ஸ்ரீநிவாச மூர்த்தி

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
sk3662
Posts: 727
Joined: Sat Dec 08, 2012 8:31 am
Cash on hand: Locked

ஸ்ரீநிவாச மூர்த்தி

Post by sk3662 » Sun Dec 16, 2012 4:03 pm

திருப்பதி திருமலையில் த்ருவ ஸ்ரீநிவாசர், போக ஸ்ரீநிவாசர், கொலுவு ஸ்ரீநிவாசர், உக்ர ஸ்ரீநிவாசர், மலையப்பர் என ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர். இவர்களை பஞ்சபேரர்கள் என்று அழைக்கின்றனர்.

1. த்ருவ ஸ்ரீநிவாச மூர்த்தி

இவர்தான் மூலவர். ஆனந்த நிலையத்தில் சுயம்புவாக எழுந்தவர். சாளக்ராமத்தால் ஆனவர். இவரை ஸ்தானக மூர்த்தி, த்ருவமூர்த்தி, த்ருவபேரம், கோவிந்தன், ஸ்ரீவாரி, பாலாஜி என்றெல்லாம் அழைப்பர். சுமார் பத்தடி உயரம் கொண்ட பரந்தாமன். இந்த மூல மூர்த்தியை ஏகாந்த சேவைக்குப் பிறகு பிரம்மா முதலான எல்லா தேவர்களும் வந்து வணங்குவதாக ஐதீகம்.

2. போக ஸ்ரீநிவாச மூர்த்தி

இவர், கருவறையில் மூல மூர்த்தியுடன் இருப்பவர். கௌதுக பேரர், மணவாளப் பெருமாள் என்றும் இவருக்குப் பெயர். கோயிலில் இருந்து எப்போதும் வெளியே வராத இவருக்கு தினமும் ஆகாச கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது. புதன்கிழமை தோறும் காலை இவருக்கு தங்கவாசல் முன்பு ஸஹஸ்ரகலசாபிஷேகம் நடைபெறுகிறது. அச்சமயம் மட்டும் இவரை தரிசிக்கலாம். எட்டு அங்குல உயரத்தில் வெள்ளியினாலான பெருமாள் இவர்.

3. கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி

கொலுவு என்றால் ஆஸ்தானம் என்று பொருள். தினமும் கருவறையில் தோமாலை சேவை ஆனதும் ஸ்நபன மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் எழுந்தருளும் இவரிடம் அன்றைய பஞ்சாங்க விஷயங்கள், கோயில் வரவு&செலவு, நித்திய அன்னதான நன்கொடையாளர் விவரங்கள், உற்சவ விஷயங்கள் ஆகியவற்றை ஆலய பட்டர் அறிவிப்பார். இந்நிகழ்வில் ஆலய பட்டர்கள், ஆலய ஊழியர்கள் தவிர வேறு யாரும் கலந்து கொள்ள முடியாது.

4. உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி

இவருக்கு வேங்கடத்து உறைவார், ஸ்நபன பேரர் என்றும் பெயர்கள் உண்டு. இவரே பதினான்காம் நூற்றாண்டு வரை உற்சவமூர்த்தியாக இருந்தவர். இவர் மீது சூரிய ஒளி பட்டால் உக்ரமாகி விடுவார். ஒரு முறை அவ்வாறு ஏற்பட, பல கெடுதல்கள் நிகழ்ந்து விட்டன. எனவேதான் புதிதாக மலையப்பசுவாமியை எழுந்தருளச் செய்தனர். உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் கைசிக துவாதசி அன்று மட்டும் விடியற்காலை மூன்று மணி அளவில் எழுந்தருளி பக்தர்களுக்கு கருணை புரிகிறார்.

5. உற்சவ ஸ்ரீநிவாசர் எனும் மலையப்ப சுவாமி

இவருக்கு மலை குனிய நின்ற பெருமாள், உத்ஸவ பேரர், மலையப்பர் எனும் பெயர்களும் உண்டு. நெற்றியில் பதிக்கப்பட்ட திருச்சுட்டியில் கஸ்தூரி திலகம் திகழக் காட்சியளிப்பவர் மலையப்பர்.

சமீப வருடங்களாக திருமலைக்கு வந்து கல்யாண உற்சவத்தை சேவிக்க இயலாத பக்தர்களின் குறை போக்கவும் பக்தி மார்க்கம் செழிக்கவும் கல்யாண ஸ்ரீநிவாசர் எனும் மூர்த்தியை எல்லா ஊர்களுக்கும் எழுந்தருளச் செய்து, கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. இவர் வேறு. திருமலையில் உள்ள மலையப்ப சுவாமி வேறு.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”