Page 1 of 1

தாந்ரீக யோகம் என்றால் செக்ஸ் யோகமா ?

Posted: Sun Jul 31, 2016 12:47 pm
by marmayogi
நண்பர் - தாந்ரீக யோகம் என்றால் செக்ஸ் யோகமா ?

இராம் மனோகர் - தந்திரமும், மந்திரமும் இணைந்தது தாந்ரீகம். யோகம் என்றாலே இணைப்பதுதானே ? சிவனோடு சக்தியை இணைப்பது யோகம். அதாவது ஆத்மாவோடு உயிரை இணைப்பது யோகம். சித்தர்கள் காலத்துக்கு முன்பு வரை நமது மூதாதையர்களான ரிஷிகளால் புலன்களை அடக்கி மனதை உச்சிக்கு கொண்டு செல்வதாகவே தவமானது கொள்ளப்பட்டது. அவர்களது தீவிர புலனடக்கமும், தவமும் அவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தது. ஆனால் சுழுமுனை திறப்பது பற்றியோ, குண்டலினி மேல் ஏறுவதைப் பற்றியோ, விந்துநாத தத்துவம் பற்றியோ அவர்கள் எதுவும் சொல்லவுமில்லை, கவலைப்படவுமில்லை.

அவர்கள் மந்திரங்கள் மூலம் மனதை அடக்கி, தீவிர தவம் செய்து சித்தியை அடைந்தார்கள். அவர்களை அறியாமலேயே குண்டலினியானது சகஸ்ராரம் சென்று, அதில் உள்ள துளை வழியாக சகஸ்ராரத்திலும் கலந்து அவர்களுக்கு ஞானத்தைப் பெற்றுத் தந்தது. சித்தர்களே ஆராய்ந்து குண்டலினியைக் கண்டு உலகுக்குச் சொன்னவர்கள். சுழுமுனை நாடி திறப்பதற்கு முன் தவத்தின் தீவிரத்தால் உடலில் ஏற்படும் ப்ராண சக்தியின் திணிவு காரணமாக பண்டைய ரிஷகள் அடைந்த இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதை ஈடுகட்டவே அவர்கள் கடும் விரத முறைகளை அனுஷ்டித்து, உடலைக் கடுமையாக வருத்தி சித்தியை அடைந்தார்கள். இதையே ''ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கி '' என்றார்கள். சித்தர்களே யோகமானாலும், போகாமானாலும் இரண்டிற்கும் அடிப்படை ஆதார சக்தியாக, உயிர்சக்தியாக விளங்குவது விந்துநாத சக்தியே என்று கண்டு உலகுக்குச் சொன்னவர்கள்.

யோகப் பயிற்சியின் மேல் நிலைகளில் உடலில் அதிக அளவிலான பிராண சக்தி சேமிக்கப்படும். இதனால் உடல் இயக்கம் சீராகி, இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, விந்து சக்தியானது அதிகரிக்கும். உடல் இயக்கம் சீராக நடைபெறுவதால் விந்து நீர்த்துப் போகாமல் வீரியத்துடன் திகழும். மேலும் உடல் உஷ்ணமானது அதிகரிக்கும். இந்த உஷ்ணத்தை சரி செய்வதற்கு ஏண்ணெய் தேய்த்து குளிப்பது அவசியமாகும். இதனால் உஷ்ணம் சமன் செய்யப்பட்டு விந்து கட்டியாகும்.

எனவே நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடல் பலம் பன்மடங்கு கூடும். அதிக உயிர் சக்தியானது முரண்பட்ட உணர்வுகளுக்குக் காரணமாகி விடுவதால், அதை சமநிலைக்குக் கொண்டு வர பெண் சம்போகம் செய்யலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே திருமணமானவர்களும் குண்டலினி தவமியற்றலாம் என்பது புலனாகிறது. ஆனால், சம்போகம் என்பது உயிர் சக்தியின் வீரியத்தைச் சமன் செய்வதற்கே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதற்காக சித்தர்களால் கண்டு பிடிக்கப்பட்ட, கடைபிடிக்கப்பட்ட சில முறைகள் உண்டு. அவை வஜ்ரோலி முத்திரை, மற்றும் பரியங்க யோகம் போன்றவை.


எனினும் குண்டலினி யோகத்தின் அடிப்படையே விந்து சக்தியை செலவு செய்யாது உடலில் நிலை நிறுத்தி குண்டலினியைக் கிளப்புவதே. போகத்திற்கு உதவும் சக்தியே திசை திருப்பி யோகத்தில் மேன்மையடைவதே ஆகும். எனவே தொடக்க காலத்தில் சமநிலைக்காக அளவான புணர்ச்சியில் ஈடுபட்டாலும், நாளடைவில் தவத்தில் மேன்மையடைந்து வரவர புணர்ச்சியை குறைத்து தீவிர தவத்தில் ஈடுபட வேண்டும் என்பது கோட்பாடு. எனவே இல்லற வாசிகள் மாதம் இரு முறை சம்போகம் செய்வதால் எந்த வித குறைபாடும் நேராது என்பதே சித்தர்கள் கொள்கை. அதில் விருப்பமில்லாதவர்கள் சில ஆசனங்களைக் கடை பிடித்து, உணவைக் குறைத்துக் கொண்டு விந்து சக்தியை முறைப்படுத்தி உடல் ஆரோக்கியத்திற்காக அதை பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.

சித்தர்கள் யோக நிலையில் முன்னேற உடலுறவின் போது மன உணர்வை உடலில் அனுபவித்துக் கொண்டே, வித்தை விரையம் செய்யாமல் மனதை ஒரு நிலைப்படுத்துவார்கள். இதுவும் தாந்தரீக யோகத்தில் ஒரு யுக்தி அவ்வளவுதான்.
அதாவது யோகியானவர் யோக நிலைகள் அறிந்த பெண்ணுடன் உடல் அதிகம் உஷ்ணமடையாத வண்ணமும், சுவாசம் தறிகெட்டு ஓடாத வண்ணமும் சுவாசப் பயிற்சியை முறையாகக் கடைபிடித்து நீண்ட நேர சம்போகத்தைச் செய்வார். இந்த நேரத்தில் காம இச்சையும், மிருக உணர்வும் இருக்காது. சிந்தையை புருவ மத்தியில் வைத்து, தெய்வ சிந்தனையோடு விந்தை வெளிவிடாமல் இப்படிச் செய்யும் போது சுழுமுனையைத் திறந்து குண்டலினி மேலேறும் என்று சொல்லப்பட்டுள்ளது. உடல் புணர்ச்சியில் ஈடுபட்டாலும், மனம் தெய்வ சிந்தனையில் லயித்திருக்கும்.

விந்து சக்தியின் தீவிர அசைவினால் குண்டலினி மேலே கிளம்பும். விந்து வெளியேறாமல் கட்டியாக இருக்கச் சில மூலிகைகளையும் உட் கொண்டதாகச் சொல்லப்பட்டுள்ளது. வெளியேறத் துடிக்கும் விந்துவில் வெளியேற முடியாததால் ஏற்படும் அசைவே குண்டலினியைக் கிளப்புகிறது. இந்நிலையில் அந்தப் பெண்ணும் மனதைத் தெய்வ சிந்தனையில் நிலை நிறுத்துவது மிக அவசியம். அப்படியில்லை என்றால் அந்தப் பெண்ணானவள் மனதை ஏதாவது ஒரு ஆதரத்தின் கண் நிலை நிறுத்த வேண்டும். இப்படி இருவரும் சுவாசத்தைக் கட்டுப்படுத்தி ஈடுபடும் போது இந்திரிய சக்தி விரையமாகாமல் ஆன்மிக சக்தி வெளியே கொண்டு வரப்படும். எனவே இதன் சிறப்பை உணர்ந்து இல்லறத்தில் உள்ளவர்களும் முறையாக தவமியற்றி நிறைவை அடைய முடியும்.

:- இராம் மனோகர்