Page 1 of 1

கண் பார்வை இல்லா பயணி...!கருணை பார்வை இல்லா ஓட்டுனர்...!

Posted: Fri Mar 17, 2017 10:20 pm
by nilashni
ஒரு நாள் நான் பேருந்தில் பயணம் செய்த போது மனதை உருக்கும் விதமாக நடந்த உண்மை சம்பவம் இது.

கண் பார்வை இல்லாத நபர் ஒருவர் பேருந்தில் ஏறினார். பொதுவாாக ஆண்கள் பேருந்தின் பின்பக்கமாக ஏறுவது வழக்கம். ஆனால், அவர் பேருந்தின் முன் பக்கமாக ஏறி டிரைவரின்(ஓட்டுனரின்) அருகில் போய் நின்று கொண்டிருந்தார். ஒவ்வொரு ஸ்டாப்(நிறுத்தம்) வரும்போதும், 1, 2, 3 என எண்ணி கொண்டே இருந்தார். குறிப்பிட்ட இடம் வந்ததும், டிரைவரின் மிக அருகில் சென்று.., சார் எனக்கு கண் தெரியாது . ஆனால் நான் இறங்க வேண்டிய இடம் வரப்போகிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒரு மரக்கடை வரும். அதில் கொஞ்சம் பஸ்ஸை(பேருந்தை) நிறுத்துவீர்களா என்று கேட்டார். ஏனென்றால் அவர் இறங்க வேண்டிய மரக்கடை பக்கம் ஸ்டாப் கிடையாது. ஆனால் மரக்கடை பக்கம் நிறுத்தினால் தான், அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு அவரால் சரியாக செல்ல முடியும். மரக்கடையில் இருந்து, தான் செல்ல வேண்டிய இடத்திற்கு, இத்தனை ஸ்டெப் நடக்க வேண்டும் என்று அவர் கணக்கு வைத்திருந்தார். அதனால் தான் டிரைவரிடம் மரக்கடை பக்கமாக வண்டியை நிறுத்துமாறு கேட்டார்.

ஆனால் அந்த மனிதாபிமானம் இல்லாத டிரைவர் அவருக்கு கூறிய பதில் என்னவென்று தெரியுமா?

கண்ட இடத்தில் எல்லாம் என்னால வண்டிய நிறுத்த முடியாது. உன் இஷ்டத்துக்கு வண்டிய நிறுத்த, உங்க அப்பாவா(உங்கப்பனா) வண்டி வாங்கி விட்டிருக்காரு. ஸ்டாப் எங்கேயோ, அங்க தான் வண்டியை நிறுத்துவேன் என்று சொல்லி கொண்டிருக்கும் போதே, கண் தெரியாதவர் இறங்க வேண்டிய மரக்கடை வந்தது. பஸ்ஸில் இருந்த பலரும், வண்டியை நிறுத்துமாறு டிரைவரிடம் கேட்டனர். கண் தெரியாதவரும் , சார் பிளீஸ் சார் வண்டியை நிறுத்துங்க என்று கெஞ்சினார். ஆனால் டிரைவரோ, எதையும் காதில் வாங்காமல் வேகமாக வண்டியை ஓட்டி கொண்டே இருந்தார்.

பேருந்தில் பயணம் செய்த கிறிஸ்தவ கன்னியாஸ்திரி ஒருவர் எழுந்து நின்று, உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா? வண்டியை நிறுத்துங்க என்று உரக்க கத்தினார். குறிப்பிட்ட தூரம் சென்ற பிறகு, ஒரு ஸ்டாப்பில் வண்டியை நிறுத்தினார் டிரைவர்.
கண் தெரியாத நபர், இது எந்த இடம், இதிலிருந்து எப்படி செல்வது என புலம்பியவாறு, வழி தெரியாமல் திகைத்து கொண்டிருந்தார்.
அவரின் நிலைமையை புரிந்து கொண்ட கிறிஸ்தவ கன்னியாஸ்திரி அவரிடம், நானும் உங்களோடு வருகிறேன். நீங்கள் செல்ல வேண்டிய இடத்தில், உங்களை சேர்த்து விட்டு பின்பு நான் செல்கிறேன் என்று கூறி அழைத்து சென்றார். கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாத அந்த டிரைவரை அனைவரும் அவதூறாக பேசினர்.

எவ்வளவு டிராபிக்(வாகன நெரிசல்) ஆக இருந்தாலும் கூட, கண் தெரியாதவர்கள் சாலையில் சென்றால், ஒரு நிமிடம் வண்டியை நிறுத்தி, அவர்கள் சாலையை கடந்த பிறகு தன் வண்டியை ஓட்டி செல்லும் ஓட்டுனர்களின் மத்தியில் இப்படிப்பட்ட ஓட்டுனர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.