமென்று சொல்வது.

ஆகையால் அன்னமாய் இருக்கின்ற அந்த வாயுவை நிறைத்து பூரிப்பிக்க வேண்டும்.

அவ்விதம் செய்தால் செத்துப் போக மாட்டோம்.