Page 1 of 1

தவமுடிவில் சொல்லும் “ஓம் சாந்தி” என்பதை இந்து மதம் அல்லாதவர்கள் ஏன் கூற வேண்டும்?

Posted: Wed Oct 05, 2016 7:24 am
by marmayogi
கேள்வி: உலக சமுதாய சேவா சங்கத்தின் தவ முறைகள் எல்லா மதங்களுக்கும் பொருத்தமானதாக இருக்கிறது. ஆனால், தவமுடிவில் சொல்லும் “ஓம் சாந்தி” என்பதை இந்து மதம் அல்லாதவர்கள் ஏன் கூற வேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள். அதற்குத் தங்கள் விளக்கம் என்ன?

பதில்: “ஓம்” என்பது இறைநிலையைக் குறிக்கும் ஒரு சங்கேத நாமகரணம். இது எந்த மதத்தையும் சார்ந்ததோ அல்லது சடங்கு முறையோ அன்று.
இறைநிலை என்பது குணம் கடந்த ஒன்று. அது குணாதீதம். அதன் ஒரு குணம் மௌனம். இறைநிலையைக் குறிக்க மௌனம் என் குணத்தை வைத்து மாத்திரைக் குறைவான “ம்” என்ற மகர மெய்யைத் தேர்ந்தெடுத்தார்கள்.

மகர ஒற்றைத் தனித்து உச்சரிக்கக் கூடாது என்பது தமிழ் இலக்கணம். அதனுடன் சேர்க்க ஒவ்வொரு உயிர் எழுத்தாகச் சோதித்துப் பார்த்தார்கள். மூலாதாரத்தில் எழுந்து, துரியத்தில் முடியும் உயிர் எழுத்தாக வருவது “ஓ” என்ற சப்தம் தான். “ஓ” என்ற சப்தத்துடன் ”ம்” என்ற மகர ஒற்றை இணைத்து “ஓம்” என்று இறைநிலைக்கு புனிதப் பெயர் வழங்கினார்கள்.

இது ஒரு நல்ல கருத்துடைய சொல்லாகத் தற்செயலாக அமைந்து விட்டது. இறைநிலை எல்லா மதத்திற்கும் பொதுவானது. எனவே இதுவும் எல்லோருக்கும் பொதுவான ஒன்றே.
சாந்தி என்றால் அமைதி என்பதாகும். “ஓம் சாந்தி” என்று தவ முடிவில் கூறூவது நாம் எல்லோரும் இறையருளான அமைதி பெறுவோம் என்பதேயாகும். விருப்பப்படாதவர்கள் வேண்டுமானால் இந்த வார்த்தைகளைக் கூறாமல் விட்டு விடட்டுமே.

அப்படி விட்டுவிட்டால் அதில் ஒரு குறுகிய கண்ணோட்டம் ஏற்பட்டு உலக சமுதாயம் என்ற விரிந்த மனப்பான்மை போய்விடும். கூடவே நமது தவமுறையில் ஒரே சீரானமுறை (Uniformity) போய்விடும்.

வாழ்க வளமுடன்!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி