இந்த ஆன்மிக இடங்களில் எல்லாம் என்ன நடக்கிறது என்கிறாய்?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

இந்த ஆன்மிக இடங்களில் எல்லாம் என்ன நடக்கிறது என்கிறாய்?

Post by marmayogi » Tue Jul 26, 2016 9:43 am

தம்மபதம் பகுதி 3:
இந்த ஆன்மிக இடங்களில் எல்லாம் என்ன நடக்கிறது என்கிறாய்?


ஆசிரமங்கள், கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் என்று எல்லா இடத்திலும் புத்தியை மழுங்கடிக்கிறார்கள். ஆறுதல் சொல்கிறார்கள். ஏற்கனவே நீ விடுபட்டுப் போனவன்தான் என்கிறார்கள். எங்கேயும் போக வேண்டியதில்லை என்கிறார்கள். சிறை என்று ஏதும் இல்லை. இதுதான் உன் வீடு என்கிறார்கள். காவலன் உன் எதிரியல்ல. நண்பன் என்கிறார்கள். நீ தப்பித்துப் போய்விடுவாய் என்பதற்காக உனக்குக் காவல் இருக்கவில்லையாம். யாரும் உள்ளே நுழைந்து உனக்குத் தீங்கிழைத்து விடக் கூடாது என்று காவலிருக்கிறானாம்.

சிறைக்கு அலங்காரம் செய்து வைக்கிறார்கள். எப்படி அதை அலங்கரிப்பது என்பதற்கும் எப்படி அதை அழகான இடமாக்குவது என்றும் எல்லாவிதமான ஆலோசனைகளும் யோசனைகளும் தருகிறார்கள். ஆறுதல் சொல்கிறார்கள். எந்த அளவுக்கு ஆறுதல் பெறுகிறாயோ அந்த அளவுக்குத் தூக்கத்தில் கிடக்கிறாய். குறைந்த அளவுக்கே ஆறுதல் எனும்போது புத்தராகும் சாத்தியங்கள் அதிகமாகிப் போகின்றன. எப்போதும் விழித்திருக்கலாம். எப்போதும் உண்மையாகவே சுதந்திரமானவனாக இருக்கலாம்.

மகான்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் எல்லோரும் தாலாட்டுப் பாடுகிறார்கள். இன்னும் நன்றாகத் தூங்க வைக்கிறார்கள். மந்திரங்கள் ஆழ்ந்து தூங்கத்தான் வைக்கின்றன என்பதைக் கேட்க உனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். அதுதான் மகரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலைத் தியானம். எந்த வார்த்தையையும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தால் போதும். ராம ராம என்று சொல், அல்லது கிருஷ்ண கிருஷ்ண என்று சொல். அல்லது கிறிஸ்து கிறிஸ்து என்று சொல். அல்லது கோகோ கோலா கோகோ கோலா என்று சொல்லிக் கொண்டிரு. எது வேண்டுமோ அதை வைத்துக் கொள். எந்த ஒரு வார்த்தையையும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால் தூக்கம் தானாக வரும். மனம் சலித்துப் போகிறதல்லவா! மனம் சலித்துப் போகும்போது மழுங்கிப் போகிறது. மனம் சலித்துப் போகும்போது அதிலிருந்து விடுபட ஒரே வழி தூங்கிப் போவதுதான்.

தாய்மார்கள் இதைப் பல நூற்றாண்டுகளாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆழ்நிலைத் தியானத்தை எல்லாத் தாய்மாரும் உலகம் முழுக்கப் பயன்படுத்திக் கொண்டிருந்திருக்கிறார்கள். குழந்தை தூங்கவில்லையா? ஒரே வரியைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால் போதும். அதுதானே தாலாட்டு! எதை வேண்டுமானாலும் சொல்லலாம். திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தால் போதும். குழந்தை தூங்க ஆரம்பித்து விடும்.

ஹிப்னாடிஸத்தில் அதைத்தானே செய்கிறார்கள். எதையாவது திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியது. மந்திரமே வேண்டும் என்பதில்லை. எதுவானாலும் சரியே. சுவற்றில் கறுப்புப் புள்ளி ஒன்றை வைத்துவிட்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தால் கூடப் போதும். சில நிமிடங்களில் தூங்கிப் போவாய். பிரக்ஞை ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். எப்போதும் புதிது புதிதாக ஒன்று இருந்து கொண்டே இருந்தால்தான் பிரக்ஞை சுதாரித்து இருக்க முடியும். பிரக்ஞைக்கு இயக்கம் அவசியம். பிரக்ஞை(முழு விழிப்பு நிலை, conscious) ஒரு நீரோட்டம்.

:-ஓஷோ.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”