அண்ட பிண்ட தத்துவமும் மருத்துவ விளக்கமும்

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

அண்ட பிண்ட தத்துவமும் மருத்துவ விளக்கமும்

Post by ஆதித்தன் » Wed Mar 13, 2019 6:29 pm

பஞ்சபூத தத்துவம்:
அண்டத்தையும் பிண்டத்தையும் ஒப்புநோக்கி விளங்கிக் கொண்ட மெய்ஞானிகள் எடுத்துகூறிய ஆதி தத்துவம், பஞ்சபூதத் தத்துவம் ஆகும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மெய்ஞானிகளால் ஒழுங்குபடுத்தி முழுமைப்படுத்தி தொகுத்து தத்துவங்களாகவும் விதிகளாகவும் வழங்கிய இவ் பஞ்சபூதத் தத்துவம் அனைத்து வகையான பண்டைய மரபுவழி மருத்துவங்களிலும் கடைப்பிடிக்கப்படுகின்றன. அக்குபங்சர் மருத்துவத்திலும் பஞ்சபூதத் தத்துவமே அடிப்படையாக அமைந்துள்ளது.

பஞ்சபூதங்கள்:
ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகிய ஐந்தும் பஞ்ச பூதங்கள் ஆகும். அக்குபங்சர் மருத்துவம், ஆகாயத்தினை மரம் என அழைக்கிறது.

அண்டமும் பிண்டமும் பஞ்சபூதங்களின் பிரிக்க முடியா கலந்த மயக்கம் ஆகும். பஞ்சபூத சக்திகளின் இயக்கமே உலகின் இயக்கமாகவும் உடலின் இயக்கமாகவும் அமைந்துள்ளது. உலகின் இயக்கமும் உடலின் இயக்கமும் ஒழுங்கமைவோடு கூடிய ஒத்திசைவான தன்மையில் இருப்பதற்கு பஞ்சபூதங்களின் இயல்பும் இயக்கமுமே காராணம்.

தொன்மையான மரபுவழியாக பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்திய முழுமையான மருத்துவங்கள் நோயறிதல் & சிகிச்சை என அனைத்துக் கூறுகளுமே பஞ்சபூதத் தத்துவத்தின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளன. பஞ்சபூதங்களின் சீரற்ற இயல்பு உடலில் தொந்தரவுகளை ஏற்படுத்துகின்றன, அதனை சீர் செய்தால், நோய்களும் குணமடைகிறது.

பஞ்சபூதங்கள் பற்றிய தகவல்கள் பழமையான தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் நிறைந்து கிடக்கின்றன. இவை அக்குபங்சர் மருத்துவ முறையில் முழுமையாக விளக்கம் பெறுகிறது.

இலக்கிய பயன்பாடு:
பஞ்சபூதங்கள் என அழைக்கப்படும் நீர்,நிலம்,நெருப்பு,காற்று,ஆகாயம் ஆகிய ஐந்து தன்மைகள் ஒன்றிணைந்தே இப்பிரபஞ்சம் தோன்றியுள்ளது. கரு நிலையில் உள்ள உண்மை சக்தி தன்னை வெளிப்படுத்துவதற்காக பஞ்சபூதங்களாக உருமாறுகிறது. இதன் கலவை மாறின் புதிய புதிய பிறப்புகள் தோன்றுகிறது, என ஒளவையார் தன் பாடலில் கூறியுள்ளார்.
"பரமாய சக்தியுள் பஞ்சமா பூதம்
தரமாறில் தோன்றும் பிறப்பு" - ஒளவையார்.

தமிழின் பழம்பெரும் நூலான தொல்காப்பியம் பஞ்சபூதங்களை குறிப்பிட்டுள்ள பாடல்,
"நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்" -பொருளதிகாரம்-635

திருமூலர் தன்பாடலில்,
"அண்டத்திலுள்ளதே பிண்டம் பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே அறிந்துதான் பார்க்கும் போது" என குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சபூத சுழற்சி:
பஞ்சபூதத் தத்துவத்தின் அடிப்படையில் உயிர்சக்தியின் ஓட்டத்தையும், உள்ளுறுப்புகளின் இயக்கத்தையும் கொண்டு, நெருப்பு, நிலம், காற்று, நீர், மரம் ஆகிய பூதங்களை மூன்றுவித சுழற்சி இயக்கமாக வகுத்துள்ளனர், அவை, 1. ஆக்கச் சுழற்சி -Shen Cycle . 2. கட்டாப்பாட்டு சுழற்சி (Ko-Cycle), மற்றும் 3.அழிக்கும் சுழற்சி.

ஆக்கச் சுழற்சி:
Image
ஆக்கச் சுழற்சி என்பது உருவாக்கத்திற்கு துணைபுரியும் தாய்மை சுழற்சி ஆகும். பஞ்ச பூதங்களில் ஒர் மூலகம்(பூதம்) மற்றொரு மூலகத்திலிருந்து உருவாகி, அது வேறொரு மூலகம் உருவாக துணையாக இருப்பதன் மூலம் ஒர் மூலகம் ஒன்றிலிருந்து உருவாகுவதும் ஒன்றை உருவாக்குவதும் என சுழற்சியாக நடைபெறுகிறது. அதாவது, நெருப்பு மூலகம் நிலம் மூலகத்தினை உருவாக்குகிறது > நிலம் மூலகம் காற்று மூலகத்தினை உருவாக்குகிறது > காற்று மூலகம் நீர் மூலகத்தினை உருவாக்குகிறது > நீர் மூலகம் மரம் மூலகத்தினை உருவாக்குகிறது > மரம் மூலகம் நெருப்பு மூலகத்தினை உருவாக்குகிறது > நெருப்பு மூலகம் நிலம் மூலகத்தினை உருவாக்குகிறது என சுழற்சியாக நடைபெறுகிறது.

இதனையே நிலம் மூலகம் நெருப்பு மூலகத்திலிருந்து உருவாகுகிறது, நிலம் மூலகம் காற்று மூலகத்தினை உருவாக்குகிறது எனப் பார்த்தால், நிலம் மூலகம் இரண்டு மூலகத்துடன் சேயாகவும் தாயாகவும் இரட்டைத்தன்மையுடன் ஆக்க சுழற்சியில் தொடர்பில் இருப்பதனை உணரலாம்.

கட்டுப்பாட்டுச் சுழற்சி:

ஒர் மூலகம் சரியான அளவில் சக்தியினைக் கொண்டிருக்க வேண்டுமானால், மீறல்கள் ஏற்படும் பொழுது கட்டுப்படுத்தவும் வேண்டும். அவ்வாறு, ஒர் மூலகம் தான் உருவாக்கும் சேய் மூலகத்தின் சக்தியினை பாதுகாக்க, சேயினால் உருவாகும் மற்றொரு மூலகத்தின் மீறல்களை கட்டுப்படுத்துகிறது. இவ்வாறு ஒவ்வொரு மூலகமும் தான் உருவாக்கும் மூலகத்தின் சேயினை கட்டுப்படுத்துவது, கட்டுப்பாட்டுச் சுழற்சி ஆகும்.

நெருப்பு மூலகம் நிலம் மூலகத்தினை உருவாக்கி, நிலம் மூலகம் உருவாக்கும் காற்று மூலகத்தினை கட்டுப்படுத்தி நிலம் மூலகத்தினை பாதுகாக்கிறது.

நிலம் மூலகம் காற்று மூலகத்தினை உருவாக்கி, காற்று மூலகம் உருவாக்கும் நீர் மூலகத்தினை கட்டுப்படுத்தி காற்று மூலகத்தினை பாதுகாக்கிறது.

காற்று மூலகம் நீர் மூலகத்தினை உருவாக்கி, நீர் மூலகம் உருவாக்கும் மரம் மூலகத்தினை கட்டுப்படுத்தி நீர் மூலகத்தினை பாதுகாக்கிறது.

நீர் மூலகம் மரம் மூலகத்தினை உருவாக்கி, மரம் மூலகம் உருவாக்கும் நெருப்பு மூலகத்தினை கட்டுப்படுத்தி மரம் மூலகத்தினை பாதுகாக்கிறது.

மரம் மூலகம் நெருப்பு மூலகத்தினை உருவாக்கி, நெருப்பு மூலகம் உருவாக்கும் நிலம் மூலகத்தினை கட்டுப்படுத்தி நெருப்பு மூலகத்தினை பாதுகாக்கிறது.
Image
அதாவது, நெருப்பு மூலகம், காற்று மூலகத்தினை கட்டுப்படுத்துகிறது > காற்று மூலகம், மரம் மூலகத்தினை கட்டுப்படுத்துகிறது > மரம் மூலகம், நிலம் மூலகத்தினை கட்டுப்படுத்துகிறது > நிலம் மூலகம் நீர் மூலகத்தினை கட்டுப்படுத்துகிறது > நீர் மூலகம், நெருப்பு மூலகத்தினை கட்டுப்படுத்துகிறது > நெருப்பு மூலகம், காற்று மூலகத்தினை கட்டுப்படுத்துகிறது என்றவாறு பஞ்சபூதங்களுக்கிடையே கட்டுப்பாட்டு சுழற்சி அமைகிறது.
Image
அழிக்கும் சுழற்சி:
இயல்பான ஆக்கச் சுழற்சி மற்றும் கட்டுப்பாட்டு சுழற்சியில் ஏற்படும் எதிர்வினை அழிக்கும் சுழற்சிக்கு காரணமாகிறது. ஆக்கச் சுழற்சியில் ஏற்படும் எதிர்வினைச் சீர்கேடு 1.ஆக்க எதிர்வினைச் சுழற்சி என்றும் கட்டுப்பாட்டு சுழற்சியில் ஏற்படும் எதிர்வினைச் சீர்கேடு 2.கட்டுப்பாட்டு எதிர்வினைச் சுழற்சி என்றும் அழைக்கப்படுகிறது.

எதிர்வினைச் சுற்றின் செயல்பாடே மூலகங்களின் சீர்கேடுக்கு காரணமாக அமைவதுடன் உடலின் தொந்தரவுக்கும் காரணம் ஆகுகின்றன.

ஆக்க எதிர்வினைச் சுழற்சி:
நெருப்பு மரத்தினை அழிக்கிறது > மரம் நீரை அழிக்கிறது > நீர் காற்றினை அழிக்கிறது > காற்று நிலத்தினை அழிக்கிறது > நிலம் நெருப்பை அழிக்கிறது என சுழற்சியாக ஆக்கச் சுழற்சி சீர்கேடு அடையும் பொழுது ஆக்க எதிர்வினைச் சுழற்சி நடக்கிறது.

கட்டுப்பாட்டு எதிர்வினைச் சுழற்சி:
நெருப்பு தன்னை கட்டுப்படுத்தும் நீரைக் கட்டுப்படுத்த முயல்கிறது > நீர் தன்னை கட்டுப்படுத்தும் நிலத்தை கட்டுப்படுத்த முயல்கிறது > நிலம் தன்னைக் கட்டுப்படுத்தும் மரத்தினை கட்டுப்படுத்த முயல்கிறது > மரம் தன்னைக் கட்டுப்படுத்தும் காற்றை கட்டுப்படுத்த முயல்கிறது > காற்று தன்னை கட்டுப்படுத்தும் நெருப்பை கட்டுப்படுத்த முயல்கிறது என கட்டுப்பாட்டுச் சுழற்சி சீர்கேடு அடையும் பொழுது கட்டுப்பாட்டு எதிர்வினைச் சுழற்சி நடக்கிறது.

பஞ்சபூத மூலகங்களின் தொடர்பு:
ஒவ்வொரு பொருளிலும் பஞ்சபூதங்கள் உள்ளன, அதைப்போல் அவை தனித்தனி மூலகங்களாக இருந்தாலும் அவற்றிலும் மற்ற நான்கு மூலகங்களும் கலந்தே உள்ளன. நம் உடல் பஞ்சபூதங்களால் ஆனதுபோல், ஒவ்வொரு உறுப்பும் பஞ்சபூதங்களால் ஆனவைதான். ஆனால், நெருப்பு மூலகத்தில், நெருப்புத் தன்மை மேலோங்கியும் நிலம்,காற்று,நீர்,மரம் ஆகிய மூலகங்கள் சிறிய அளவில் மறைவாக உள்ளன.

ஐம்பூதங்களின் இயக்கமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பாய், ஒன்று மற்ற நான்கு மூலகங்களுடன் தொடர்பு கொண்டதாகவே அமைந்துள்ளது.

உதாரணத்திற்கு, நெருப்பு என்ற மூலகம் மற்ற நான்கு மூலகத்துடன் கொண்டுள்ள தொடர்பு,
நெருப்பு, மரம் மூலகத்தால் உருவாக்கப்படுகிறது.
நெருப்பு, நிலம் மூலகத்தை உருவாக்குகிறது.
நெருப்பு, நீரால் கட்டுப்படுத்தப்படுகிறது.
நெருப்பு, காற்றைக் கட்டுப்படுத்துகிறது.

இவ்வாறு, ஒவ்வொரு பூதமும் மற்ற பூதங்களுடன் ஒருங்கிணைந்த பஞ்சபூத தத்துவ இயக்கமே உடல் உறுப்புகளின் அடிப்படை இயல்பிலும் உள்ளது.

பஞ்சபூதங்களின் கலப்பு:
ஒவ்வொரு மூலகமும் ஐம்பூதங்களின் கலவையாக அமைந்துள்ளது. அதில் அந்த குறிப்பிட்ட மூலகத்தின் தன்மை வெளிப்படையாக தன்மை மிகுந்தும், மற்ற மூலகங்கள் மறைவாக மிகச் சிறிய அளவில் என அந்தந்த மூலகங்களுக்கு ஏற்ப கலவையாக உள்ளது. ஒர் பூதத்தின் குறைபாடு அந்த மூலகத்தினையும் பாதிக்கிறது. உதாரணத்திற்கு நிலம் மூலகத்தில் வெப்பம் அதிகரித்தால் வறண்ட பாலை நிலமாகவும், நீர் அதிகரித்தால் சகதி நிலமாகவும் என இயல்புத் தன்மையில் சீர்கேடு அடைகிறது. இதைப்போல், நீர் மூலகத்தில் வெப்பம் மூலகம் அதிகரித்தால் சுடு நீராக மாறுகிறது. இவ்வாறு ஒவ்வொரு மூலகமும் தன் அளவில் மீறும் பொழுது மூலகத்தின் இயல்புத்தன்மை சீர்கெடுகிறது.

பஞ்சபூதங்களின் கலப்பில் உள்ள மூலகத்தின் சீர்கேட்டினை அறிந்தால், அதனை சீர்செய்யும் இயல்புச் சுழற்சியின் தத்துவத்தின்படி சீர்செய்யலாம் என்பதனை அக்குபங்சர் மருத்துவம் விரிவாக விளக்குகிறது.

பஞ்சபூதமும் உடல் உள்ளுறுப்புகளும்:
பஞ்சபூதத் தத்துவத்தின்படி அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது. பஞ்சபூதங்களாகிய நெருப்பு, நிலம், காற்று, நீர் மற்றும் மரம் ஆகிய தன்மைகள் மற்றும் பணிகள் உடல் உள்ளுறுப்புகளிலும் ஒத்துப்போகிறது.

மனித உடலில் உள்ள முக்கிய 10 உள்ளுறுப்புகளும் அதன் மூலகத்தன்மையும்
மரம் - குளிர்ச்சியான கல்லீரல் & வெப்பமான பித்தப்பை
நெருப்பு - குளிர்ச்சியான இதயம் & வெப்பமான சிறுகுடல்
நிலம் - குளிர்ச்சியான மண்ணீரல் & வெப்பமான இரைப்பை
காற்று - குளிர்ச்சியான நுரையீரல் & வெப்பமான பெருங்குடல்
நீர் - குளிர்ச்சியான சிறுநீரகம் & வெப்பமான சிறுநீர்ப்பை

ஒவ்வொரு மூலகமும் இரண்டு உள்ளுறுப்பினை தன் தன்மையை மிகையாகக் கொண்டுள்ளன. அதில் ஒன்று குளிர்ச்சி உறுப்பாகவும், மற்றொன்று வெப்ப உறுப்பாகவும் உள்ளது. குளிர்ச்சி உறுப்புகள் ஆக்கச் சுழற்சியாகவும், வெப்ப உறுப்புகள் கட்டுப்பாட்டுச் சுழற்சியாகவும் இயங்குகின்றன. இவை உறுப்புகளால் பிரிக்கப்பட்டாலும், அவற்றுள்ளும் எதிர்தன்மை சிறிய அளவில் அமைந்துள்ளது. அதாவது குளிர்ச்சிக்குள் வெப்பமும், வெப்பத்திற்குள் குளிர்ச்சியும் உள்ளன. அதைப்போல், பஞ்சபூதத் தன்மையும் அதன் இயக்கமும் ஒவ்வொரு உறுப்பிலும் உள்ளது.

ஆக்கச் சுழற்சியும் கட்டுப்பாட்டுச் சுழற்சியும் ஒருங்கிணைந்த இயக்கமே பஞ்சபூத இயக்கம் ஆகும். ஒவ்வொரு மூலகமும் முழுமையாக இயங்க பிற மூலகங்களின் பங்கும் அவசியம் ஆகிறது.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”