அவளும் வாழ்க்கையும்

படுகை அன்பர்களின் சொந்த கதைகள் மற்றும் தொடர்கதைப் படைப்புகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் வாழ்த்துகளையும் கூறி உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி நீங்கள் எழுதிய கதைகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

அவளும் வாழ்க்கையும்

Post by Aruntha » Sun Dec 01, 2013 11:12 am

Image

மாலை நேரம், மனதை மயக்கும் மஞ்சள் நிறமான பரந்து விரிந்த வானம், சில்லென்ற காற்று அவள் மெல்லிடையை வருடிச் சென்றது. அந்த சிறிய குளிர்காற்றையே தாங்க முடியாத அவள் தன் நெஞ்சோடு அணைத்திருந்த தன் செல்ல மகள் ஆஷாவை மேலும் இறுக நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். அக் குளிரினை தானும் உணர்ந்த அந்த பிஞ்சு நெஞ்சம் அந்த அணைப்புக்குள் அடைக்கலமானது. தன் அன்பு முத்தங்களை தன் தாயின் கன்னங்களில் ஆசையோடு பதித்தது. செல்ல மகளின் முத்த மழையில் நனைந்தவளின் நினைவுகள் அவளை பின்னோக்கி இழுத்துச் சென்றது.

அழகிய நந்தவனங்கள் நிறைந்த அந்த ஊரின் செல்வ செழிப்பு மிக்க பணக்காரர் சிவசங்கருக்கும் பார்வதிக்கும் பிறந்த செல்ல பொண்ணு தான் ஸ்ருதி. பாத்தவர்களை சுண்டி இழுக்கும் துரு துரு என்ற கருவழிகள், மூன்றாம் பிறையையே இவளை பார்த்து வடித்தது போன்ற பிறை போல அழகிய நெற்றி, தொட்டாளே சிவந்து விடும் கன்னங்கள், கொவ்வைப்பழம் போன்ற உதடுகள், உடுக்குப் போன்ற மெல்லிடை, அழகிற்கே அழகு சேர்க்கும் அடக்கமான பெண்ணழகு தான் அவள். கருமுகில் கூட்டத்தையே அவளின் உச்சந்தலையில் பொதித்து வைத்தது போன்ற நீண்ட கருங்குழல். பிரம்மனின் கற்பனைக்கே அளவில்லாத படைப்பு தான் அவள்.

பார்த்தவர்களை மறுநொடி திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு தேவதையான அவள் பணக்கார குடும்பத்தில் பிறந்தாலும் சாதாரணமான வாழ்க்கையே வாழ்ந்து வந்தாள். மணிக்கு ஒரு காரில் செல்ல கூடியளவுக்கு வசதி இருந்தும் தினமும் பாடசாலைக்கு தன் தோழிகளுடன் பஸ்ஸிலேயே செல்வாள். இதனால் சக தோழிகளுக்கு இவளை ரொம்ப பிடிக்கும். ஏழைகளுக்கு உதவுவதில் இவளுக்கு அலாதி பிரியம். குணத்தில் கோபுரமாக திகழ்ந்து எல்லார் மனதிலும் நிலைத்து நிற்கும் பெண்ணாக திகழ்ந்தாள்.

பள்ளி காலத்தில் பலருடன் தோழமையாக பழகிய இவளை தனக்கு சொந்தமாக்க பல இளைஞர்கள் போராடினர். அவர்களுக்கு முறையான விளக்கமளித்து காதலையும் நட்பையும் புரியவைத்து அவர்களை நல் வழிப்படுத்தினாள். இப்படியான சூழ்நிலையில் தான் அவளிற்கு சந்தோஷின் பழக்கம் ஏற்பட்டது. அளவான வசதியான குடும்பத்தில் பிறந்த அவன் அவளிடம் மிகவும் நட்பாக பழகினான். அவளின் நட்பை அவள் புனிதமாக நேசித்தாள்.

இப்படியே காலம் உருண்டோடி கொண்டிருந்த வேளையில் சந்தோஷ் அவளுடன் மட்டுமன்றி அவள் குடும்பத்தாருடனும் நல்ல நட்பாக பழகினான். அவள் குடும்பத்தில் அனைவரினதும் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானவன் ஆனான். அவர்கள் பிக்னிக் செல்லும் போதெல்லாம் அவனும் அவர்களுடன் சேர்ந்து எல்லா இடங்களும் செல்வான். அவர்கள் குடும்பத்தில் ஸ்ருதி மட்டுமே செல்லப் பெண் பிள்ளையாக இருந்தமையால் இவனது அன்பு அவர்களையும் ஈர்த்தது. அவனை தம் குடும்பத்தின் ஒருவர் போலவே எல்லாரும் நடத்தினார்கள். இதனால் அவனும் மிகவும் மகழ்வாக இருந்தான்.

இப்படியே அவர்களின் குடும்ப பாசம் பழக்கவழக்கம் எல்லாவற்றாலும் அவனுக்கு அவள் மேல் காதல் துளிர்க்க ஆரம்பித்தது. அவளிடம் தன் காதலை சொன்னான். நல்ல நண்பனிடம் இருந்து அதை சற்றும் எதிர்பார்க்காதவள் அவனிற்கு மறுப்பு தெரிவித்தாள். அவனோ அவள் மேல் பைத்தியமாக அன்பு வைத்திருந்தமையால் அவளை மறுபடியும் நெருடல் படுத்திக் கொண்டிருந்தான். அவளால் அவனை வெறுக்க முடியவில்லை. அதே நேரம் தன் வாழ்க்கையின் அவனை கணவனாக ஏற்க முடியாமல் இருந்தாள். அதற்கு காரணம் அவள் உயிரிலும் அதிகமாக நேசித்த அவள் பெற்றோர்கள். தன்னை பெற்று வளர்த்த தன் பெற்றோர்களே தன்னுடைய வாழ்க்கையையும் தீர்மானிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள்.

வாழ்க்கையில் தன் குழந்தை கருவிலே இருக்கும் போதே அப்பிள்ளை பிறந்து எப்படி வளர வேண்டும் என்று கற்பனைகளை வளர்த்து கொண்டிருக்கும் அம்மா, தனக்கென்று ஓர் குழந்தை கருவிலே உருவான செய்தி அறிந்தது முதல் தன் தொழிலை விரிவு படுத்தி குழந்தைக்காக இன்னும் உழைக்க வேண்டுமென்று கனவு காணும் அப்பா, குழந்தை பிறந்ததும் பாசத்தோடு உதிரத்தையே பாலாக ஊட்டும் அன்புத் தெய்வம் அம்மா, இப்படி தன் குடும்பத்தினை பற்றியே சிந்தித்தாள். இத்தனை பாசம் கொண்டிருந்த பெற்றவர்களை விட அவளுக்கு சந்தோஷின் பாசம் காதல் ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. கற்பனைகளை வளர்த்து தனக்காகவே வாழ்ந்து வரும் பெற்றவர்கள் ஆசையை நிறைவேற்றி அவர்கள் கை காட்டும் பையனையே மணம் புரியும் எண்ணம் அவளுக்கு புத்தி தெரிந்த காலம் முதல் மனதில் பதிந்து இருந்தது. அதனால் அவன் காதலை மறுக்க காரணம் இல்லாத போதும் தன் சம்மதத்தை தெரிவிக்காமல் இருந்தாள்.

அவனிடம் தன் சம்மதத்தை கூறாதவள் மறுநாளே தனது மாமன் மகளின் திருமணம் காரணமாக வெளியூர் சென்று இருந்தாள். அவளிற்கு தன் மாமன் வீடு செல்வது என்றாலே கொள்ளை பிரியம். காரணம் அவர் வீடு அழகிய மலைப் பிரதேசத்தில் இருந்தது. அங்கு சென்று சில் என்று குளிர்ந்திடும் அருவியில் குளிப்பது என்றால் அவளிற்கு கொள்ளை பிரியம். தன் ஒவ்வொரு கல்லூரி விடுமுறைக்கும் தவறாது அங்கு செல்வாள். குறைந்தது ஒரு வாரமாவது நின்று அந்த இயற்கை சூழலில் மனதை இலயிக்க விடுவாள்.

ஸ்ருதிக்கு கவிதை எழுதுவதென்றால் நன்றாக பிடிக்கும். அதற்கு ஏற்றால் போல் கடவுளும் அந்த கொடையை அவளுக்கு கொடுத்து இருக்கிறான். அந்த மலையடி வாரத்தின் சல சலக்கும் அருவியின் ஓசை, தேயிலை கொழுந்து பறிக்கும் பெண்களின் அழகு, இறப்பர் மரங்களில் இருந்து வடியும் இறப்பர் பால்களை சேகரியும் தொழிலாளர்கள், காலையின் அழகிய சூரிய உதயம், மாலையின் மஞ்சள் பொன் தட்டுப் போன்ற சூரியனின் அஸ்தமனம் இவை அனைத்தையுமே வைத்து பல கவிதைகள் எழுதி இருக்கிறாள். அவற்றிக்கு தேசிய ரீதியில் பரிசில்கள் கூட பெற்று இருக்கிறாள். இருந்தும் அவளிற்கு அந்த மலைச்சாரலில் மறக்க முடியாத சம்பவம் ஒன்று உள்ளது. அதை நினைத்தால் அவளுக்கு இன்றும் உடல் எல்லாம் நடுக்கம் எடுக்கும்.

ஆம் வேறு எதுவுமே இல்லை. அவள் இயற்கையை ரசித்த படி தேயிலை கொழுந்துகளிடையே வலம் வந்திருந்த பொழுது மலைப்பிரதேசத்தில் இருக்கும் இரத்தம் உறிஞ்சிக் குடிக்கும் அட்டை அவளை பதம் பார்த்தது தான். அவளின் வாழைத்தண்டு போன்ற கால்களில் தன் கைவரிசையை காட்டியது. ரோஜா பூ போன்ற அவளின் நிறத்தில் அந்த அட்டை கடித்த இடத்தின் அடையாளமே பார்க்க பயங்கரமாக இருந்திச்சு. நிறையவே இரத்தத்தை அவளிடம் இருந்து உறிஞ்சி குடித்து அவளை மயக்கமடைய செய்தது. அதன் பலன் ஒரு வாரம் அவள் பயங்கரமான காய்ச்சலில் பீடித்தது. அதை இன்று நினைத்தாலும் அவளுக்கு உயிர் போய் வரும். இருந்தும் அதன் பின்பு கூட அவள் இயற்கையை ரசிப்பதற்காக அங்கு செல்வதை விடவில்லை.

அங்கு திருமண விழாவில் சிறப்பாக பங்கு பற்றியதுடன் இயற்கையின் அழகையும் ரசித்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தாள். அவள் தன் கல்லூரி மற்றும் ஊரையே அந்த ஒரு வாரத்தில் மறந்து இருந்தாள் என்று சொல்லலாம். அந்தளவிற்கு இன்ப வெள்ளத்தில் மெய் மறந்திருந்தாள். மறு நாள் அவள் ஊரிற்கு செல்லும் நாள் வந்தது. அவளிற்கு நாளைய விடியலை நினைக்கவே மனசுக்கு பிடிக்கவில்லை.

காதல் வந்தால் இந்த உலகத்தில் அவள் மட்டும் தான் அழகியாக தெரிவாள் என்று கூறுவார்கள். காதலால் பித்து பிடித்தவர்கள் கூட உண்டு என்று சொல்லுவார்கள். பெற்று வளர்த்த பெற்றவர் இறந்தால் கூட கண்ணீர் விடும் உள்ளங்கள் காதலன், காதலி இறந்தால் மட்டும் ஏன் தற்கொலை செய்கிறார்கள். அப்படி என்ன தான் இந்த காதலில் உள்ளதோ என்று காதலை பற்றி அலட்சிய எண்ணம் கொண்டிருந்தவன் தான் சந்தோஷ். ஆனால் அவனே இன்று ஸ்ருதியின் மேல் கொண்ட காதலால் இந்த உலகத்தையே மறந்து அவளை மட்டுமே நினைத்து கொண்டிருந்தான். அவன் சூழ்நிலைக்கு ஏற்றது போலவே வானொலியில் ”இருபது வயது வரை என் பெற்றோரின் வசமிருந்தேன் இருபது நிமிடத்திலே நான் உன் வசம் ஆகி விட்டேன்” என்ற பாடல் ஒலித்தது. அத்தனை நாள் அலட்சியமாக பாத்த அந்த பாடலை இன்று ரசித்துக் கேட்டான். இருந்தும் அவனாலேயே தன்னை நம்ப முடியவில்லை. நானா இப்படி மாறி விட்டேன் என்று தன்னையே கேட்டுக்கொண்டான். இருந்தும் அவனால் ஸ்ருதியின் நினைவை மறக்க முடியவில்லை.

இவன் காதலை அவள் ஏற்காதமையால் அவனின் சந்தோசங்கள் எல்லாமே தொலைந்து போனது. அவனது மனது எதிலுமே ஒரு நிலைப்படுத்த முடியாது போனது. தினமும் காலையில் அவன் செய்யும் யோகாசனம் மற்றும் தியானம் எதையுமே செய்ய முடியாது போனது. கண்ணை மூடினாலேயே ஸ்ருதியின் முகம் தான் அவன் கண் முன்னே வந்து நின்றது. அத்தனை காலம் முதல் மாணவனாக வந்து கல்லூரியிலே அத்தனை பரிசில்களையும் தட்டிச் சென்றவன் கல்வியில் கவனமிழந்தான். அடுத்த மாதம் வர போகும் பரீட்சை பற்றி எந்த சிந்தனையும் இல்லாது இருந்தான். இவனின் இந்த நிலையினை பார்த்த ஆசிரியர்களே இவனுக்கு என்ன ஆயிற்று என்று சிந்திக்கலாயினர்.

பொறுப்பாசிரியர் அவனை அழைத்து என்ன ஆயிற்று என்று வினாவினார். ஆனால் அவனோ எதுவுமே சொல்லவில்லை. இவனின் இந்த நிலைக்கு காரணம் தெரியாது நண்பர்கள் முதல் அந்த கல்லூரி வரை எல்லாமே குழப்பத்தில் இருந்தது. இவன் ஸ்ருதியிடம் காதலை சொல்லியது அவள் மறுப்பு சொல்லியது இது எதுவுமே யாருக்கும் தெரியவில்லை. அவனும் எதையும் தானாக சொல்ல விரும்பவில்லை. அப்படி சொன்னால் ஸ்ருதியின் வாழ்க்கை கெட்டு விடும் என்று பயந்தான். அவள் தன்னை வெறுத்து விடுவாளோ என எண்ணினான். அதனால் எல்லாவற்றையும் தன் மனதுக்குள்ளேயே போட்டு புதைத்து இருந்தான். இவனின் இந்த நிலையை அறிவதற்கு ஸ்ருதி கூட அவன் அருகில் இல்லை. அவளோ இவை எதையும் அறியாது ஊரிலே மிகவும் ஆனந்தமாக இருந்தாள்.

என்றுமே ஸ்ருதியின் நினைவில் பித்து பிடித்தவன் போன்று திரிய தொடங்கினான். இதை பார்த்த இவனது சில கல்லூரி சகாக்கள் அவனுக்கு சொர்க்கத்தை காட்டுவதாக கூறி தவறான வழியில் அழைத்து சென்றார்கள். அந்த நிமிடத்தில் அவர்கள் கூறியது காட்டியது எல்லாமே அவனுக்கு சொர்க்கம் போன்று இருந்தது. அவர்களுடன் நைற் கிளப் எல்லாம் செல்ல ஆரம்பித்தான். அவர்களுடன் சேர்ந்து மேலும் மேலும் தவறான வழியில் செல்ல ஆரம்பித்தான். மதுப்பழக்கம், வேறு பெண்களுடன் நடனம் ஆடி தன் நேரத்தை போக்குவது என வாழ்க்கையின் சீரழிவான பாதையில் செல்ல தொடங்கினான். அவனால் ஸ்ருதியை மறக்க முடியவில்லை. ஓர் மனநோயாளி போன்று ஆனான். இறுதியில் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிந்து விட்டான். தூக்க மாத்திரைகளை அதிகமாக போட்டு மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டான்.தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதிரி அவனது உயிர் காப்பாற்றப்பட்டது.

அன்று காலையில் தான் ஊரிலிருந்து வந்திருந்தாள் ஸ்ருதி. பயண களை ஒரு பக்கம் இருந்தாலும் இரண்டு வாரங்கள் கல்லூரிக்கு லீவு சொல்லி சென்றதால் தன்னுடைய களைப்பை கணக்கெடுக்காமல் அவசரமாக குளித்தாள். மிகவும் மகிழ்வாக இருந்தமையால் தனது மனதுக்கு பிடித்த அந்த சல்வாரை அணிந்து கொண்டு அவசரமாக கல்லூரி செல்வதற்கு ஆயத்தமானாள். தாமதமாக ஆயத்தமானதால் அவள் கல்லூரி பஸ்ஸை கூட தவற விட்டுவிட்டாள். ஒரு மாதிரியாக வீட்டிற்கு அழைப்பு எடுத்து வீட்டிலிருந்து காரை வரவழைத்து ஒரு மாதிரியாக கல்லூரி வந்து சேர்ந்தாள். அவளும் வர காலைக் கூட்டம் ஆரம்பமாகி இருந்தது. அதனால் நண்பர்கள் யாரையும் சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. உடனடியாக கூட்டத்தில் கலந்து கொண்டாள். கூட்டம் முடிந்ததும் தன் வகுப்பறை வந்தவள் வெகு நேரமாகியும் சந்தோஷ் வராதமையால் தன் தோழி லதாவிடம் சந்தோஷ் ஏன் இன்னும் வரல என்று கேட்டாள். அவள் சந்தோஷ் பற்றி இப்படி ஒரு அதிர்ச்சியான விடயத்தை சொல்லுவாள் என எதிர்பாக்காதவள் தன்னை மறந்து சந்தோஷ் என கதறினாள்.

அடுத்த நொடியே தலைமை ஆசிரியரிடம் லீவு சொல்லி விட்டு தனது வீட்டிந்கு சென்றாள். தனக்கும் சந்தோஷிற்கும் இடையில் இதுவரை நடந்தவைகள், இப்போ நடந்து கொண்டிருப்பவைகள் அனைத்தையும் தன் பெற்றோருக்கு சொன்னாள். இவ்வளவு தூரம் நடக்கும் வரை ஏன் சொல்லவில்லை என்று கூறி அவளை சற்று கண்டித்து பேசினர். அவள் இதை நான் எதிர்பார்க்கவில்லை. அவன் என்னிடம் தன் காதலை சொல்லிய போது நான் சாதாரணமாக மறுப்பு சொல்லி விட்டு ஊருக்கு வெளிக்கிட்டன். நான் இல்லாத நாட்களுக்குள் இவ்வளவு தூரம் நடந்திருக்கு இது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்லி அழுதாள். இது வரை அழுகையை அறிந்திராத அவள் கண்களில் ஆறாக ஓடிய கண்ணீரைப் பார்த்த அவளது பெற்றோர்கள் துடித்து விட்டார்கள். அவளுக்கு ஆறுதல் சொல்லி விட்டு அவன் நல்ல பையன் தானே அவனை திருமணம் செய்வதில் உனக்கு என்ன தயக்கம் என்று சொல்லினார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காதவள் வியப்புடன் அவர்களை நோக்கினாள்.

அவர்கள் மேலும் தொடர்ந்தார்கள். சந்தோஷின் குணம் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். நல்ல இரக்க குணம், அடுத்தவருக்கு உதவும் மனசு, உனக்கேத்த அழகு, உடல்கட்டு எல்லாமே அவனிடம் இருக்கு. அவன் வசதில குறைந்தவன் என்றாலும் குணத்தில கோடீஸ்வரன். எங்களுக்கு அவன ரொம்ப பிடிக்கும். நாங்களே அவனை உனக்கு அவனை பேசி முடிக்கலாமா என்று யோசித்திருந்தம். உன் படிப்பு முடிய இது பற்றி எனக்கு கூறி உன்னுடன் இது பற்றி கதைக்கலாம் என்று இருந்தோம். அதுக்கிடையில இவ்வளவு நடந்திருக்கா என்றார்கள்.

பெற்றோரின் இந்த பதில் அவளை சற்று ஆச்சரியமடைய வைத்தாலும் உள்ளுக்குள் மகிழ்ச்சியை கொடுத்தது. ஏனென்றால் அவளுக்கும் அவனை ரொம்ப பிடிக்கும். ஆனால் பெற்றவர் விருப்பத்திற்கு மாறாக நடக்க கூடாது என்பதால் தான் மறுப்பு சொல்லி இருந்தாள். நீ அவனிடம் போய் முதலில் உன்னை திருமணம் செய்ய சம்மதம் சொல்லு என்று கூறி அவளை அனுப்பினார்கள்அவள் பெற்றோர்கள். இதை சற்றும் எதிர் பார்க்காத சுருதி மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். அவளிற்கு நடப்பவையெல்லாம் கனவா நனவா என்றே தெரியாமல் இருந்திச்சு. இனியும் தாமதிக்காமல் அவனிடம் காதலைச் சொல்ல ஓடிச் சென்றாள். அவனின் நிலையை பார்த்து இடிந்து போனவள் மெதுவாக அவனை தன் தோழோடு அணைத்து கொண்டாள். ஏனடா இப்பிடி பைத்தியகார தனமான முடிவு எடுத்தாய் என்று கேட்டு அழுதாள். அவனின் நெற்றியில் தன் இதழ்களை பதித்து நான் உன்னை திருமணம் செய்ய தயார் என்று தன் காதலின் சம்மதத்தை சொன்னாள். அவளின் சம்மதம் கேட்டதுமே அவனுடைய அத்தனை நோய்களும், சோகங்களும் சூரியனைக் கண்ட பனித்துளி போல் மறைந்து போனது.

அவளது நினைவிலேயே கரைந்து கொண்டிருந்தவன் அவள் காதல் மொழியில் ஈர்க்கப்பட்டான். அன்போடு அணைத்து ஆதரவாய் தோள் சாய்த்து கன்னம் தொடும் கண்ணீரை கனிவோடு துடைத்து விடும் களங்கமில்லா என் காதலே! ஆயுளுக்கும் நீ மனைவியாக அருகில் இருந்தால் எத்தனை தான் சோகங்கள் எனை தேடி வந்தாலும் அத்தனையையும் மறந்து அகிலத்தையே வென்று விடுவேன் உன் துணையோடு! என்று கூறி அவளை அன்போடு அணைத்தான். கண்களால் கதை பேசி கன்னங்களில் குழி பதிய கலகலவென சிரித்திடும் கன்னி மயிலே! நீ என் காதலை ஏற்றுக் கொண்ட இந்த நிமிடமே நான் சொர்க்கத்தின் வாசலுக்கு சென்று விட்டேன் என்று கூறி மகிழ்ந்தான். அவனின் இந்த காதல் மொழிகளில் தன்னையே மறந்தவள் இது சந்தோஷ் தானா என்று சந்தேகப்படும் படி இருந்தது அவனின் மாற்றம். அவனிடம் இருந்து விடைபெற்று வீட்டிற்கு சென்றாள். இரண்டு நாட்களில் சந்தோஷ் வைத்தியசாலையிலிருந்து வீட்டிற்கு சென்றான். அவன் உடல் நிலை சரியானதும் ஒரு வாரத்தில் கல்லூரிக்கும் செல்ல ஆரம்பித்தான்.

அன்று தான் சந்தோஷ் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்தான். அங்கு அவன் நண்பர்கள் எல்லாருமே அவனை கிண்டல் பண்ண ஆரம்பித்தார்கள். என்னடா இத்தனை நாள் எங்களுக்கு தெரியாம போச்சே நீ ஸ்ருதிய காதலிச்சது. சரிடா நீ குடுத்து வச்சவன் அந்த தேவதைய மணக்க போற மணாளன். இனி என்னடா எங்களுக்கு பார்ட்டி இல்லையா? உடன நமக்கு பார்ட்டி வை என்று கலாய்த்தார்கள். ஸ்ருதியையும் தோழிகள் விடவில்லை. அடி யாருக்குமே தெரியாமல் இருந்து சந்தோஷ லவ் பண்ணினாயா? உங்க ஜோடிப் பொருத்தம் சூப்பர்டி என்று சொல்லி கிள்ளினார்கள். அவளின் முகவே வெட்கத்தில் சிவந்து போனது. அந்த நேரம் சந்தோஷ் வந்து சரி சரி அவள விடுங்கப்பா எவ்வளவு தான் கலாய்ப்பீங்க அவள் முகத்த பாருங்க வெக்கத்தில எப்பிடி சிவந்திட்டு என்று அவர்களை அடக்கி விட்டு அவளை அழைத்து சென்றான். இப்படியே அவர்கள் கல்லூரிக் காலம் மிகவும் மகிழ்வாக சென்றது.

சந்தோஷ், ஸ்ருதி இருவரும் காதல் வானிலே கைகோர்த்து பறந்தார்கள். வீட்டாரின் சம்மதம் இருந்தமையால் அவர்கள் சந்திப்பதற்கே சேர்ந்து சுற்றுவதற்கோ எந்த தடையும் இருக்கவில்லை. ஸ்ருதியை அடிக்கடி சீண்டிப் பார்ப்பதில் அவனுக்கு கொள்ளை பிரியம். அவள் செல்லமாக சிணுங்குவதை பார்த்து இரசிப்பான். அவளை அடிக்கடி “செல்ல உயிர் கொல்லி” என்று சொல்லுவான். அதுக்கு பெரிய விளக்கம் கூட அவனிடம் இருக்கு. ஏன்டா என்ன உயிர்கொல்லி என்கிறாய் என்று சிணுங்கியவளை பார்த்து அடியே ஸ்ருதிம்மா உனக்கு தெரியுமா இந்த எச்ஐவி எயிட்ஸ் வைரஸ் இருக்கே அது ஒருத்தன பீடிச்சா வெளில தெரியாது. உள்ளுக்குள்ளயே இருந்து இரத்தத்தோடு கலந்து நோய் எதிர்ப்பு சக்தி எல்லாத்தையும் அழித்து கடைசில அவன அணு அணுவா கொன்றிடும். அது போல தான் நீயும். உன் அழக முதல் தடவை பார்த்த மாத்திரத்திலேயே அவனுக்குள்ள உன் நினைவு போய் மனசோட கலந்து அவன அணு அணுவா கொல்ல ஆரம்பிச்சிடும். என் அனுபவமடி இது என்றான். செல்லமாக கோவப்பட்டவள் அவனை துரத்தி துரத்தி அடித்தாள்.

இத்தனை ஆண்களுக்கு கிடைக்காத பாக்கியம் தனக்கு கிடைத்த பெருமையில் அவளை தன் கல்லூரி நண்பர் இல்லாத மற்ற நண்பர்களுக்கு அறிமுகம் செய்தான். தங்கள் படிப்பு முடிந்து நல்ல வேலை கிடைத்த பின்பே திருமணத்தை பற்றி சிந்திப்பது என்பதில் இருவருமே உறுதியாக இருந்தார்கள். அதன் படியே படிப்பிலே மீண்டும் கவனத்தை செலுத்தி சிறப்பாக படித்தனர். ஆண்கள் பிரிவில் சந்தோஷ் படித்த கல்லூரியிலே முதன்மை மாணவனாக வந்தான். அதே போல் ஸ்ருதியும் பெண்கள் பிரிவில் முதல் மாணவியாக நன்றாக படித்து சித்தியடைந்தாள். என்ன கல்லூரிக் காலத்தில் காதலை எதிர்பார்க்காதவள் கல்வி, காதல் இரண்டையும் ஒரே தடவையில் வெற்றி கொண்டாள்.

ஒரு சில மாதத்தில் சந்தோஷ்க்கு ஒரு பிரபலமான வங்கியில் உதவி மனேஜர் பதவி கிடைத்தது. அங்கு அவன் தன் பணியை முழுமையாக அர்ப்பணிப்புடன் செய்து அந்த வங்கி ஸ்ரேட்ல முதலாவதா வாற அளவுக்கு மாற்றங்கள் செய்தான். அங்கு அவனது திறமை, ஊக்கம், வழிநடத்தல் இவைகளை பார்த்து வேலையில் சேர்ந்து ஆறு மாதத்திலேயே அவனுக்கு மனேஜர் பதவி கிடைத்தது. அதே போன்று ஸ்ருதிக்கும் நல்ல ஒரு காலெஜ்ல புறவஷர் பதவி கிடைத்தது. அவளும் நல்ல வழியில் மாணவர்களை வழி நடத்தி எல்லாருக்கும் பிடித்த புறவஷர் ஆகினாள். தம் தொழிலை சிறப்பாக பார்த்து கொண்டு அதே நேரம் காதல் நீரோடையில் நீந்திக் கொண்டிருந்தார்கள். ஊரில் உள்ள அனைவருமே பார்த்து பொறாமை படும் படியாக இந்த காதல் ஜோடி இருந்திச்சு!

இப்படியே தொழில் பகுதியில் முன்னேற்றம் அடைந்தவர்கள் அடுத்து தம் திருமணத்தை சிந்தித்தார்கள். அவர்கள் திருமணத்தை ஊரின் பெரிய திருவிழா போல நடத்த ஸ்ருதியின் பெற்றோர் நினைத்தார். தன் ஓரே பிள்ளை என்பதால் அவள் திருமணத்தில் எந்த கஞ்சல் தனமும் இருக்க கூடாது என்று கண்டிஸனும் போட்டார். அவர்கள் எல்லோரும் விரும்பிய படி அவர்கள் திருமணம் வெகு விமரிசையாக நடந்தேறியது. ஊரில் உள்ளவர்களே மெச்சும் படி அவர்கள் திருமணம் பெருமையாக நடந்தது. திருமணம் முடிந்த அந்த இரவுப் பொழுதில் அவள் சந்தோஷை பார்த்து சந்தேகத்தோடு கேட்டாள் இனி நான் உங்கள எப்பிடி கூப்பிடணும் என்றாள். ஏனடி உனக்கு இந்த சந்தேகம் சந்தோஷ் என்றே கூப்பிடலாம் என்றாள். அதுக்கு ஸ்ருதி புருஷன பெயர் சொல்லி கூப்பிட்டா மற்றவங்க தப்பா நினைக்க மாட்டாங்களா என்று அப்பாவியாக முழித்தாள். அடியே நாம முதல்ல நல்ல நண்பர்கள். அப்புறமா தான் கணவன் மனைவி. நீ என்ன இவ்வளவு காலமும் கூப்பிட்டது போலவே சந்தோஷ் என்று கூப்பிடு என்றான். அவளும் சரி அப்பிடியே கூப்பிடுறன்டா சந்தோஷ் என்றாள். அடியே புருஷன கூப்பிடுறன்டா என்றாயா உன்ன என்ன பண்ணுறன் பார் என்று கன்னத்தில் கிள்ளினாள். சரி நான் இப்ப உனக்கு கவிதை சொல்லட்டா சொல்லி சந்தோஷ் ஸ்ருதியை தன் கவி மழையில் குளிப்பாட்டிக் கொண்டிருந்தான்.

அன்று
பள்ளி பருவத்தில்
பார்ப்பவரை கவர்ந்திழுக்கும்
பருவ மங்கை என்னை
பார்த்த்தும் காதல் செய்தேன்

சிட்டுக் குருவியாய் என்னை
சிறகடித்து பறக்க வைத்தாய்
கடற்கரை மணலிலே
காதல் மொழி பொழிந்து
கைகோர்த்து வலம் வந்தாய்
மெல்லிய காற்றினிடை
மென்மையான பூக்களின்
மெதுவான ஆட்டம் பார்த்து
மெல்லிடையாளே உன் நினைவு
மெதுவாக அலை மோதும்

காந்த கண் பார்வையும்
கண் சிமிட்டும் உன் சிரிப்பும்
காண்பவர் மனதையெல்லாம்
கண்டவுடன் கொள்ளை கொள்ளும்

துரு துரு குறும்பும்
துள்ளித் திரியும் பாதமும்
தூக்கத்தின் போது கூட
துவம்சங்கள் பல செய்யும்

கன்னி உன்னை காண எண்ணி
காத்திருந்த காலம் போய்
இன்று என் கைக்குள்ளே
இனிய இல்லத்தரசியாய்....!

என்று கூறி அவளை தன்னோடு அணைத்து கொண்டான். முதன் முதலில் ஒர் ஆணின் அணைப்பிலே தன்னை மறந்தவள் வாழ்க்கையின் பாதையில் அத்தனை இன்பங்களையும் அந்த நொடியே பெற்றது போன்ற உணர்வில் திழைத்தாள். அன்றைய நாள் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியானதாக அமைந்தது.

அவர்கள் மனதிற்கு பிடித்த வாழ்க்கை என்பதால் அவர்கள் திருமண வாழ்க்கை மிகவும் இனிமையானதாக சென்று கொண்டிருந்தது. தொழில் முன்னேற்றங்கள் பல வந்து அவர்களின் வாழ்க்கையின் பல செல்வங்கள் குவிந்தது. அவர்களின் வாழ்க்கையின் மகிழ்ச்சியில் துளிர்த்த அழகு தேவதை தான் ஆஷா. அவர்களின் செல்ல மகள். அவர்களின் வாழ்க்கை மிகவும் மகிழ்வாகவும் நிம்மதியாகவும் நகர்ந்து கொள்வதற்கு ஆஷா ஒரு வழி கோலாக அமைந்தாள். ஸ்ருதிக்கு ஆஷா என்றால் கொள்ளை பிரியம். அவளிற்கு விதம் விதமாய் உடைகள் அணிந்து அழகு பார்த்த படியே இருப்பாள். தான் வளர்ந்ததை விட அவளை இன்னும் அதிக வசதியுடன் வளர்த்து வந்தாள்.

அவர்கள் ஆஷாவின் மழலை கேட்டு விளையாடிக் கொண்டிருந்த வேளை சந்தோஷ் ஸ்ருதியை பார்த்து ஏய் என் செல்ல உயிர் கொல்லிக்கு நான் ஒரு கவிதை சொல்லவா என்றான். சரி உன் கவிதை கேட்டு ரொம்ப நாளாச்சு சொல்லுடா என்று கெஞ்சினாள். அவனும்

அன்பே!
அதிகமாக எனக்கு
ஆசை ஒன்றும் இல்லை
நான் உன் கணவனாக
இருக்க விரும்பவில்லை
உன் கையில் குழந்தையாகவே
இருக்க ஆசை!
நீ என்னை நேசிப்பதை விட
உன் குழந்தையையே அதிகம்
நேசிக்கிறாய்!

என்றான். அட பாவி இத விட நீ கவிதை சொல்லாமலே இருந்திருக்கலாம் என்று அவன் காதை திருகியவள் ஆஷா பாரும்மா உன் அப்பாக்கு ஆசை கூடி போச்சு என்று குழந்தையிடம் போட்டுக் கொடுத்தாள். அதுக்கு அவனும் பாரும்மா ஆஷா உனக்கு அம்மா தினமும் எவ்வளவு முத்தம் தாறாங்க அப்பா பாவம் தானே உனக்கு தாறதில ஒண்ணாச்சும் தர சொல்லேன் என்று சொன்னான். ஏய் குழந்தையிடம் என்ன சொல்வது எண்டு விவஸ்தை இல்லையா என்று செல்லமாக கோவித்தாள். ஆஷாவும் அம்மா எனக்கு இனி முத்தம் வேணாம் எல்லாத்தையும் சேத்து அப்பாக்கே குடுத்துடு நான் வேணுமென்டா அப்பாக்கிட்ட திருப்பி வாங்கிக்கிறன் என்று சொல்லிச்சு. என்னடி அப்பா கூட சேர்ந்து ரெக்கமண்டேஷனா என்று அவளை செல்லமாக தட்டி விட்டு வெட்கத்தில் எழுந்து ஓடினாள். இங்க பாரு ஆஷா அம்மாக்கு வெக்கம் எல்லாம் வந்திச்சு என்று சொல்லி அவளை சீண்டினான். இப்படியாக அவர்களின் குடும்பம் மிகவும் சந்தோசமாக இருந்திச்சு.

அவர்கள் வானம்
ஆயிரம் விண்மீன்கள்
பூத்துக் குலுங்கிய
அழகிய நந்தவனம்
ஆசை உள்ளங்களான
அன்றில் பறவைகளின்
அன்புக் கூடு அது

அலையடிக்கும்
புயல் வீசும் - ஆனால்
நாணற் புட்களாய்
வளைந்து கொடுக்கும்
அன்பு உள்ளங்கள்
என கவிபாடும் அளவிற்கு அமைந்து இருந்தது.

சரி சந்தோஷ் வாற கிழமை ஆஷாட பிறந்த நாள் வருது. அவள் இப்ப தான் ஸ்கூல் போக ஆரம்பிச்சதால அவள்ட ஸ்கூல் பிள்ளையளுக்கும் ரீச்சர்மாருக்கும் சொல்லி வழமைய விட பெருசா செய்யணும் என்றாள். அப்புறம் உங்க ஆபிசில கொஞ்ச பேர் என் கொலேஜ்ல கொஞ்ச பேர் சொன்னா காணும் என்றாள். அவனும் சரி அதுக்கு நான் எல்லா ஒழுங்கையும் பாக்கிறன் என்றான். சரி ஆஷா உனக்கு எப்பிடி கேக் வேணும் என்று கேட்டான். அதுக்கு அவள் எனக்கு வளர்ந்து பெரிய டொக்டரா வரணும் அதுக்கு ஏத்த மாதிரி பொம்பிள டொக்டர் போல கேக் செய்யுறீங்களா எண்டாள். சரிமா உன் விருப்பப்படியே என்று சொன்னான். பாரும்மா ஸ்ருதி நம்ம பிள்ள வளர்ந்து உனக்கும் எனக்கும் ஊசி போட போறாளாம். டாக்டரா வரணுமாம் என்றான். நல்லது தானே இப்பவே வாழ்க்கையில் இப்பிடி வரணும் என்ற லட்சியம் இருந்தால் தான் சிறப்பாக இருக்கும் என்று கூறி அவளை பாராட்டினாள். சரி நாளைக்கு வேலைல இருந்து கொஞ்சம் சீக்கிரமா வந்திடுங்க. நானும் வாறன் போய் ஆஷாக்கு உடுப்பு எடுக்கணும் என்றாள்.

மறுநாள் சந்தோஷ் சீக்கிரமாக ஆபிஸில் இருந்து கிளம்பியிருந்தான். சொல்லியது போல் ஸ்ருதியும் ஆஷாவை ஆயத்தம் பண்ணி தானும் வெளிக்கிட்டு இருந்தாள். வாசலில் கார் ஹோர்ண் சத்தம் கேட்டதும் ஆஷா அம்மா அப்பா வாறார் என்றாள். அவள் ஆசையுடன் ஓடிச்சென்று அவனை அணைத்துக் கொண்டாள். அவளை அன்போடு தூக்கி உச்சி மோர்ந்தவன் இரும்மா அப்பா போய் குளித்து விட்டு சீக்கிரம் வாறன் என்று கூறி தன் அலுவலக பையை வைத்து விட்டு குளியலறை விரைந்தான். போகும் போதே என் செல்ல பொண்டாட்டியே எனக்கு சூடா ரீ போடுடி வாறன் என்று சொல்லி அவளை வம்புக்கு இழுத்த படி சென்றான். அவனும் குளித்து விட்டு வர ஸ்ருதி ரெடியாக தேனீரை நீட்டினாள். என்றும் என் மனைவி போலவே அவளின் தேனீரும் ரொம்ப சுவை என்று கூறி குடித்தான். ஹலோ மிஸ்டர் தேனீர் போல தான் இவள் ரொம்ப சூடாவும் இருப்பாள் அதை மறந்துடாத கண்ணா என்று கூறினாள். சரி மை டியர் ஹொட் வைப் என்று கூறி விட்டு தேனீர் கோப்பையை அவளிடம் நீட்டினான். மூவரும் கடைக்கு செல்ல பயணமானார்கள்.

அழகிய அவன் மாருதி கார் மெதுவாக விரைந்தது பட்டிணத்தை நோக்கி. சந்தோஷ் அந்த மெலோடி சோங்ஸ்ஸ போடுங்களன் என்றாள் ஸ்ருதி. அப்படியே பாடலை இரசித்த படி ஆஷாவின் பிறந்த நாள் பற்றிய கலந்துரையாடலுடன் அவர்கள் அங்கு உள்ள பிரபலமான புடவைக் கடையை அடைந்தார்கள். அவளுக்கு தேவையான உடைகள் மற்றும் சில பொருட்களை வாங்கிக் கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு ஷொப்பிங்க்கு அதிக நேரம் செலவாகவில்லை. அப்பா நாங்கள் இண்டைக்கு பாக் போவமா என்று கேட்டாள் ஆஷா. ஸ்ருதியும் ஆமா சந்தோஷ் நாங்க இப்பிடி சந்தோஷமா அவுட்டிங் போய் ரொம்ப நாளாச்சு. இன்னிக்கு போவமா என்றாள். அவனும் சரி எனக் கூறி பாக் சென்றான்.

பாக் சென்றவர்கள் அங்கு இருந்த புல் தரையில் அமர்ந்தார்கள். அம்மா நான் போய் அந்த ஊஞ்சலில ஆடுறன் என்று சொல்லி குதித்துக் கொண்டு சென்றாள். அங்கு அவளொத்த பிள்ளைகள் நின்றமையால் அவளும் அவர்களுடன் மகிழ்வாய் விளையாடி கொண்டிருந்தாள். ஏய் ஸ்ருதி அங்க பாத்தியா ஆஷா மற்றவங்களோட எவ்வளவு ஒற்றுமையா விளையாடுறாள் என்று. அவள் நம்ம பிள்ளையாச்சே எப்பிடி தப்பா போவாள் என்றாள். ஏய் ஸ்ருதிம்மா நான் ஒண்ணு சொல்லட்டா என்றான். சரி சொல்லுங்க என்று அவனை ஆவலுடன் பார்த்தாள். இல்ல இன்னும் எத்தின நாளைக்கு தான் ஆஷா மற்ற பிள்ளையளோட விளையாடுறது. அவளுக்கு எண்டு ஒரு தம்பியோ தங்கச்சியோ இருந்தால் அவள் எவ்வளவு சந்தோசமா இருப்பாள் என்றான். அடப்பாவி அவளுக்கு ஆசையோ இல்லையே உங்கட ஆசைய பாரு என்று சிரித்து விட்டு, நாங்கள் இருவரும் லவ் பண்ணினப்ப இப்பிடி இருந்து கதைச்சம். திருமணம் செய்த பிறகு ரைம் கிடைக்கிறதில்ல. இப்ப எனக்கு நாம காதலிச்ச காலத்து நினைவுகள் தான் வருது என்று சொல்லி அவன் தோளில் மெதுவாக சாய்ந்தாள்.

அவள் தோளிலே என்ன நினைத்தாளோ தெரியவில்லை திடீரென தலையை தூக்கி சந்தோஷ் எனக்கு அந்த ரோஜா பூவ பறிச்சு தாறியா என்றாள். ஏன்டி ஆரம்பிச்சிட்டியா? என்ன மெடம் லவ் பண்ணிற காலத்தில இங்க வந்து ரோஜா பூ வேணும் என்று கேட்டு அவங்களுக்கு தெரியாம பறிச்சு பிடிபட்டு கடைசில 1000 ரூபா அபராதம் கட்டினதெல்லாம் மறந்திட்டியா? ஏய் இப்ப நீங்க என்ன பண்ணுறீங்களோ தெரியாது எனக்கு பூ வேணும் என்று சிறு குழந்தை போல அடம் பிடித்தாள். சரி என்று அங்கும் இங்கும் பார்த்து விட்டு மெல்ல அந்த சிவப்பு ரோஜாவை பறித்து அவளின் தலையில் வைத்து விட்டான். நல்ல காலம் காவலாளிகள் யாரும் பார்க்கவில்லை. விளையாடி கொண்டிருந்த ஆஷா ஓடி வந்து மம்மி நீ ரொம்ப கியூட் ஆக இருக்கிறாய். டாடி பத்திரமா மம்மி தலைல ரோஜா வச்சிங்களா அவங்களே பூ போல முள்ளு குத்திட போவுது என்று பெரிய மனுஷிபோல் கதை சொன்னாள். அவளுக்கு செல்லம் வந்தால் மம்மி டாடி என்று அழைப்பாள். என்னடி அப்பாவ போலயே நக்கல் பண்ணுறாய் என்று அவளை அணைத்து முத்தமிட போனவளை சீ சீ உன் முத்தமெல்லாம் எனக்கு வேணாம். டாடி தான் பாவம் அவருக்கு குடும்மா என்று சொல்லி விட்டு மறுபடியும் விளையாட ஓடி விட்டாள்.

என்னங்க ரைம் ஆச்சு கிளம்புவமா? இனி போய் சாப்பாடு இரவுக்கு செய்யணும் என்றவளை வேணாம் இன்று ஹோட்டலில் சாப்பிட்டு போவம் உனக்கும் ரெஸ்ட் ஆக இருக்கட்டும் என்றான். நீண்ட நாட்களுக்கு பிறகு இப்பிடி வெளிக்கிட்டு இருக்கிறம் ஜொலி பண்ணுவம் என்றான். அவளும் சரி என தலை அசைத்து விட்டு தம் பழைய நினைவுகளை மீட்டி பார்த்தபடி இருந்தார்கள். ஆஷா ரைம் ஆச்சு வெளிக்கிடுவமா என்று கூற அவளும் சூழ்நிலையை புரிந்தவளாய் உடனே வந்தாள். அப்படியே சென்று ஹொட்டலில் இரவு சாப்பாட்டை சாப்பிட்டார்கள். அந்த நேரத்தில் தான் அந்த தொலைபேசி அழைப்பு சந்தோஷிற்கு வந்தது. சார் நான் முத்து பேசுறன். நீங்க எங்க நிக்கிறீங்க? நான் உங்க வீட்டுக்கு முன்னாடி நிக்கிறன் என்றான். அப்போ தான் அவனுக்கு வீட்டுக் கேட்டின் சீலை தைப்பதற்கு ரெயிலரை அளவெடுக்க வர சொல்லியது நினைவுக்கு வந்திச்சு. நில்லுங்க நான் 15 நிமிடத்தில வாறன் என்று சொல்லி தொலைபேசி அழைப்பை துண்டித்தான். யாருங்க என்று கேட்ட ஸ்ருதிக்கு விபரத்தை சொன்னான்.சரி சீக்கிரம் வெளிக்கிடுவம் என்று சொல்லி எழுந்தனர். எப்படியும் அவன் வீட்டிற்கு சாதாரணமாக செல்ல 20-25 நிமிடங்கள் செல்லும். அவனோ 15 நிமிடத்தில் வருவதாக கூறி இருந்தான். அதனால் அந்த மங்கிய மாலை வேளையில் வெகு வேகமாக காரை ஓட்டிக்கொண்டு தன் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தான்.

சந்தோஷ் அவங்க ஒரு 5 நிமிசம் கூட வெயிற் பண்ணுவாங்க தானே!. இரவு நேரம் நீங்க மெல்லமா போங்க என்றாள். ஆனால் அவனோ அவர்களின் வாழ்க்கைச் சமுத்திரத்தின் சந்தோச அலைகளை போலவே தனது காரும் விரைவாக சென்று ஓட்டிக்கொண்டிருந்தான். ஏன் சந்தோஷ் நீங்க மறந்திட்டீங்களா அவங்க வாறதெண்டத என்றாள். ஆமா நினைவு இருந்திச்சு வெளிக்கிடுறப்ப மறந்திட்டன். பாக்ல போய் எல்லாம் மறந்து சந்தோசமா இருந்ததில அவங்க வாறன் என்றத மறந்திட்டன் என்றான். அவன் சொல்லியது போன்றே 15 வது நிமிடத்தில் அவனது கார் வீட்டின் வாசலை அடைந்தது. சாரி முத்து உங்கள வெயிற் பண்ண வச்சிட்டன். ஷொப்பிங் போனதால கொஞ்சம் லேட் ஆகிட்டு என்று தன் பக்கத்து நியாயத்தை சொல்லி மன்னிப்பு கேட்டான். பறவாயில்ல சார் நாங்க இனி வீட்டுக்கு தானே போறம். அலுவல முடிச்சு ஆறுதலா போகலாம் என்றான்.

சரி வாங்க உள்ளுக்கு என்று கதைவை திறந்தவன் பொருட்களை வைத்து விட்டு அவர்களுக்கு அளவெடுக்க வேண்டிய கேட்டின் இடங்களை காட்டினான். சார் அளவெல்லாம் சரி எப்பிடி பற்றன்ல செய்யணும் என்று கேட்ட முத்துவிற்கு நான் கொஞ்சம் நெற்ல டவுண்லோட் பண்ணி இருக்கிறன் பாருங்க. அப்பிடியே செய்தால் நன்றாக இருக்கும் என்றான். ஆஷா ஒருக்கா கொம்பியூட்டர ஒன் பண்ணம்மா அங்கிள் ஆக்களிற்கு அந்த கேட்டின் படங்கள காட்ட என்றான். அவளும் ஓடிச் சென்று கொம்பியூட்டரை ஒன் செய்யவும் ஸ்ருதி ரெடியாக தேனீருடன் வந்தாள். நீங்க வேலையால களைச்சு போய்வந்திருப்பீங்க இத குடிச்சிட்டு பாருங்க என்றாள். அவர்களும் தேனீரை அருந்திய படி கேட்டின் மொடல்களை பார்த்தார்கள். அவர்களின் வீட்டின் அமைப்பிற்கும் பெயிற் கலரிற்கும் ஏற்றால் போல அழகான ஒன்றை தெரிவு செய்தார்கள். அது எல்லாருக்குமே பிடித்து இருந்தது. சரி சார் நாங்க 2 நாள்ல இத முடிச்சு தாறம் என்று சொல்லி புறப்பட்டார்கள். அவர்களை வழியனுப்பி விட்டு கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு ரொம்ப களைப்பாக வந்து அமர்ந்தான் சந்தோஷ்.

என்ன சார் ரொம்ப களைச்சிட்டீங்க என்ற ஸ்ருதியை பார்த்து ஷொப்பிங் போன களை அதோட ஆபிசிலும் கொஞ்சம் வேலை அதிகம்.அவரசமா முடிச்சிட்டு வந்தன் என்று கூறினான். சரி ஸ்ருதி எல்லா வேலையும் முடிச்சாச்சு. சாப்பாட்டு அலுவலும் ஓடர் செய்தாச்சு. நாளைக்கே நீ உன் நண்பர்களுக்கு சொல்லு, நானும் சொல்றன் என்றான். நாளைக்கு நான் போய் ஆஷா ஸ்கூல்லயும் சொல்லிடுறன் என்றான். கிட்டத்தட்ட ஒரு 50 பேர் வருவாங்க என்று கணக்கு போட்டார்கள். மறு நாள் காலை அவர்கள் திட்டமிட்டபடி ஆஷாவின் பாடசாலை சென்று ஆசிரியர், மாணவர்களுக்கு அழைப்பு சொன்னார்கள். நம் ஆஷாக்குட்டி பேர்த்டேக்கு வராமலா? கண்டிப்பா வாறம்.அவள் தான் இங்க படு சுட்டி என்று கூறி தட்டிக் கொடுத்தார்கள். பிள்ளையின் பெருமையை ஆசிரியர்கள், அதிபர் வாயால் கேட்ட பெருமிதத்தோடு தத்தம் வேலைக்கு சென்றார்கள்.

அன்று வெள்ளிக்கிழமை மறுநாள் ஆஷாவின் பிறந்த நாள் என்பதால் இருவருமே அலுவலகத்தில் லீவு சொல்லி இருந்தார்கள். வீட்டை அலங்கரித்தல், மற்றும் ஒழுங்கமைப்பு வேலைகளை இருவரும் சேர்ந்து கவனித்த வண்ணம் இருந்தார்கள். சந்தோஷ் இன்றைக்கு சாப்பாடு வெளில எடுப்பம் சமையலுக்குள்ள போனால் வேலை ஒன்றும் பார்க்க முடியாது என்ற ஸ்ருதியின் கருத்தை ஆமோதித்தவனாய் கடையில் சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்தான். மூவருமே சாப்பிட்டு முடித்து விட்டு மேலும் வேலைகளை தொடர ஆரம்பித்தனர். ஆஷா கூட தன்னாலான சிறு வேலைகளை செய்து வீட்டை அலங்கரித்து கொண்டிருந்தாள். அவர்கள் வீடே மிகவும் அலங்கார கோலத்தில் பெருமிதமாய் நிமிர்ந்து நின்றது. ஆஷா நீ நாளைக்கு பேர்த்டே பேபி சீக்கிரமா எழும்பணும் கோயிலுக்கெல்லாம் போகணும் போய் தூங்கும்மா நானும் அம்மாவும் பாக்கிறம் என்று சொல்லி அவளை தூங்குவதற்கு ஒழுங்கு செய்தான். இருவரும் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு தூங்க சென்றார்கள்.

அன்று ஆஷாவின் பிறந்த நாள். செல்ல மகளிற்கு வாழ்த்துக் கூறி அவளை நித்திரையால் எழுப்பினார்கள். ஆஷாக்குட்டிக்கு அப்பாவும் அம்மாவும் ஒரு சப்ரைஸ் கிப்ட் வாங்கி வைத்திருக்கிறம் வந்து பார் என்று கூட்டி வந்தார்கள். ஓர் அழகிய அவளுக்கு ஏற்ற சைக்கிள். அவளுக்கு அவர்களின் பரிசு ரொம்பவே பிடித்து போக தாங்ஸ் டாடி, மம்மி என்று சொல்லி அவர்களை கட்டி அணைத்து விட்டு சைக்கிளை ஓட்டிக் கொண்டிருந்தாள். சரிம்மா ஆஷா நாங்க கோயிலுக்கு போகணும் சீக்கிரமா குளிச்சு வெளிக்கிடணும் நாளைக்கு நீ சைக்கிள் பழகலாம் என்று கூறி அவளை அழைத்து குளிப்பாட்டி அழகிய அவளின் செக்க செவேலென்ற நிறத்திற்கு ஏற்ற இளம் சிவப்பு உடை அணிவித்தார்கள். சாமி அறையில் சென்று சாமி கும்பிட ஆஷா பெற்றவங்கள் கால்களில் விழுந்து வணங்கி அவர்களின் ஆசிகளை பெற்றாள். அப்படியே அவர்கள் கோயிலுக்கு சென்று அவளின் பெயரில் அர்ச்சனை எல்லாம் செய்து விட்டு வந்தார்கள்.

நேரமும் மதியத்தை தாண்டிச் சென்று கொண்டிருந்தது. ஸ்ருதி ஆஷாவின் விருப்பப்படி அவளுக்கென்றே செய்த கேக்கை மேசையில் வைத்து ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தாள். சந்தோஷ் மற்ற அலுவல்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தான். ஆஷா இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்த படி அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தாள். தன்னாலான ஒரு சில உதவிகளை அவர்களுக்கு செய்யவும் அவள் தயங்கவில்லை. சிறிது நேரத்திலே நேரம் 3 மணியை தொட்டது. அவர்கள் மூவரும் உடைகள் மாற்றி ஆயத்தமானார்கள். 3.30 மணியளவில் அவர்களின் நண்பர்கள் விழாவை சிறப்பிக்க வர ஆரம்பித்து இருந்தார்கள். 4 மணிக்கு எல்லாருமே வந்தமையால் கேக் வெட்டி மகிழ்வாக அவளிற்கு ஊட்டினார்கள். வந்த விருந்தினர்கள் கூட ஆஷாக்கு கேக் ஊட்டி மகிழ்ந்திருந்தார்கள். ஆஷாவின் பள்ளித் தோழிகள் முதல், ஸ்ருதி, சந்தோஷின் அலுவலக உத்தியோகத்தர்கள் வரை கலந்து சிறப்பித்துக் கொண்டிருந்தமையால் எல்லாருமே மகிழ்வாக ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்தி கலகலப்பாக இருந்தார்கள்.

ஆஷா சிறு வயது என்றாலும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் சிறப்பாக தேர்ச்சி பெற்றிருந்தாள். சந்தோஷ், ஸ்ருதியை போலவே அவளுக்கும் கவிதை எழுதுவது ரொம்ப பிடிக்கும். தன் வயதிற்கும் அறிவிற்கும் ஏற்றால் போல எழுதுவாள். அவளிற்கு இசை என்பது இறைவனாலே கொடுக்கப்பட்ட ஓர் கொடை என்று தான் சொல்ல வேண்டும். அத்தனை அழகாக சுருதி பிசகாமல் படிப்பாள். அது மட்டுமா பரதம், பிறேக் என்று அந்த வயதிலேயே நடனத்தையும் ஒரு கரை கண்டிருந்தாள். இத்தனை திறமைகளை ஒருங்கே பெற்றதால் தன் சுட்டித்தனத்தால் வந்திருந்த எல்லாரையும் தன் பக்கம் ஈர்த்து கொண்டிருந்தாள். அவர்களுக்கு கவிதை கூறி பாடல் பாடி நடனமாடி மகிழ்ந்து கொண்டிருந்தாள்.வந்த அனைவரின் கண்களே திருஷ்டிபடும் படியாக அவளது செயற்பாடுகள் அமைந்தது. எல்லாருமே சந்தோஷ் ஸ்ருதி தம்பதிகளை பாராட்டினார்கள். இப்படி ஒரு குழந்தையை பெற்றதே கடவுள் உங்களுக்கு அளித்த வரம் என்று. மற்றவரின் பாராட்டு புகழ்ச்சி இவை எல்லாவற்றிலும் தம் மகளின் திறமையை பார்த்து சொல்லொணா மகிழ்ச்சியில் திழைத்தார்கள். அவர்கள்பள்ளிஆசிரியர்கள் கூட அவளின் திறமையை புகழ்ந்து சொன்னார்கள். படிப்பில் கூட முதல் மாணவி பொறுப்பான குணம் என்றெல்லாம். அவளை பாடசாலையில் அனைவருக்கும் நன்றாக பிடிக்கும். அதனால் தான் அவளின் பிறந்த நாளுக்கு கூட எல்லாருமே தவறாது வந்திருந்தார்கள். மகளின் செயல்களை பார்த்தும் மற்றவர்களின் பாராட்டைப் பார்த்தும் பூரித்து அவளுடன் சேர்ந்து நடனமாடிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் குடும்பமும் மற்ற நண்பர்களும் என்றுமே இல்லாத ஆனந்த வெள்ளத்தில் திழைத்திருந்த அந்த வேளை சந்தோஷ் திடீரென்று மயக்கமடைந்து விழுந்தான்.

திகைப்படைந்த எல்லாரும் செய்வதறியாது திணறினார்கள். ஸ்ருதி உடனடியாக அம்புலன்ஸ்க்கு போன் செய்தாள். அடுத்த சில நொடிகளில் அம்புலன்ஸ் அவங்க வீட்டு வாசலில் வந்து நின்றது. மற்றய நண்பர்களின் உதவியுடன் சந்தோஷை உடனடியாக வைத்தியசாலையில் சேர்த்தார்கள். அவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான். பற்பல சிகிச்சைகள் பரிசோதனைகள் எல்லாம் செய்து பார்த்ததில் அவனிற்கு எந்த நோயுமே இல்லை. சந்தோஷ் நீங்க உடம்ப நல்ல ஸ்ரெயின் பண்ணிட்டீங்க. அதோட அளவிற்கதிகமான சந்தோஷம் இதெல்லாம் சேர்ந்து தான் உங்களுக்கு மயக்கம் வந்திருக்கு. யூ ஆ ஆல் ரைட் நௌ என்று சொல்லி சென்றார். சந்தோஷ் எதுக்கும் உங்க இரத்தம் ஒருக்கா பரிசோதித்து பாப்பம் உங்களுக்கு கொலஸ்ட்றோல் இருக்கா என்று சொல்லி அவனில் கொஞ்ச ரத்தம் பரிசோதனைக்கு எடுத்து விட்டு இரண்டு மணி நேரத்தில் வீட்டிற்கு விட்டார்கள். என்ன சந்தோஷ் சந்தோசத்தில இப்பிடியா? நான் கொஞ்ச நேரத்தில் பயந்தே போய்ட்டன் என்று ஸ்ருதி சொல்லி அழுதாள். மறுநாள் நன்றாக ரெஸ்ட் எடுத்து விட்டு திங்கட்கிழமை வழமை போல அவர்கள் நாளாந்த செயற்பாடுகளை பார்க்கலானார்கள்.

இரண்டு நாட்களின் அவர்கள் வீட்டு ரெலிபோன் ஒலிக்க ஓடிச் சென்று ஆஷா எடுத்து ஹலோ என்றாள். ஹாய் ஆஷாவா நான் டொக்டர் அங்கிள் பேசுறன் அப்பா அல்லது அம்மா இருக்கிறாங்களா என்றார். ஆமா என்று சொல்லி போனை தாயிடம் கொடுத்தாள். சொல்லுங்க டொக்டர் சந்தோஷ் றிப்போட் வந்திட்டா என்றாள். ஆமா ஸ்ருதி அவருக்கு எந்த பிரச்சினையும் இல்ல. கொலஸ்ட்றோல் எல்லாம் நோமலா தான் இருக்கு. நான் சும்மா பயத்தில தான் எல்லா ரெஸ்ட்ம் செய்தன் கடவுள் புண்ணியத்தில எந்த பயமும் இல்லை. நீங்க எதுக்கும் யோசிக்க வேணாம் என்று சொல்ல தான் போன் எடுத்தன் என்று சொன்னார். அப்ப தான் ஸ்ருதிக்கு உயிரே வந்திச்சு. சரி டொக்டர் நன்றி என்று கூறி தொடர்பை துண்டித்தவள் பாரிய நிம்மதியுடன் போய் சோபாவில் அமர்ந்தாள். என்ன மெடம் ரொம்ப ஹப்பியா இருக்கிறீங்க எனிதிங் ஸ்பெஷல் என்று அவள் பக்கத்தில் அமர்ந்த சந்தோஷிற்கு டாக்டரின் போன் விபரத்தை சொன்னாள். எனக்கு தெரியுமாடா நீ தான் பயந்தாய் என்று சொல்லி விட்டு சரி வாங்க ஜாலியா வெளில போவம் என்று சொல்லி புறப்பட்டார்கள்.

இப்படியே சில வாரங்கள் சென்றிருந்த நிலையில் அன்று இரவு 12 மணிக்கு ஸ்ருதியை தட்டி எழுப்பியவன் தங்களின் பிறந்த நாள் வாழ்த்து கூறி அவளை கட்டியணைத்தான். ஆம் அன்று ஸ்ருதியின் பிறந்த நாள் ஆனால் அவள் அதை மறந்தே போயிருந்தாள். ஆஷாவும் எழுந்து விஷ் பண்ணினாள். சரி சரி என் செல்ல உயிர் கொல்லிக்கு என் பிறந்த நாள் பரிசு என்ன எண்டு காட்ட வேணாமா என்று கூறி அவளை கூட்டிக் கொண்டு வந்தான். ஏய் இந்த சாமத்தில எங்க கூட்டிப் போறீங்க எண்டவளை வீட்டு வாசலை திறந்து காட்டினான். அங்கு அழகிய ஓா் கார் நின்றது. ஏய் என்ன எனக்கு காரா என்றவள் சந்தோசத்தில் அவனை கட்டியணைத்து முத்தமிட்டாள். இனி என் மகாராணி கார்லயே வேலைக்கு போகலாம் என்றான். தாங்ஸ் சந்தோஷ் நானே கேக்கலாம் என்று இருந்தன் ஆனால் நீங்க இப்பிடி சப்ரைஸ் பரிசா தருவீங்க எண்டு எதிர்பார்க்கல என்று கூறினாள்.

மே ஐ கம் இன் என்ற நர்ஸின் குரலை கேட்ட டொக்டர் வாங்க என்ன சொல்லுங்க என்று கூறினார். நீங்க தந்த எல்லாரோட பிளட் றிப்போட்டும் வந்திருக்கு. அதில ஒருத்தருக்கு மட்டும் கொஞ்சம் பிரச்சினை இருக்கு என்றார். யாருக்கு? என்ன பிறப்ளம் என்ற டாக்டருக்கு சந்தோஷின் பிளட் றிப்போட்டை கொடுத்தாள். டொக்டர்க்கு அந்த உலகமே இருண்டது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது. என்ன சொல்றீங்க மிஸ் இந்த றிப்போட் சரியானதா? வடிவா பாத்து தான் கொண்டு வாறீங்களா என்று சந்தேகமாகவே கேட்டார். ஆமா டொக்டர் சரியா தான் இருக்கு என்றவளின் பேச்சில் நம்பிக்கை இல்லாது சந்தோஷிற்கு போன் செய்தார். சந்தோஷ் நீங்களும் ஸ்ருதியும் ஒருக்கா ஹாஸ்பிட்டல் வாறீங்களா என்று. சரி டொக்டர் நாங்க வாறம் என்று கூறியவன் அடுத்த 30 நிமிடம் வைத்தியசாலையில் ஸ்ருதியுடன் நின்றான். என்ன டொக்டர் ஏன் வர சொன்னீங்க ஏதாச்சும் பிரச்சினையா என்றான். இல்ல சந்தோஷ் எங்க ஹாஸ்பிடலுக்கு அவசரமா ஓ பொசிடிவ் இரத்தம் தேவையா இருக்கு. உங்கட குறூப் அது எண்டதால கேக்க தான் கூப்பிட்டேன் என்றார். சரி டொக்டர் என்றவன் இரத்தத்தை கொடுத்து விட்டு வீடு சென்றான்.

டொக்டர்க்கு அவனது இரத்தத்தை பரிசோதனைக்காக கேட்டு வாங்க வேறு வழி தெரியவில்லை. அந்த றிப்போட் சரியானதா என்று ஒப்பிட்டு பார்க்கவே இப்படி பொய் சொல்லி அவனிடம் இருந்து இரத்தம் பெற்று இருந்தார். நர்ஸ் இந்த இரத்தத்தை தனியாக சோதனைக்கு அனுப்பி 30 நிமிடத்துக்குள் றிப்போட் தாங்க என்று கூறினார். 30 வது நிமிடத்தில் வந்தது கூட அதே றிப்போட் தான். ஆம் சந்தோஷ் இரத்தத்தில் எச்ஐவி தொற்று இருந்தது. இப்படி ஒரு நல்ல குணமுள்ளவனுக்கு எயிட்ஸா எப்படி என்று குழம்பி போய் இருந்தார். இதை அவர்களிடம் சொல்லும் தைரியமே அவருக்கு இருக்கவில்லை. இருந்தும் இது சொல்லாமல் மறைக்க கூடிய விபரமாகவும் இல்லை. அதனால் தைரியத்தை வரவழைத்த படி சந்தோஷ் வீட்டை நோக்கி செல்ல ஆரம்பித்தார்.

கோலிங் பெல் ஓசை கேட்க ஓடிச்சென்று கதவை திறந்தாள் ஸ்ருதி. என்ன டொக்டர் இப்ப தான் நாங்க அங்க இருந்து வாறம் நீங்க மறுபடி இங்கயா? என்ன ஏதாச்சும் உதவி தேவையா? இரத்தம் தந்தது போதாதா? என்று கேட்டாள். இல்ல ஸ்ருதி நான் உன்னையும் சந்தோஷயும் பாத்திட்டு போகலாம் என்று தான் வந்தன் என்று கூறி அமர்ந்தார். என்ன டொக்டர் இப்பிடி களைச்சு இருக்கிறீங்க என்று கேட்ட சந்தோஷிற்கு நான் உங்களிடம் சில விஷயம் கதைக்கணும் அது தான் வந்தன் என்று கூறினார். சரி சொல்லுங்க டொக்டர் என்றவர்களை நோக்கி மெல்ல மெல்லமாக விபரத்தை சொல்ல ஆரம்பித்தார். தான் பார்த்த பிளட் றிப்போட் பின்பு அதில் நம்பிக்கை இல்லாது இப்போ எடுத்த பிளட் சோதனை எல்லாவற்றையும் சொல்லி இறுதியில் சந்தோஷ் குணப்படுத்தவே முடியாத எயிட்ஸ் என்ற உயிர்க்கொல்லி நோயினால் பீடிக்கப்பட்டிருப்பதை சொன்னார். அவர்கள் வாழ்க்கையில் முதல் தடவையாக ஓர் பேரிடி தலையில் வீழ்ந்தது.

டொக்டர் கூறியதை நம்ப முடியாதவர்களாய் செய்வதறியாது இருந்தார்கள். அவனை பரிசோதித்த வைத்தியர்கள் எப்படி ஒரு நல்ல தீய பழக்கங்கள் இல்லாத சந்தோஷ் க்கு எப்படி எயிட்ஸ் நோய் வந்தது என்று குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். இவனுக்கு இந்த நோய் ஆரம்பித்து 3,4 வருடங்கள் ஆகி இருந்தது. ஆனால் இன்று தான் அது அவனுக்கே தெரியவந்திருந்திச்சு. அவனாலேயே தனக்கு ஏற்பட்ட இந்த நோயை நம்ப முடியவில்லை. அவனுக்கு ஆறுதல் சொல்லும் நிலையில் ஸ்ருதியோ ஸ்ருதிக்கு ஆறுதல் சொல்லும் நிலையில் சந்தோஷோ இருக்கவில்லை. இருவருமே இடிந்து போய் இருந்தார்கள். இவை எதையுமே அறியாத ஆஷா அவர்களை பார்த்து கொண்டு இருந்தாள். அப்படியே கண்களை தனக்கு ஏற்பட்ட நோயிற்கான காரணத்தை தேடி மூடி சிந்தித்துக் கொண்டிருந்த சந்தோஷிற்கு அப்போது தான் அந்த நாள் நினைவிற்கு வந்தது.

ஆம். அது அவனது கல்லூரிக் காலத்தில் நடந்த விடயம் தான். ஸ்ருதியிடம் சொல்லிய காதலை அவள் ஏற்காதமையால் சில காலம் தன் வாழ்க்கையை சீரழித்து திரிந்தது. குடிப்பழக்கம், பெண்களுடன் நாட்களை செலவு செய்தது. அதில் கூட அவன் தெளிவாக இருந்தான். இந்த வாழ்க்கை ஸ்ருதிக்குடையது. அதில் அவள் தான் முதலில் வாழ வேண்டும் என்று இருந்தான். இருந்தும் அந்த காலத்தில் ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட நட்பும் அந்த நட்பினால் குடிபோதையில் அவளுடன் ஒரு நாள் தான் பாதுகாப்பற்ற முறையில் தன் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டதன் விளைவுமே இது என்று. அதை திருமணத்தின் முன்னே ஸ்ருதியிடம் கூறி இருந்தான். அந்த நிலைமைக்கு காரணமானவளே அவள் என்பதால் அதை பெரிது படுத்தவில்லை. சரி இது ஒரு விபத்து என்று நினைத்து மறந்திடு என்ற அந்த நேரத்தில் ஆறுதல் கூட கூறி இருந்தாள். இப்போ அச் சம்பவம் நினைவிற்கு வந்தமையால் அதை உறுதி செய்ய அந்த பெண்ணை தேடிச் சென்றான். அவள் அந்த நேரத்தில் உயிருடன் இல்லை. அவள் எயிட்ஸ் நோயினால் இரண்டு வருடங்களின் முன்பே இறந்து விட்டாள் என்ற அதிர்ச்சித் தகவல் தான் கிடைத்தது. இப்போது தான் அவனிற்கு தன் நோய்க்கான காரணமும் புரிந்தது. தான் ஒரு நாள் சில மணி நேரம் செய்த தவறால் இன்று தன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று கலங்கினான்.

இவை அனைத்தையும் ஸ்ருதியிடம் சொல்லி கண்ணீர் விட்டான். இது தான் வேண்டுமென்று செய்த தப்பு அல்ல. எதேர்ச்சையாக நடந்த நிகழ்வு தான் என்று கூறினான். அதை அவளுக்கு ஏற்கனவே அவன் கூறி இருந்தமையால் அவளால் அவனது நிலையை புரிந்து கொள்ள முடிந்தது. அவன் வாழ்க்கை இப்படி ஆக தானே காரணமாகி விட்டேன் என்று கதறினாள். அவன் என்றும் அவளை கூறும் செல்ல உயிர் கொல்லி என்ற வார்த்தையும் அதற்கு அவன் சொல்லும் உவமானங்களும் இன்று அவன் வாழ்க்கையில் உண்மையாகி இருந்தது. அவள் அவனிற்கு இன்று செல்ல உயிர்கொல்லியாக இல்லை. அவனின் உயிரே பறிக்கும் எயிட்ஸ்க்கே காரணமானவளாக இருந்தாள். உண்மையிலேயே அவள் தானே அவனுக்கு உயிர்கொல்லி ஆகி விட்டேனே என்று துடித்தாள். அவன் காதலை ஏற்காததால் வந்த விபரீதத்தை எண்ணி அவளால் கண்ணீர் விடுவதை தவிர வேறு எதுவுமே செய்ய முடியவில்லை.

உன் தொலைந்து போன
சந்தோசங்களை தேடித்
தந்தவளும் நான் தான் இன்று
முடிவில்லாத துயரத்தை
தொடக்கி வைத்தவளும் நான் தான்
என விம்மினாள்.

தன் நோயினால் உடலளவில் மட்டுமல்ல மனதளவிலும் சந்தோஷ் மிகவும் தள்ளாடி இருந்தான். அவனுக்கு ஆறுதல் சொல்லும் அளவிற்கு ஸ்ருதியின் மனநிலையும் இருக்கவில்லை. எத்தனையோ வைத்தியங்கள் செய்தும் அவனை குணப்படுத்த முடியவில்லை. அவர்களின் பண பலத்தால் அவனது மரணத்தை அவர்களால் தள்ளிப் போட மட்டுமே முடிந்தது. இன்று அவர்கள் வாழ்க்கையில் சந்தோசம் என்ற வார்த்தையே மறைந்து போயிருந்தது. எதையோ பறி கொடுத்தது போன்ற சூழ்நிலையே அமைந்து இருந்தது. சந்தோச பூக்கள் பூத்துக் குலுங்கிய அந்த நந்தவனத்திலே அத்தனை மலர்களும் சுடு நீர் பட்ட பூக்கள் போல கருகி இருந்தது. அவர்களின் அற்ப சந்தோசமாக இடையிடேயே அப் பூந்தோட்டத்தை மலர வைத்து அவர்களை சற்று சிரிக்க வைப்பவளாக ஆஷா இருந்தாள். அவளின் சுட்டித்தனமும் குறும்பும் அவர்களை சற்று ஆறுதல் படுத்திகொண்டு இருந்தது.

இப்படியே மருத்துவம், வேலை, சோகம் இடையிடையே ஆஷாவினால் சிறு சந்தோசம் என்று மூன்று வருடங்கள் உருண்டோடின. வெளிநாடு பல சென்று கூட அவனுக்கு சிகிச்சைகள் செய்தார்கள். குணப்படுத்த முடியாத அவனது நோய்க்கு சிகிச்சை அல்ல அவனது மரணத்தை சற்று தள்ளிப் போடுவதற்கான சிகிச்சையே அனைத்தும். நாட்கள் செல்ல செல்ல அவனது உடல்நிலை மிகவும் மோசமாகிச் சென்றது. அன்று அவனின் உடல் நிலை சற்று பிரச்சினையாக இருந்த போது டாக்டரிடம் சென்றான். அப்போ பரிசோதித்த டாக்டர் அவனை எச்ஐவி முழுமையாக பாதித்து விட்டதாக கூறினார். அப்போ தான் அவர் அவனை பார்த்து சில அறிவுரை கூறினார். சந்தோஷ் உண்மையிலேயே ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் நம்முடைய நாட்டு கலாச்சாரம். இன்று சில சந்தர்ப்பங்களில் அவை மீறப்படுகின்றன. அப்படியான சந்தர்ப்பத்தில் வேறு நபருடன் வாழ்க்கையை பகிரும் சந்தர்ப்பத்தில் பாதுகாப்பான முறைகளை கையாள வேண்டும். அதற்காக இன்று எல்லா கடைகளிலுமே மிகவும் மலிந்த விலைக்கு ஆணுறைகள் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தலாம். மேலும் அரச மருத்துவமனைகளில் இதனை இலவசமாக கூட கொடுக்கிறார்கள். இவை பயன்படுத்தும் எச்ஐவி தொற்று மனிதர்களுக்கு தொற்றுவதை தவிர்க்கலாம். இது மட்டுமல்லாது பொது இடங்களில் முகச்சவரம் செய்வதை தவிர்ப்பது சிறந்தது. அப்படி பொதுவான சலூன்களில் முகச்சவரம் செய்யும் சந்தர்ப்பத்தில் புதிய பிளேட் பயன்படுத்த சொல்வது சிறந்தது. அதற்கும் மேல் வைத்தியசாலையில் இரத்தம் பரிமாற்றும் நிலை வரும் போது எச்ஐவி தொற்று பரிசோதனை கண்டிப்பாக செய்யப்பட்டு தான் குருதி மாற்றம் செய்ய வேண்டும். அது மட்டுமில்லாமல் ஊசி மூலம் மருந்து உடலுக்குள் செலுத்தும் போது புதிய ஊசியையே பயன்படுத்த வேண்டும். இவற்றை கடைப்பிடிப்பதால் எச்ஐவி தொற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் அவரின் அறிவுரை எல்லாம் சந்தோஷை பொறுத்த வரையில் காலம் கடந்ததாகவே இருந்தது.

உண்மையில் எச்ஐவி தொற்றிய ஒருவரை எடுத்து பார்த்தால் அவருடன் சாதாரணமாக பழகுவதாலோ, அவர் உண்ட உணவு தட்டில் நாம் உண்பதாலோ, அவரை முத்தமிடுவதாலோ நமக்கு அது தொற்ற போவதில்லை. இப்படியான சந்தர்ப்பத்தில் அவரை புறந்தள்ளாமல் அவருடன் மகிழ்வாக பழகி நோய் பற்றிய சிந்தனையிலிருந்து அவரை மீட்டு சமூகத்தில் சகஜமாக பழக வைப்பதில் தான் நமது கெட்டிதனம் உள்ளது என்றார். ஆனால் சந்தோஷ் விடயத்தில் அவனின் நண்பர்களின் ஆறுதலும் சுருதியின் அன்பும் தான் அவனை இத்தனை காலம் உயிருடன் வைத்திருந்தது என்று கூறலாம். ஸ்ருதி உள்ளுக்குள் கலங்கிளாலும் சந்தோஷை சமாதானபடுத்தி ஆறுதல் படுத்திக்கொண்டிருப்பாள்.

சந்தோஷ் தன் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தான். அவர்களின் பணத்தினால் கூட அவனை காப்பாற்ற முடியாத நிலை உருவாகியது. எயிட்ஸ் நோய் அவன் உடலை முற்று முழுதாக ஆக்கிரமித்திருந்தது. அவர்களின் தெய்வ பக்தி, மருத்துவம் எல்லாவற்றிற்கும் முடிவு காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.

இப் பூமியை மகிழ்வித்த அந்த சந்தோஷை கொண்டு சொர்க்கலோகத்தை சந்தோசம் செய்வதற்காக அந்த ஜமதர்மன் கூட போட்டி போட்டு கொண்டிருந்தான். அவனுக்கு தன் உலகத்தை மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் ஏனோ தெரியவில்லை அதிக ஆசை ஏற்பட்டது. அதன் பலனாக அன்று அதிகாலை வேளை வானுலகிலுள்ள அனைவரின் ஆசிகளோடு அவனை அழைத்து செல்ல தன் எருமை வாகனத்தில் பூமியை நோக்கி விரைந்து கொண்டிருந்தான். அவனுக்கோ சந்தோஷ் இங்கு வந்தால் தன் எமலோகம் மகிழ்வாய் இருக்கும் என்ற கற்பனை மட்டுமே! அதனால் உடைந்து சின்னாபின்னமாகப் போகும் ஸ்ருதியினதும் ஆஷாவினதும் வாழ்க்கை தெரியவில்லை. மிகவும் சுயநலவாதியாக இருந்தான்.

அத்தனை நாள் சந்தோஷ் வீட்டிற்கு வருபவர்கள் அவன் வீட்டு காலிங் பெல்லை அடித்து தான் உள்ளே வருவார்கள். ஆனால் இன்று அவனையே அழைத்து செல்ல வந்திருக்கும் எமதர்மராஜன் இல்லை இல்லை எமன் அவனுக்கு அந்த பெயர் தான் சரி. ஏனென்றால் அவனிற்கு தர்மம் என்ற சொல் தெரிந்திருந்தால் இப்படி சந்தோஷ் உயிரை எடுத்து செல்ல வந்திருக்கவே மாட்டான். ஆம் அவன் பூட்டியிருந்த சந்தோஷ் வீட்டு கதவினை விலக்கி மெதுவாக தனது காலை வலது காலை வைத்தான். அவன் செய்ய போவதோ அநியாய வேலை இதில் வலது கால் தான் வேண்டி இருக்கு என்று அவனை திட்டுவதை தவிர என்ன தான் செய்ய முடியும். வந்தவனுக்கு ஸ்ருதி ஆஷா இருவரையும் அணைத்த படி தூங்கிக் கொண்டிருந்தவனை பார்க்க கூட இரக்கம் வரவில்லை. தன் ஒட்டு மொத்த சாம்ராச்சியத்தையும் ஆளுவதற்காக சந்தோஷின் உயிரை பறித்துக் கொண்டிருந்தான். ஆம் அந்த எமனின் முகத்தில் ஓர் பரம திருப்தியும் ஆனந்தமும். அவன் நினைத்ததை சாதித்த திருப்தியில் அவன் உயிரை எடுத்துக் கொண்டு அவன் வீட்டை விட்டு தன் எருமை வாகனத்தில் வானுலகை நோக்கி சென்று கொண்டிருந்தான்.

அன்று எல்லா வீட்டிற்கும் விடிவாக இருந்தது. ஸ்ருதி வீட்டை தவிர. காலை எல்லாருக்கும் முன்னாடி எழுந்து அவர்களை நித்திரையால் எழுப்பும் சந்தோஷ் அன்று அவர்கள் எழுந்தும் எழுந்திருக்கவில்லை. சந்தோஷ் என்று அழைத்து அவனை தொட்ட ஸ்ருதி அதிர்ந்தாள். சந்தோஷ் என்ற அவளின் பாரிய அலறல் கேட்டு அயலிலுள்ள அனைவரும் வந்து இருந்தார்கள். உடனடியாக வீட்டிற்கு வந்த டொக்டர் சந்தோஷ் பரிசோதித்து விட்டு அவன் இந்த உலகை விட்டே சென்றுவிட்டான் என்பதை உறுதிப்படுத்தினார். ஆம் சந்தோஷ் இந்த உலகத்தை விட்டு நிரந்தரமாக சென்றிருந்தான். சந்தோஷின் இறுதிச் சடங்கை எல்லாம் முடித்தவள் வாழ்க்கையின் பயங்கரமாக ஒடிந்து போயிருந்தாள். அவர்கள் அவனின் மரணம் பற்றி அறிந்திருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் யாரிடமும் இருக்கவில்லை. இருந்தும் அனைவரின் ஆறுதல் வார்த்தைகளாலும் அவர்கள் கூறிய மனோ பலத்தாலும் சற்று தேறினாள்.

வாழ்க்கையின் சந்தோஷ தருணங்களை மட்டுமே பார்த்திருந்த ஸ்ருதிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி வந்தமையால் செய்வதறியாது திகைத்து நின்றாள். ஆஷாவும் குடும்ப சந்தோசத்தில் ஒன்றாக வாழ பழகியமையால் தந்தையை இழந்த சோகத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தாள். அவனின் இழப்பால் ஸ்ருதியில் அதிக பாசத்தை கொண்டாள். இருந்தும் ஸ்ருதி தன் மனோ பலத்தினாலும் தைரியத்தாலும் தன் மகள் ஆஷாவுடன் வாழ்க்கையை கொண்டு நடத்த ஆரம்பித்தாள். ஆஷாவின் படிப்பு, தன் புறபெஷர் பதவி என்று தன்னுடைய கவனம் சிந்தனை எல்லாவற்றையும் அவற்றிலேயே செலவு செய்தாள். இதனால் ஓரளவு சோகத்தை மறந்து இருந்தாள். இருந்தும் அவன் கூறும் செல்ல உயிர் கொல்லி என்ற வார்த்தை அவளை இன்றும் அடி மனதில் அரித்த படியே இருந்தது. அவனின் வாழ்க்கையில் நோய் இறப்பு எல்லாவற்றுக்கும் தானே காரணமாகி விட்டேன் என்ற சோகம் அவளை விட்டு அகலவே இல்லை.

இப்படியே வருடங்கள் மூன்று உருண்டோடின. செல்ல பொண்ணாக பிறந்து சகல வசதிகளுடனும் எந்த குறையும் இல்லாது வளர்ந்து இன்று தனியே குடும்பத்தை கொண்டு நடத்தும் பொறுப்பான பெண்ணாக மாறி இருந்தாள் ஸ்ருதி. இப்போ ஆஷாவிற்கு 8 வயது நிறைவடைந்திருந்தது. பாடசாலையில் என்றுமே முதல் மாணவியாக வந்து ஸ்ருதியை சந்தோசப்படுத்திக் கொண்டு இருந்தாள். அவளின் முன்னேற்றத்தை பார்க்க சந்தோஷ் இல்லை என்ற கவலை இருந்தாலும் அவளை நினைத்து பெருமையடைந்து கொண்டு இருந்தாள். தந்தை இல்லாத குறை தெரியாமலேயே ஸ்ருதி அவளை சிறப்பாக வளர்த்தாள். தன் ஒரே உலகமே ஆஷா தான் என்று முடிவாயும் இருந்தாள். அவளின் வளர்ச்சி கல்வி இவையே அவளது பிரதான சிந்தனையாக இருந்தது.

காலையில் அவளை பாடசாலையில் விடுவதும் தன் வேலைக்கு செல்வதுமாக அவள் பொழுது போய்க் கொண்டு இருந்தது. அன்றும் அப்படி தான் ஆஷாவை பாடசாலையில் இறக்கி விட்டு தன் வேலைக்கு சென்றாள். பாடசாலையில் அடுத்த கிழமை வர போகும் பரிசளிப்பு விழாவிற்காக நடனம் பயின்று கொண்டிருந்தாள் ஆஷா. என்ன ஆஷா இன்று நீ பெரிதாக அக்கறை எடுத்து செய்யுற மாதிரி தெரியல. என்னாச்சும்மா அம்மா கூட ஏதாச்சும் பிரச்சினையா? அதால தான் அப்செற் ஆக இருக்கிறியா என்று ஆசிரியர் கேட்டார். இல்லை என்று தலை அசைத்தவள் அப்படியே சோர்ந்து போய் படுத்து விட்டாள். ஏய் ஆஷா என்னாச்சும்மா என்று கூறி உடனடியாக ஸ்ருதிக்கு போன் எடுத்தார்கள். உடனே ஸ்ருதி வந்து அவளை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றாள். அங்கு அவளை பரிசோதித்த டாக்டருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. சிறு வயது முதலே மகிழ்வாக வளர்ந்த ஸ்ருதி வாழ்க்கையில் இறைவனுக்கு என்ன தான் கோபமோ தெரியவில்லை. அவளை அழ வைத்துப் பார்ப்பதிலேயே குறியாக இருந்தான். கணவனை இழந்த சோகத்தில் இருந்து சற்று மீண்டு பிள்ளைக்காக வாழ இருந்தவளிற்கு உலகமே உடைந்து நொருங்குமளவிற்கு அதிர்ச்சியை கொடுக்க தயாரானான். ஆஷாக்கும் எயிட்ஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனை சற்றும் எதிர்பார்க்காத ஸ்ருதி மயக்கமடைந்து விழுந்தாள். மயக்கம் தெளிந்து எழுந்தவள் தனக்கு வந்த சோதனையை எண்ணி மனமுடைந்தாள். தான் அவன் காதலை ஏற்காது செய்த சிறு தவறு இன்று அவன் தன் வாழ்க்கை, குழந்தை எல்லாவற்றையும் இழக்க காரணமாகி விட்டதே என்று நொந்தாள். அவளிற்கு அந்த நிமிடத்தில் யாருடைய ஆறுதலும் சமாதானமாக இருக்கவில்லை. இந்த நிமிடமே இறந்து விடலாமா என்னும் அளவிற்கு இருந்தாள்.

ஸ்ருதி ஆரம்பத்திலயே சந்தோஷிற்கு இந்த நோய் இருப்பது தெரிந்து இருந்தால் ஆஷா உன் கர்ப்பத்தில் இருந்த வேளையே அவளை இத் தொற்று வராத அளவிற்கு வைத்தியம் செய்து இருக்கலாம். இப்போ அதற்கான சகல மருந்துகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தாய் அல்லது தந்தை அல்லது இருவருக்குமே எச்ஐவி தொற்று இருந்தால் கூட அவர்களின் குழந்தையை இந்த நோய் தாக்காதவாறு பெற்றெடுக்க முடியும். அதற்கான நிறையவே தொழில் நுட்ப முன்னற்றங்கள் புதிய மருந்துகள் என்பன உண்டு. கர்ப்பம் தரித்த இரண்டாவது மாதத்திலிருந்தே அதற்கான ஊசிகளை போட்டு ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கலாம். ஆனால் உங்க விடயத்தில் எல்லாமே இப்போ தான் தெரிய வந்துள்ளது. அதனால் எதுவுமே செய்ய முடியாது என்று கூறினார். ஸ்ருதி உங்க இரத்தத்தையும் ஒருக்கா பரிசோதனைக்கு கொடுக்கிறீங்களா? ஏனென்றால் நீங்க சந்தோஷ் கூட வாழ்ந்த வாழ்க்கையின் பரிசு தான் ஆஷா. அவளிற்கே நோய் இருப்பதால் கண்டிப்பாக உங்களுக்கும் தொற்று இருக்க வாய்ப்பு இருக்கு என்றார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க தன் இரத்தத்தை கொடுத்து விட்டு சென்றாள். சந்தோஷின் இழப்பை ஈடு செய்ய ஆஷா இருக்கிறாள் என்ற நம்பிக்கையில் இருந்தவளிற்கு இன்றைய இச் செய்தி உயிரையே உலுக்கியதாக இருந்தது.

கருவறையிலிருந்து இறங்கி
கல்லறை வரை
நடந்து போகும் தூரம் தான்
வாழ்க்கை
அந்த வாழ்க்கையில்
எனக்கு கிடைத்த
பொக்கிஷம் நீ
எதற்காகவும் உன்னை
இழக்க நான் தயாரில்லை

என்று அவள் மனசு சொன்னாலும் அவளால் கூட அவளின் நோயையோ மரணத்தையோ மாற்றமுடியாது என்று சிந்தித்துக் கொண்டிருந்தவள்………. அம்மா என்ற ஆஷாவின் குரலை கேட்டு சுய நினைவிற்கு வந்தவள் கலங்கிய கண்களுடன் அவளை அணைத்து அன்போடு உச்சி மோர்ந்தாள். அவளின் வாழ்க்கையில் நடந்த சிறிய தவறு அவளின் வாழ்க்கையையே கேள்விக் குறியாக்கியதால் வாழ்க்கையின் நாட்களை எண்ண ஆரம்பித்துள்ளதை அறியாத அந்த பிஞ்சின் அன்புக்குள் அடைக்கலமானவள் அன்போடு அவளை அணைத்துக் கொண்டு மெதுவாக நடந்தாள் அவளின் கேள்விக் குறியான வாழ்க்கையை நினைத்தபடி …..!

மறுநாள் காலை டாக்டரிடம் இருந்து வந்த அந்த தொலைபேசி அழைப்பு அவளுக்கும் எயிட்ஸ் தொற்று இருப்பதை உறுதி செய்தது. அவளின் பிடிவாதம், அவனது ஒரு நாள் வாழ்க்கையின் ஒரு சில நிமிடத் தவறு இன்று ஒரு ஒட்டு மொத்த குடும்பமே எயிட்ஸினால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை அழித்து கொண்டிருந்தது. இதை எண்ணிப் பார்த்த அவள் அன்றே சென்று தன்னுடைய வேலையை ராஜினமா செய்தாள். அவளது காலேஜில் எல்லாருமே அவளை ராஜினாமா பண்ண வேணாம் என்று வற்புறுத்தினார்கள். ஆனால் அவள் மட்டும் தன் முடிவில் உறுதியாக இருந்தாள். ராஜினாமா செய்தவள் அத்துடன் ஓய்ந்து விடவில்லை. அதற்கு பின் தான் தன் வாழ்க்கையை புதிய முறையில் கொண்டு செல்ல தீர்மானித்திருந்தாள்.

அது வரை அவர்களின் அன்பு இல்லமாக இருந்த அவர்கள் வீட்டினை அன்றிலிருந்து ஓர் எயிட்ஸ் விழிப்புணர்வு கூடமாக மாற்றினாள். அப்படியே சென்று அதற்கான அரசாங்க பதிவுகளையும் முழுமையாக மேற்கொண்டாள். தன் வாழ்க்கையை முன்னுதாரணமாக கொண்டு எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பிரசாரங்கள் செய்ய ஆரம்பித்தாள். ஒவ்வொரு கிராமங்களும் சென்று தன் சேவையை தொடர்ந்தாள். ஒரு பெண்ணின் பிடிவாதம், ஆணின் சிறு தவறு அக்குடும்பத்தையே அழிவுப்பாதைக்கு இட்டுச்சென்றதை நினைத்து நொந்த படி தன் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தாள்.
Post Reply

Return to “சிறுகதை மற்றும் தொடர்கதைகள்”