அழகன் சந்திரன்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
sk3662
Posts: 727
Joined: Sat Dec 08, 2012 8:31 am
Cash on hand: Locked

அழகன் சந்திரன்

Post by sk3662 » Sun Dec 16, 2012 4:09 pm

சந்திரன் பேரழகோடு பூலோகத்தை வலம் வந்தான். பூலோகத்தின் மீது மெதுவாய் படர்ந்து, தன் அமுதமான கிரணங்களை தவழ விட்டான். உயிர்கள் குளுமையாயின. சந்திரன் மனிதர்களின் மனத்தின் மீது தன் பார்வையை பதித்தான். அவன் கிரணங்களுக்கேற்ப மனம் கூடி, குறைந்து வெவ்வேறு விதமாய் விகசித்தது. அதனால் மனோகாரகன் என்று ஜோதிடத்தில் தனி இடம் பிடித்தான்.

அப்படியே வானுலகையும் வளைத்துப் பிடித்தான்.தட்சனின் இருபத்தேழு பெண்களும் வானுலகில் வண்ணமயமான நட்சத்திரங்களாய் ஒளிர்ந்தார்கள். மொத்த உலக உயிர்களின் மீதும் தம் பார்வையை பதித்தார்கள். அதே நேரம் சந்திரனையும் ஓர் பார்வை பார்த்தார்கள். அவன் மெல்ல மலர ஆரம்பித்தவுடன் வானுலகமே விழாக்கோலம் பூண்டது. எல்லா நட்சத்திரங்களும் முகம் திருப்பி அந்த பிரகாச மழையில் நனைந்தன. அந்த அழகில் தங்களை இழந்தன.

சந்திரனின் வருகைக்காக காத்திருந்தார்கள். அவனைப் பார்த்து முகம் மலர்ந்தார்கள். விடியலில் அவன் விடுவித்துக் கொண்டபோது வெம்மையானார்கள். சந்திரனை திருமணம் செய்து கொள்ள தவமிருந்தார்கள்.

அதைக் கண்ட தட்சன் திருமணம் குறித்து சந்திரனிடம் கேட்க, அவன் சரி என்றான். தட்சன் இருபத்தேழு பெண்களையும் அவனுக்கே திருமணம் செய்து கொடுத்தான். குறையிலாது பார்த்துக்கொள் என்றான். ஆனால், சந்திரன் ரோகிணியை மட்டும் குளுமையாய் பார்த்தான். அதனால் மற்றவர்களை குறையோடு நோக்கினான். தொலைவிலேயே நிற்க வைத்தான். அதனால் அவர்கள் குன்றிப்போனார்கள். தந்தையிடம் கொட்டித் தீர்த்தார்கள். தட்சன் விஷயம் கேட்டு குமுறிப் போனான்.

'உன் அழகு குறித்து உனக்கு இவ்வளவு கர்வமா? அப்படிப்பட்ட உன் அழகு குலையட்டும்.’’ என்று கடுமையாய் சபித்தான். அவன் கோபம் சந்திரனை நிலைகுலையச் செய்தது. சந்திரன் எனும் சோமன் தன் சோபையை இழந்தான். தன் ஒளி மங்கி கருமையாய் தேய ஆரம்பித்தான். தான் செய்த தவறுக்காக மனதிற்குள் குமைந்தான். தட்சனின் பாதம் பணிந்தான். 'தொண்டை மண்டலத்தில் சுயம்புவாய் நிற்கும் சிவனை நோக்கி தவம் செய்து வா. ஒருவேளை இந்த சாபம் தீரலாம்' என்றான்.

அப்படியே சிவனை பூஜித்தான், சந்திரன். சிவனும் காட்சி தந்தார். “தட்சன் சாபம் இட்டது இட்டதுதான். ஆகவே, நீ முற்றிலும் தேயாது, தேய்வதும் மறைவதுமாக ஒரு வட்ட சுழற்சியில் வா. அதுவும் உலக உயிர்களுக்கு நன்மை புரியட்டும்’’ என்று அருளினார். சந்திரன் சந்தோஷப்பட்டான். தன் வாழ்க்கையின் ஒரு பாகத்தை ஈசனுக்கும், மறுபாகத்தை உலகுக்குமாய் பொழிந்தான்.

அப்படி சந்திரன் பூஜித்து சாபநிவர்த்தி பெற்ற தலமே சோமங்கலம். அதனாலேயே இங்குள்ள ஈசனுக்கு சோமநாதர் என்று பெயர். அம்பிகை, காமாட்சி எனும் நாமத்தோடு காட்சியருள்கிறார். சந்திரன் இங்கு தனிச் சந்நதியில் அருள்பாலிக்கிறார். தொண்டைநாட்டு நவக்கிரக தலங்களில் சந்திரனுக்கு உரிய தலமாக விளங்குகிறது. இது சிறிய அழகான கோயில்.

குலோத்துங்கச் சோழன் கஜபிருஷ்ட விமான அமைப்போடு அமைத்த அற்புதமான கோயில் இது. நான்கு வேதங்களையும் ஓதிய அந்தணர்களுக்கு இறையிலியாக இவ்வூர் வழங்கப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இக்கோயிலிலுள்ள சிலைகள் மிகவும் எழில் வாய்ந்தவை. சோழர்களின் கைவண்ணத்தில் அழகு தெறித்து, மிளிர்ந்து கிடக்கிறது. நந்திகேஸ்வரர் ஈசனுக்கு நேராக இல்லாது எதிர்புறமாய் திரும்பியிருக்கிறார். ஏனெனில் அவ்வூர் மீது திடீரென்று எதிரிகள் படையெடுத்து வந்தபோது ஹுங்காரமாய் இவர் படையைப் பார்த்துச் சீற, படை பின்வாங்கியதாம். அப்பொழுது திரும்பிய நந்தி, இன்றும் அப்படியே உள்ளது.

சந்திர பலம் குன்றிய ஜாதகக்காரர்கள், இத்தலத்து சோமநாதரையும், சந்திரனையும் வழிபட்டால் குன்றிய பலம் கூடும் என்பது ஜோதிட நியதி.

சென்னை தாம்பரத்திலிருந்தும், குன்றத்தூரிலிருந்தும் இக்கோயிலுக்குச் செல்லலாம். இரண்டு ஊர்களிலிருந்தும் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பாதை சரியில்லை... பார்த்துச் செல்லுங்கள்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”