Page 1 of 1

தன்னம்பிக்கை

Posted: Sun Mar 18, 2012 8:14 pm
by umajana1950
தன்னம்பிக்கை ஏற்பட நமக்கு கிடைத்திருப்பது இது போன்றோரின் சாதனைகள் தான். இது போன்ற விஷயங்களை கேள்விப்பட்டு, நாமும் கடைப் பிடிக்க, முயற்சி செய்ய ஆரம்பித்தோமானால் வெற்றி தொட்டுவிடும் தூரம் தான். முயற்சிப்போம், வெற்றி பெறுவோம்.



இவர் ஒரு சகலகலா வல்லவர். விளம்பரங்களுக்கு வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட். தொழில்முறை பாடகர். சாஸ்திரிய சங்கீதத்தில் பாண்டித்யம் உண்டு. தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என ஆயிரம் பாடல்களுக்கு எந்த நோட்ஸும் இல்லாமல் பாடுகிறார். சங்கீதம் கற்றிருக்கிறார். கீபோர்ட் வாசிக்கிறார். மிமிக்ரி செய்கிறார். ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தருகிறார். கார்ப்பரேட் நிறுவன பணியாளர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் சுயமுன்னேற்ற உரைகள் நிகழ்த்துகிறார். வளர்ந்து வரும் ஒரு மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார். இருநூறு பயிற்சியாளர்கள் இவரிடம் பணிபுரிகிறார்கள். ஒரு வருடத்துக்கு குறைந்தது பதினைந்தாயிரம் மாணவர்களை சந்தித்து, அவர்களின் முன்னேற்றத்துக்கு கிரியா ஊக்கியாக செயல்படுகிறார்.

சாதாரண குடும்பத்தில் பிறந்த இளங்கோவுக்கு கல்வி ஒன்றும் சுலபமானதாக இல்லை. கடும் சிரமங்களுக்கு இடையில் பத்தாம் வகுப்பில் ஐநூறுக்கு நானூற்றி எண்பத்தி இரண்டு மதிப்பெண்கள் வாங்கினார். சென்னை மாவட்டத்திலேயே அப்போது முதலிடம். +2வில் அக்கவுண்டன்ஸியில் செண்டம். பின்னர் லயோலாவில் ஆங்கிலம் இளங்கலை. பல்கலைக்கழகத்தில் தங்க மெடல் வாங்கினார். முதுகலையில் ஒலியியல் (Phoenetics) குறித்துப் படித்தார். தமிழ்நாடளவில் தங்க மெடல். 1994ல் கல்லூரியை விட்டு வெளிவந்தபோது சிறந்த மாணவராக லயோலா கல்லூரி நிர்வாகம் விருதளித்துப் பாராட்டியது. ‘ஆங்கிலத்தை எப்படி கற்றுத் தருவது?’ என்ற அரிதான தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு எம்.ஃபில். முடித்தார்.

பின்னர் சி.பி.எஸ்.இ. பள்ளி ஒன்றில் ஆசிரியப்பணி. வாரயிறுதிகளில் மற்ற ஆசிரியர்களுக்கு கற்றுத்தருவது குறித்து பட்டறைகள் நிகழ்த்துவார். சில கால ஆசிரியப் பணிக்குப் பிறகு குருநானக் கல்லூரியில் விரிவுரையாளர். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் பணி... இப்போது, ஏஸ் சாஃப்ட் ஸ்கில்ஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், நிறுவன ஊழியர்களுக்கும் பயிற்சியளிக்கும் பணி...

இவ்வளவு அனுபவங்களும் முப்பத்தைந்து வயதுக்குள்ளாகவே இளங்கோவுக்கு சாத்தியமாகியிருக்கிறது. ‘நல்ல கல்வி கற்ற யார் வேண்டுமானாலும் இதையெல்லாம் செய்யமுடியுமே?’ என்ற கேள்வியை நீங்கள் கேட்க வருவது புரிகிறது. இளங்கோவுக்கு பிறவியிலேயே பார்வை இல்லை.

“அதிர்ஷ்டவசமாக எனக்கு பிறவியிலேயே பார்வை இல்லை என்று சொல்லுங்கள்!” என்று திருத்துகிறார் இளங்கோ. பத்தாவது வகுப்பு வரை மட்டுமே பார்வையற்றவர்களுக்கான சிறப்புப் பள்ளியில் படித்தவர், மற்ற அனைத்து வெற்றிகளையும், நார்மலானவர்களுடனேயே போட்டியிட்டு வென்றிருக்கிறார். இப்போது யோசித்துப் பாருங்கள். பார்வை சவால் கொண்ட ஒருவர் +2வில் பார்வை அத்தியாவசியப்படும் பாடமான அக்கவுண்டன்ஸியில் நூற்றுக்கு நூறு வாங்குவது சாதனைதானே? அதுவும் பார்வையுள்ள மாணவர்களோடு படித்து பார்வை சவால் கொண்ட ஒருவர் வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட்டாக பணிபுரிவது, அனேகமாக உலகிலேயே இளங்கோ ஒருவராக மட்டுமே இருக்கமுடியும். இந்த நிமிடம் வரை வேறு யாரும் இந்தப் போட்டியில் இல்லை. இவ்வகையில் இளங்கோவின் பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்துக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
Image

Re: தன்னம்பிக்கை

Posted: Sun Mar 18, 2012 8:24 pm
by muthulakshmi123
பாராட்டுக்கள் இளங்கோ அவர் முன்னேற்றம் மலைக்க வைக்கிறது. பார்வையுள்ளவர்கள் பிடிக்காத இடத்தை எல்லாம் பிடித்து விட்டார்..

Re: தன்னம்பிக்கை

Posted: Sun Mar 18, 2012 8:25 pm
by muthulakshmi123
இளங்கோ மையில் ஐடி தெரிந்தால் நம் படுகை நண்பர்கள் அனைவரும் அவரை பாராட்டலாமே/