Page 1 of 1

இந்திரிய சக்தியை வீணாக்காமல், மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தியை மேலெழுப்பி அமிர்தம் உண்பது எக்காலம்?

Posted: Mon Jun 27, 2016 9:22 pm
by marmayogi
"மாங்காப் பாலுண்டு மலைமேல் இருப்போர்க்கு
தேங்காப் பால் ஏதுக்கடி? குதம்பாய்!
தேங்காப் பால் ஏதுக்கடி?'

குதம்பை என்றால் காதில் அணியும் ஒரு நகை. இந்தப் பாடலை எழுதியவரும் குதம்பைச் சித்தர்தான்.
இந்திரிய சக்தியை வீணாக்காமல், மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தியை மேலெழுப்பி, அந்த சக்தியானது சஹஸ்ராரத்தை அடையும் போது அங்கேயுள்ள சிவனுடன் இணைகிறது. அதன்விளைவாக அமிர்தத் தேன் உடலெங்கும் பரவும். இந்த அமிர்தத் தேனைத்தான் மாங்காப்பால் என்று இங்கே குறிப்பிடுகிறார். "மங்கா' என்றால் நிலைத்த, என்றும் பொலிவான என்று பொருள். மங்கா என்பதுதான் கவிதைக்காக மாங்கா என்று பாடப்பட்டுள்ளது.

தேங்காப்பால் என்பது சிற்றின்பங்களைக் குறிக்கும்.
பேரின்பத்தை உணர்ந்தவர்கள் சிற்றின்பத்தை நாடமாட்டார்கள். இப்படி இறை இன்பத்தை உணர்ந்தவர்களுக்கு கரும்பும் துவர்க்குமாம்; செந்தேனும் புளிக்குமாம். இதைத்தான் அருணகிரியார் "கரும்பும் துவர்த்து செந்தேனும் புளித்து அறக் கைத்ததுவே' என்று கந்தர்
அலங்காரத்தில் கூறியுள்ளார்.
அது சரி; அந்த மாங்காப்பாலை உண்ணும்விதம் எப்படி?

அழுகணிச் சித்தர் பாடல் ஒன்று இதை விளக்கும்.

"உச்சிக்கு கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
மச்சிக்கு மேலேறி வானுதிரம் தானெடுத்து
கச்சை வடம் புரிய காயலூர் பாதையிலே
வச்சு மறந்தல்லோ- என் கண்ணம்மா
வகை மோசமானேன்டி.'
ஆக்ஞையில் (இரு புருவங்களுக்கு நடுவில் தியானம் செய்து) பிரம்ம எந்திரத்தை தரிசித்து நினைத்தால் அமிர்தத் தேனைப் பருகமுடியும். பேரின்பம் பெறமுடியும் என்பது கருத்து.
மச்சி என்பது உள்நாக்குக்கு மேலே.
ஊசிமுனை வாசல் என்பது பிரம்ம எந்திரம். இதற்குதான் காயலூர் பாதை எனப் பெயர்.
வானுதிரம் என்றால் குண்டலினி சக்தி.
கச்சை வடம் என்பது இடகலை, பிங்கலை, சுழுமுனை முதலிய மூச்சு இயங்கும் நாடிகள்.

நடுநெற்றியைத்தான் திரு அண்ணாமலை என்று குறிப்பிடுவர். காரணப்பெயராகவே திருவண்ணாமலை சேத்திரம் அமைந்துள்ளது. "அண்ணாமலையை நினைத்தால் முக்தி' என்பதன் பொருள், நடுநெற்றியில் ஒளியை தரிசிப்பதுதான்.
ஞானக்கண்ணை மறந்து உலக வாழ்வில் திரிவதை, "வச்சி மறந்தல்லோ வகை மோசம் போனேன்' என்று குறிப்பிடுகிறார்.
இப்படி பேரின்பத்தை அனுபவிக்காமல் இருந்துவிட்டால் என்னவாகும்?
பிறப்பு- இறப்பு என்ற வட்டம் தொடரும்.
இறப்பு பிறப்பு
பிறப்பு இறப்பு
இறைவன் உடல் தந்ததன் நோக்கம் நிறைவேறாமல் ஆகிவிடும்போது மறுபடியும் பிறப்பு ஏற்படுகிறது.