அறுகம்புல் ....அனல் அகற்றும் ...!

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
sk3662
Posts: 727
Joined: Sat Dec 08, 2012 8:31 am
Cash on hand: Locked

அறுகம்புல் ....அனல் அகற்றும் ...!

Post by sk3662 » Tue Jan 08, 2013 8:24 am

அறுகம்புல் ....அனல் அகற்றும் ...!

நமது முன்னோர்கள் எல்லாம் தலைசிறந்த அறிவாளிகள். ஆனால், என்னவோ தெரியவில்லை. முன்னோர்களின் அறிவாற்றலை உணர்ந்து கொள்ளாததோடு, அவர்களுக்கு எல்லாம் ஒரு மண்ணும் தெரியாது என்று இகழ்ந்து, அவர்கள் தந்த பொக்கிஷங்கள் பலவற்றை இழந்து விட்டோம். அடுத்த தலைமுறைக்கு அந்த அற்புதத் தகவல்களை கொண்டு சேர்க்கவும் தவறி விட்டோம்.அணுவைப் பற்றிய எண்ணம்கூட அயல்நாட்டுக்காரர்களுக்கு தோன்றாத நேரத்திலேயே அணுவைப்பற்றி அறிந்ததோடு, அதை வெளிப்படுத்தவும் செய் திருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.
ஓர் உதாரணம், ராமாயணம் சொல்லும் தகவல் இது. ராவணனின் மகன் இந்திரஜித் இறந்து கிடக்கிறான். அப்போது அவனைப் பார்த்து மண்டோதரி(தாய்) அழுது புலம்புகிறாள்.அந்தப் புலம்பலில் ஓர் ஆச்சரியமான உண்மை வெளிப்படுகிறது. மண்டோதரியின் வார்த்தைகளைப் பாருங்கள்: ‘உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்தது போலுமம்மா’ (கம்பராமாயணம் & யுத்தகாண்டம்)அணு ஆயுத செயல்பாடுகள், இப்பாடலின் ஒருசில வார்த்தைகளில் தெளிவாக விவரிக்கப் பட்டுள்ளன.அணு ஆயுதத்தை ஏவுபவர்கள் அதற்கு உண்டான பித்தானை (ஸ்விட்சை) அழுத்துவார்கள், (உக்கிட & ஏவ), அணு ஆயுதம் சீறிப்பாய்ந்து ஓடும். (அணு ஒன்று ஓடி). சீறிப்பாயும் அணு ஆயுதம், தான் தாக்க வேண்டிய இடத்தை அடைந்ததும் அங்கே வெடித்துச் சிதறி பெரும் கேட்டினை விளைவிக்கும். (உதைத்தது போலும்).இதைவிட ஓர் அதிசயத் தகவல், உலகெங்கும் ஆட்சி செலுத்தும் ஆங்கில மொழியில் ஒரு சதவீத அணுவிற்கு இன்னும்கூட பெயரிடப்படவில்லை. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே ஒரு சதவீத அணுவிற்குத் தமிழிலே பெயர் வைத்திருக்கிறார்கள்.

‘சாணிலும் ஊன் ஓர் தன்மை அணுவினை சத கூனு இட்ட கோணிலும உளன்’ (கம்பராமாயணம் & யுத்த காண்டம்). ஒரு சதவீத அணுவிற்குத் தமிழில் கோண் என்று பெயர்.கதை வடிவிலேயே மெய்ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் சேர்த்துக்கொடுத்தார்கள். அவற்றின் உள்ளீடை (அடிப்படையை) உணராமல், அந்த அற்புதமாக தகவல்களை தூக்கிப்போட்டு விட்டோம். உயர்ந்ததான அவற்றில் இருந்து ஒன்றைப் பார்க்கலாம், வாருங்கள்!எதைச் செய்தாலும் முதலில் விநாயகரை வணங்கிவிட்டு பிறகே, செயல்களை செய்வது நமது வழக்கம். நாமும் முதலில் விநாயகரைப் பார்ப்போம். நம் முன்னோர்களின் அறிவாற்றலும் தகவல்களை சொல்லிக்கொண்டு போகும் வழிமுறைகளும் நமக்குப் புரியும்.

விநாயகர் என்றாலே, நமது நினைவில் அறுகம்புல் நிழலாடும். வாசனை, மென்மை, அழகு என அனைத்தும் சேர்ந்த மலர்கள் ஏராளமாக இருக்க, அவை எதுவும் இல்லாத அறுகம்புல்லை ஏன் விநாயகருக்குச் சாற்ற வேண்டும்? காரணத்தை விநாயகப் புராணம் சொல்கிறது.யமனுடைய பிள்ளை அனலன். யாரும் அறியாமல் அவரவர் உடம்பில் நுழைவது, அவர்களின் சக்தியை உருக்கி உண்பது. இதுவே அனலன் என்ற வரம் பெற்றவன். அவன் பெற்ற வரத்தின் காரணமாக மண்ணுலகத்தோர் பலர் மாண்டார்கள். அனலன் தேவ உலகத்தில் புகுந்தான். தேவர்கள் எல்லாம் நடுங்கினார்கள்.

‘ஐந்து கரத்தோனே! ஆனை முகப் பெருமானே! அபயம்! அபயம்! காப்பாற்றுங்கள்!’’ என்று கதறியபடியே ஓடினார் கள்.
அப்போது, ‘‘அஞ்சாதீர்கள்!’’ என்று ஒரு குரல் அவர்களை தடுத்தது. குரலைத் தொடர்ந்து ஓர் அந்தணர் அவர்கள் எதிரில் நின்றார். அவரைச் சுற்றிலும் ஓர் ஒளி வெள்ளம் பரவியது.அதே நேரத்தில் அமரர் களைத் தேடி அங்கு வந்த அனலன், அவர்களைப் பார்த்து கர்ஜித்தான். தேவர்களுக்கு உடலெங்கும் நடுக்கம் பரவியது. அனைவரும் ஓடிப்போய் அந்தணரின் பின்னால் ஒளிந்தார்கள்.அனலனுக்குச் சிரிப்பு வந்தது. ‘‘அமரர்களே! அனலனான எனக்கு பயந்து, இந்த அந்தணன் பின்னால் ஒளிந்தால் விட்டு விடுவேனா?’’ என்று கேலி பேசினான்.
அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே அவன் எதிரில் இருந்த அந்தண வடிவம் ஆனை முகனாய் மாறியது. அதைப்பார்த்த அனலன் திகைத்தான்.அதை மேலும் அதிகரிக்கும் விதமாக விநாயகர் பேசினார். ‘‘அனலா! அங்கு இங்கு என்று அலைந்து, அனைவருக்குள்ளும் நுழைந்து, எல்லோரையும் ஒரு கை பார்க்கும் நீ, எனக்குள் இருக்கும் உலகங்களையும் பார்!’’ என்று சொல்லியபடியே துதிக்கையை நீட்டி அனலனை வாரி விழுங்கினார்.விளைந்தது விபரீதம்! அனலன் ஐங்கரனின் வயிற்றுக்குள் போன அந்த விநாடியில் அனைவர் வயிறும் தீப்பற்றியதைப் போல எரிந்தது. தேவர்கள் உட்பட யாவரும் தடுமாறினார்கள்.இந்தக் கொதிப்பில் இருந்து மீள என்ன வழி என்று சிந்தித்து விநாயகப் பெருமானின் திருமேனியைக் குளிர வைப்பதுதான் ஒரே வழி என்று முடிவு செய்தார்கள்.

சந்திரன் தன் அமுதமயமான கதிர்களை விநாயகப் பெருமான் மீது சொரிந்தான். கொதிப்பு அடங்கவில்லை. பால், தயிர் என்பவற்றையும் ஊற்றினார்கள். அப்போதும் பலன் இல்லை. குளிர்ச்சி மிகுந்த பாம்புகளை எடுத்து விநாயகரின் திருமேனியில் சுற்றினார்கள். அப்போதும் கொதிப்பு அடங்கவில்லை. தேவர்கள் எல்லாம் திகைத் தார்கள்.அப்போது அத்திரி, பிருகு, குத்ச, வசிஷ்ட, கௌதம, காச்யப, ஆங்கிரசர் எனும் ஏழு ரிஷிகளும் ஒரு சாண் அளவுள்ள அறுகம் புல்லை எடுத்து ஆளுக்கு 21 எனும் எண்ணிக்கையில் விநாயகரின் திருமேனியில் சாற்றினார்கள்.விளக்கை ஏற்றினால் அப்போதே இருள் விலகுவதைப் போல, அறுகம்புற்களைச் சாற்றிய அப்போதே ஆனைமுகனின் திருமேனி குளிர்ந்தது. அனைவர் கொதிப்பும் அடங்கியது. அன்றுமுதல் விநாயகர் ‘கால அலைப் பிரசமர்’ என்று திருநாமம் பெற்றார்.

இந்தக் கதையின் அடிப்படை தத்துவம் என்ன?

யாமம் (காலம்) பார்த்து உயிர்களைக் கவர்வதால், அவனுக்கு யமன் என்று பெயரிட்டார்கள். காலம் பார்த்து உயிர்களைக் கவர்வதால், காலன் எனவும் அழைக்கப்பட்டான். அவன் மகனான அனலன் என்பவன், அனல் வடிவமானவன், கொதிப்பைக் குறிப்பவன். யாருக்கும் தெரியாமல் அவரவர் உடம்பு கொதிப்பை அடைகிறது. அப்புறம் என்ன? சிக்கி சீரழிந்து யமலோகம் போக வேண்டியதுதான்.இந்த உடல் கொதிப்பை நீக்க உன்னதமான ஒன்று அறுகம்புல். பக்க விளைவுகள் இல்லாதது. எதிர்விளைவுகளை உண்டாக்காதது. அறுகம்புல்லைக் கஷாயமாகவோ அல்லது சாறாகவோ செய்து அருந்தினால் உடல் கொதிப்பு அடங்கும். ஆரோக்கியம் சீர் பெறும்.இத்தகவலை ஓர் அழகான கதை வடிவில் நமக்களித்த முன்னோர்களைப் போற்ற வேண்டாமா? போற்றாவிட்டால் கூட பரவாயில்லை. ‘பெருசுங்க, கன்னா, பின்னான்னு எழுதி வெச்சிட்டுப் போயிட்டாங்க பாரு!’ என்று இகழாமலாவது இருக்கக்கூடாதா!

வாழ்க வளமுடன் .........!
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”