Page 1 of 1

முடிசார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பல் என்பதை மறவாதிரு மனமே!!!

Posted: Tue Dec 06, 2016 8:30 pm
by marmayogi
முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவில் ஒரு
பிடி சாம்பராய் வெந்து மண்ணவதுங் கண்டு பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம் உய்யவேண்டும் என்றே அறிவாரில்லையே
:
- பட்டிணத்தார்
=====================

கூட்டமாகக் கூடி உறவினர் கூவி அழ, பிணத்தைத் தூக்கிக் கொண்டு சுடுகாட்டில் இடுபவரைப் பார்த்தும், திருமணம் செய்துகொண்டு, இவ்வுலகில் நிச்சயமாய் 'இன்பம் உண்டு, இன்பம் உண்டு' என்று மயங்குபவனுக்கு, 'டொண் டொண் டொண்' என ஒலிக்கும் சாப்பறையானது, இவ்வுலக வாழ்க்கையில் இத்தகைய இன்பம் இல்லை (யாக்கை நிலையில்லை) என்னும் உண்மையை உரைக்கும்!
======================

ஒருவன் இப்பொழுது நின்று கொண்டிருந்தான்; உட்கார்ந்தான்; படுத்தான்; தன் உறவினர் அலறி அழ இறந்தான் என்று கூறப்படுவதால், புல் நுனியிலிருக்கும் நீர்த்துளியைப் போல நிலையில்லாத தன்மையுடையது இந்த உடம்பு என்று எண்ணி, இப்பொழுதே அறவினைகளைச் செய்க!.
=======================

வீழ்கின்ற மழை நீரிலே தோன்றும் குமிழிபோலப் பலமுறை தோன்றி அழியும் ஒருவகைப் பொருள் இந்த உடம்பு எனக் கருதி, இப்பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்வோம் நாம் என்று உணர்ந்து, அதற்கான அறங்களைச் செய்யும் உறுதியான நல் ஞான முள்ளவரை இப்பொ¢ய உலகில் ஒத்திருப்பவர் யார்? ஒருவரும் இல்லை!.
=======================

திருமண மண்டபம் முழங்க மண வாத்தியமாக நின்றவை, அன்றைக்கே, அங்கேயே அந்த மனிதர்க்குப் பிணப்பறையாய் ஒலித்தலும் உண்டு என நினைத்து, மாட்சிமையுடையோர் மனமானது, பிறவிப் பிணியினின்று நீங்கும் வழியையே உறுதியாய்ப் பற்றியிருக்கும்.
========================

மலையின் மீது காணப்படும் சந்திரனைப் போல, யானைத் தலையின் மீது பிடித்த குடையுடைய அரசர்களும், உலகில் இறந்தனர் என இகழப்பட்டார்களே அல்லாமல், இவ்வுலகில் இறவாது எஞ்சி இருந்தவர் யாரும் இல்லை. (மன்னாதி மன்னர்களும் மாண்டனர் என்றதனால் யாக்கை நிலையாமை உணர்த்தப்பட்டது.)

Re: முடிசார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பல் என்பதை மறவாதிரு மனமே!!!

Posted: Mon Apr 10, 2017 9:43 am
by marmayogi
ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கி பிணம் என்று பெயரிட்டு
சூரையங்காட்டிடை கொண்டு பொய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே

---திருமந்திரம்

Re: முடிசார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பல் என்பதை மறவாதிரு மனமே!!!

Posted: Wed Jun 05, 2019 6:35 pm
by marmayogi
பெண்ணை நேசித்தவர்கள் கோடி கோடி
மண்ணை நேசித்தவர்கள் கோடி கோடி
பொன்னை நேசித்தவர்கள் கோடி கோடி
உன்னை நேசித்து இருந்தால்
மாண்டு போவது பொய்யாய் போகும் என்றறியாமல்
மாண்டு போனவர்கள் கோடி கோடி
மாயவனே எம்பெருமானே

Re: முடிசார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பல் என்பதை மறவாதிரு மனமே!!!

Posted: Tue Jun 18, 2019 1:44 pm
by sujatham90
நல்ல கருத்துள்ள பதிவினை பதிந்தமைக்கு நன்றிகள் பல.