Page 1 of 1

தாங்கள் எப்போதாவது அருட்பேராற்றலின் அன்புக் குரலைக் கேட்டிருக்கிறீர்களா?

Posted: Wed Jul 27, 2016 9:46 am
by marmayogi
கேள்வி: ஐயா, தாங்கள் எப்போதாவது அருட்பேராற்றலின் அன்புக் குரலைக் கேட்டிருக்கிறீர்களா?

பதில்: பலமுறை கேட்டிருக்கிறேன். இப்போதும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். இதுதான் எனக்கு நிலைத்த பேரின்பத்தைக் கொடுக்கிறது.
நான் பல ஆண்டுகளாக குண்டலினி யோகம் செய்து வருகிறேன். உயிர்ச் சக்தியை மூலாதாரத்தில் இருந்து எழுப்பி ஆக்கினைச் சக்கரத்திற்குக் கொண்டு வருவேன். தியானம் செய்யும் போது மன அலைச் சுழல் குறைந்து குறைந்து, அமைதி நிலையை மனம் மெதுவாக எட்டும்.

ஆழ்ந்த தியான நிலையில் புலன்களைக் கடந்து, இப்பிரபஞ்சத்தைத் தாண்டி, விரிந்து, எல்லையில்லாத சுத்த வெளியில் நிற்கும் போதுதான் அறிவு, இறைநிலை, கடவுள் என்பதெல்லாம் ஒன்று தான் எனும் உண்மையை உணர்ந்தேன். நானே அறிவாகவும், அந்த இறை நிலையாகவும் ஒரே சமயத்தில் இருப்பதை உணர்ந்தேன். மனம் எல்லையற்ற அமைதியிலும், ஆனந்தத்திலும் மிதக்கத் தொடங்கியது. ஒரு புது ஒளி பிறந்தது. அந்நிலையில் என் உள்ளத்துக்குள்லிருந்து ஒரு குரல் கேட்பதை உணர்ந்தேன், அது அந்த இறையாற்றலின் அன்புக் குரலே தான் என்பதைக் கண்டுகொண்டேன்.

பேராற்றல், பேரறிவு என்ற இரு தன்மைகளைக் கொண்ட அந்த இறை ஆற்றலின் தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் பேராற்றலே அணு முதல் அண்ட சராசரமாக விரிந்துள்ளதையும் அதன் இன்னொரு தன்மையான, அறிவே இயக்க ஒழுங்காகவும் இருப்பதை அந்தக் குரல் எனக்கு உணர்த்தியது.
இந்த அனுபவத்தைத் தொடர்ந்து, பிறகு எப்பொழுது இந்தப் பிரபஞ்சத்தை நினைத்தாலும், பிரபஞ்சத்தின் எந்த ஒரு பொருளை நினைக்கும் போதும் அருட்பேராற்றலின் அன்புக் குரல் இன்னும் ஒலிப்பதை என்னால் கேட்க முடிகிறது.
வாழ்க வளமுடன்!!

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி