வெண்பா எழுதுவது எப்படி? எளிமையாக கவிதை வெண்பா எழுதும் முறை!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

வெண்பா எழுதுவது எப்படி? எளிமையாக கவிதை வெண்பா எழுதும் முறை!

Post by ஆதித்தன் » Sat Jul 28, 2012 1:28 am

-
[*] சீர் :
இரண்டு அல்லது மூன்று அசைகள் சேர்ந்து வருவது சீர் ஆகும். அதனை ஈரசைச்சீர் மற்றும் மூவசைச்சீர் என இரண்டு வகையாகப் பிரித்துள்ளனர். அதைப்போல் ஒற்றையாக வரும் அசையினை அசைச்சீர் என குறிப்பிடுவர், இது வெண்பாவின் ஈற்றுச்சீராக அமையும்.

1. ஈரசைச்சீர் :
நேர், நிரை ஆகிய இரண்டு அசைகளையும் பெருக்கினால் மாச்சீர்கள் இரண்டும் விளச்சீர்கள் இரண்டும் என நான்கு ஈரசைச்சீர்கள் கிடைக்கும். அவை, கீழே அட்டவணையில் வாய்ப்பாடோடு கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.

2. மூவசைச்சீர் :
மாச்சீர் மற்றும் விளச்சீரோடு மீண்டும் நேர், நிரை ஆகிய அசைகளைப் பெருக்கினால் நான்கு காய்ச்சீர் + நான்கு கனிச்சீர் ஆக மொத்தம் 8 மூவசைச்சீர்கள் கிடைக்கும். அவை, கீழே அட்டவணையில் வாய்ப்பாடோடு கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.
அசை
வாய்ப்பாடு
அசை
வாய்ப்பாடு
மாச்சீர்கள்விளச்சீர்கள்
நேர் நேர்தேமாநிரை நிரைகருவிளம்
நிரை நேர்புளிமாநேர் நிரைகூவிளம்
காய்ச்சீர்கள்கனிச்சீர்கள்
நேர் நேர் நேர்தேமாங்காய்நேர் நேர் நிரைதேமாங்கனி
நிரை நேர் நேர்புளிமாங்காய்நிரை நேர் நிரைபுளிமாங்கனி
நிரை நிரை நேர்கருவிளங்காய்நிரை நிரை நிரைகருவிளங்கனி
நேர் நிரை நேர்கூவிளங்காய்நேர் நிரை நிரைகூவிளங்கனி
நாம் பயில இருக்கும் வெண்பா பாடத்தில் மாச்சீர், விளச்சீர் மற்றும் காய்ச்சீர் ஆகிய 8 சீர் வகைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆகையால், நாம் கனிச்சீரை விட்டுவிடலாம்.

3. அசைச்சீர் :
வெண்பாவின் ஈறுதிச் சீர் ஒற்றைச் சீராகவே அமைய வேண்டும் என்பது வெண்பா விதி. அதாவது வெண்பாவின் இறுதி அடியில் வரும் மூன்றாவது சீர், நேர் அல்லது நிரை என்ற ஒற்றை அசை கொண்டு முடிய வேண்டும் என்பதுதான். இதில் நேர் என்பதனை நாள் என்றும் நிரை என்பதனை மலர் என்றும் வாய்ப்பாடாக கொள்வர். இதில் ஒர் விதிவிலக்கும் உண்டு. அதாவது, இதனோடு "குசுடுதுபுறு" எனும் வல்லின உகரம் மட்டும் சேர்ந்து வரலாம். அவ்வாறு வந்தால் நாள் > காசு (நேர்பு) ஆகவும், மலர் > பிறப்பு (நிரைபு) ஆகவும் மாறும்.

எடுத்துக்காட்டு:


பார் = நேர் = நாள்
தல = நிரை = மலர்
பாடு = நேர்பு = காசு
உலகு = நிரைபு = பிறப்பு

குறிப்பு : உலகு, பாடு போன்ற வார்த்தைகள் ஈற்றுச்சீராக அல்லாமல் வேறு இடத்தில் வரின் அதனை உலகு = நிரை/நேர் = புளிமா என்றும் பாடு = நேர்/நேர் = தேமா என்றும் பிரிக்க வேண்டும்.


இதுவரையிலும் எழுத்து, அசை மற்றும் சீர் ஆகிய மூன்றினைப் பற்றிச் சொல்லியாகிவிட்டது. அதைப்போல் முந்தையப் பாடத்தின் போது வார்த்தைகளை அசை பிரித்துக் காட்டச் சொல்லியிருந்தேன். இப்பொழுது நாம் சீர் மற்றும் அசைக்கான வாய்ப்பாடு பற்றியும் பார்த்துவிட்டதால்... இரண்டடி வெண்பாவால் எழுதப்பட்ட திருக்குறளை அசை பிரித்து, வாய்ப்பாடோடு காட்டும் பயிற்சியினைக் கொடுக்கிறேன். அதற்கான,
எடுத்துக்காட்டு 1:
குறள் :
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவான் முதற்றே உலகு

அசை:
நிரை/நேர் - நிரை/நேர் - நிரை/நேர்/நேர் - நேர்/நேர்
நிரை/நேர் - நிரை/நேர் - நிரை/நேர்

வாய்ப்பாடு:
புளிமா - புளிமா - புளிமாங்காய் - தேமா
புளிமா - புளிமா - பிறப்பு (நிரைபு)


எடுத்துக்காட்டு 2:
குறள் :
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்

அசை:
நேர்/நேர் - நிரை/நேர் - நிரை/நேர்/நேர் - நேர்/நிரை
நேர்/நேர் - நிரை/நேர் - நிரை

வாய்ப்பாடு:
தேமா புளிமா புளிமாங்காய் கூவிளம்
தேமா புளிமா மலர்

===================================================

நான் இரண்டு குறளுக்கு அசை பிரித்து, அதற்கான வாய்ப்பாடையும் கூறிவிட்டேன். அதைப்போல் நீங்களும் பயிற்சியாக இரண்டு குறளுக்கு சரியாக அசை பிரித்து வாய்ப்பாடு சொல்லுங்கள்.

இப்பயிற்சியினை செய்துவிட்டு அடுத்த பகுதியான தளை என்பதற்குள் செல்லலாம்.


தொடர்ச்சியாக படிக்க கிளிக் > http://padugai.com/tamilonlinejob/viewt ... 7848#p7602" onclick="window.open(this.href);return false;
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வெண்பா எழுதுவது எப்படி? எளிமையாக வெண்பா எழுதும் முறையை கூட்டாய் கற்கலாம் வா!

Post by ஆதித்தன் » Mon Jul 30, 2012 1:15 am

நம்மிடம் இருக்கும் ஒர் பெரிய குறை, நேற்று படித்ததை மறந்துவிட்டு இன்று புதியதாய் படிக்க ஆரம்பிப்பதுதான். இதற்கு நான் விதிவிலக்கு என்று சொல்லவில்லை, என்னையும் சேர்த்துத்தான் திட்டிக் கொள்கிறேன். அதாவது நேற்று வரை நாம் பார்த்தது, எழுத்து (குறில்-நெடில்-ஒற்று), அசை (நேர்-நிரை), மற்றும் சீர் ஆகிய மூன்றும். அதில் குறிப்பாக அசை பிரிப்பதற்கான ஒர் விதி என்று சொல்லியிருந்தேன் நினைவிருக்கிறதா? அதைப்போல், சீரில் வரும் அசைகளைக் கொண்டு சீர்க்கான வாய்ப்பாடு எழுதவும் ஒர் சில விதிமுறைகளைச் சொல்லியிருந்தேன் நினைவிருக்கிறதா? .. இதெல்லாம் மறப்பது சகஜம் தான். ஆனால், ஒர் முறை முன்பகுதிகளை வாசித்துவிட்டு இப்பாகத்தைத் தொடர்ந்தால் வெண்பா எழுதுவது மிகவும் எளிதாக இருக்கும்.

[*] தளை :
இன்று நாம் பார்க்கப் போவது, வெண்பாவின் சீர்களை இணைத்துக் கட்டும் தளை என்னும் இலக்கணத்தைப் பற்றித்தான். தளை எழு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாம் கற்கும் வெண்பாவில் அதிலுள்ள இரண்டே இரண்டு தளை தான் பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் அந்த இரண்டு தளைகள் பற்றிப் பார்க்கலாம். அவை,

1. இயற்சீர் வெண்டளை, 2. வெண்சீர் வெண்டளை.


ஒர் வெண்பாவை சரி பார்க்கும் பொழுது, நின்றசீரின் வாய்பாடோடு முன் காணப்படும் வரும்சீரின் முதல் அசை இப்படித்தான் வர வேண்டும் என்ற விதியினைக் கூறுவதுதான் தளை. அவ்வாறு எதிரெதிர் அசைகளைக் கொண்டு அமைவது இயற்சீர் வெண்டளை. அந்த விதிகள்,

1. மாச்சீர் முன் நிரை அசை வர வேண்டும்.
2. விளச்சீர் முன் நேர் அசை வர வேண்டும்.


அவ்வாறக வரின், அதற்குப் பெயர் இயற்சீர் வெண்டளை. அதாவது நேர் அசையை இறுதியாகக் கொண்ட மாச்சீரோடு நிரை அசை (நேர் >< நிரை) தளையாக வருவது மற்றும் நிரை அசையை இறுதியாகக் கொண்ட விளச்சீரோடு நேர் அசை (நிரை>< நேர்) தளையாக வருவது இயற்கையாகவே ப்ளஸ் மைனைசை ஈர்க்கும் என்பதனை காட்டுவதால் இதற்கு இயற்சீர் வெண்டளை என நினைவில் கொள்ளுங்கள். சுருக்கமாக, நேர் முன் நிரை வரும். நிரை முன் நேர் வரும் என வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கும் ஒர் விதிவிலக்கு அமைந்துள்ளது. அதற்குப் பெயர் தான் வெண்சீர் வெண்டளை. அந்த விதி,

3. காய்ச்சீர் முன் நேர் அசை வர வேண்டும்.

இங்கு காய்ச்சீரும் இறுதிச்சீராக நேர் அசையைத்தான் கொண்டிருக்கும். அதைப்போல் வரும் சீரும் நேர் அசையாகத்தான் இருக்க வேண்டும் என்பதுதான் இவ்விதி. ஆகையால் தளை தட்டாமல் வெண்பா எழுத வேண்டும் என்றால் கண்டிப்பாக, இத்தளை விதிகளை மனனம் செய்து கொள்ள வேண்டும். ஆகையால் மீண்டும் ஒர்முறைச் சொல்கிறேன்.
மாச்சீர் முன் நிரை
விளச்சீர் முன் நேர்
காய்ச்சீர் முன் நேர்
எடுத்துக்காட்டாக ஒர் குறள் வெண்பாவை எடுத்துத் தளை கட்டு பார்க்கலாம்:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவான் முதற்றே உலகு


இதில் உள்ள முதல் அடியில் அமைந்துள்ள தளைக்கட்டினை மட்டும் நான் உதாரணமாகச் சொல்கிறேன். மீதத்தை நீங்களே புரிந்து கொண்டு, இரண்டு வெண்பா எழுதி தளைக்கட்டு விதியினைச் சரி பார்த்துச் சொல்ல வேண்டும், சரியா.

நிரை/நேர் - நிரை/நேர் - நிரை/நேர்/நேர் - நேர்/நேர்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
புளிமா - புளிமா - புளிமாங்காய் - தேமா

குறளின் முதல் அடிக்கான சீரின் அசையை அலகிட்டு மேலே காண்பித்துள்ளேன். அதைப்போல், அச்சீர்க்கான வாய்ப்பாட்டை கீழே கொடுத்துள்ளேன்.

நின்றசீர் அகர'வின் வாய்பாடு புளிமா, அதாவது மாச்சீர் அப்படியென்றால் வரும்சீரின் முதல் அசை நிரை-ஆக இருக்க வேண்டும். அதாவது முதல என்ற சீரின் முதல் அசை நிரை. ஆக சரியாக இருக்கிறது.

அதைப்போல், அடுத்த நின்றசீரான முதல' மாச்சீர், அதற்கு முன் வந்த எழுத்தெல்லம்-ன் முதல் அசை நிரை. இப்படி எல்லாச் சீர்களும் சரியாக விதிப்படி அமைந்துள்ளதனை பாருங்கள்.

ஆக இன்னும் ஒர்முறை சுருக்கமாகச் சொன்னால் தேமா, புளிமா என வரும் சீர்களை அடுத்து வரும் சீர் நிரை கொண்டு தொடங்கப்பட வேண்டும். மற்ற சமயங்களில் நேர் கொண்டு தொடங்கப்பட வேண்டும். இதுக்காகத்தான் ஒரு சீரில் ஒன்றுக்கும் மேல் வார்த்தைகளோ அல்லது ஒரு வார்த்தையை இரண்டு சீராக பிரித்தோ வருகிறது. இந்த விதிகள் ஒரு அடியில் இருக்கும் சீர்களுக்கு மட்டுமில்லாமல் ஒரு அடியின் கடைசி சீருக்கும், அடுத்த அடியின் முதல் சீருக்கும் கூட ஒத்து வர்ற மாதிரி பாத்துக்கணும், சரிங்களா
!


இப்பொழுது குறளின் தளை விதிகள் எப்படிப் பொருந்துகிறது என மீண்டும் ஒர் முறைத் தெளிவாக காட்டுகிறேன்.

நிரை/நேர் - நிரை/நேர் - நிரை/நேர்/நேர் - நேர்/நேர்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
புளிமா - புளிமா - புளிமாங்காய் - தேமா

நிரை/நேர் - நிரை/நேர் - நிரை/நேர்
பகவான் முதற்றே உலகு
புளிமா - புளிமா - பிறப்பு (நிரைபு)

தளை விதிகள்:
அகர முதல - மாச்சீர் முன் நிரை
முதல் எழுத்தெல்லாம் - மாச்சீர் முன் நிரை
எழுத்தெல்லாம் ஆதி - காய்ச்சீர் முன் நேர்
ஆதி பகவன் - மாச்சீர் முன் நிரை
பகவன் முதற்றே - மாச்சீர் முன் நிரை
முதற்றே உலகு - மாச்சீர் முன் நிரை



ஒகே ... இப்பொழுது தளை தட்டுதல் என்பதனைப் பற்றிப் பார்த்துவிட்டோம். அப்படின்னா நாம் ஒர் வெண்பா எழுதும் அளவிற்கு கற்றுவிட்டோம் என்பதுதான் உண்மை. ஆனாலும் உடனே வெண்பா எழுதச் சொல்வதற்குப் பதில், இதுவரைப் பார்த்த விதிகள் எவ்வாறு வெண்பாக்களில் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதனை சரியாக அலகிட்டு, வாய்ப்பாடு எழுதி, தளை விதி சரியாக பொருந்துகிறதா? என சரிபார்க்க பழகிவிட்டால் எழுதியாக நாமும் பிழையின்றி வெண்பா எழுத ஆரம்பித்துவிடலாம். ஆகையால், இன்றும் உங்களுக்குப் பயிற்சியாக குறளின் வெண்பா தளை விதிகளைப் பிரித்துக் காட்டுவதைக் கொடுக்கிறேன். ஆளுக்கு இரண்டாவது செய்துகாட்டுங்கள். பயிற்சியினைச் செய்தப் பின்னர்...


அடுத்தப் பாடமான அடி மற்றும் தொடைக்குள் செல்லலாம்.

தொடர்ச்சியாக படிக்க > கிளிக் > http://padugai.com/tamilonlinejob/viewt ... cb7b#p7682" onclick="window.open(this.href);return false;
Post Reply

Return to “கவிதை ஓடை”