“நான் கண்டு கொண்டேன்; நாராயண எனும் நாமம்” என்று பெரியவர்கள் கூறியுள்ளார்களே, அதன் உட்பொருள் என்ன?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

“நான் கண்டு கொண்டேன்; நாராயண எனும் நாமம்” என்று பெரியவர்கள் கூறியுள்ளார்களே, அதன் உட்பொருள் என்ன?

Post by marmayogi » Fri Jun 17, 2016 9:09 am

கேள்வி: “நான் கண்டு கொண்டேன்; நாராயண எனும் நாமம்” என்று பெரியவர்கள் கூறியுள்ளார்களே, அதன் உட்பொருள் என்ன?

பதில்: இறைநிலை என்ற பிரம்மமே எழுச்சி பெற்று சுழற்சி நிலையில் விண் என்ற நுண்துகளானது. விண்துகள்கள் மோதி இணைந்து, இயங்குகின்ற தன்மைக்கு ஏற்ப மூலகங்கள் தோன்றின. விண்ணின் அடர்த்தி நிலையே காற்று. அவ்வடர்த்தி வேறுபாட்டில் தோன்றும் ஹைட்ரஜன் வாயுவோடு ஆக்ஸிஜன் வாயுவும் சேரும் போது நீர்மப் பொருள் தோன்றுகிறது. அந்நிலைக்கு அடுத்த கெட்டிப் பொருளாக உள்ள எல்லாப் பொருளும், உயிர்களும், நீர்மப் பொருளில் இருந்துதான் தோன்றின. நீர்மப் பொருளின் சுழற்சி வேகம் மேலும் குறைந்து நெருங்கி இயங்க திடப்பொருளாக மாறுகிறது.


மண்ணில் ஒரு தாவர விதையைப் போட்டு அதற்குத் தண்ணீர் ஊற்றுகிறோம். அந்தத் தண்ணீரில் உள்ள ஹைட்ரஜன் அணு, அந்த விதையில் அமைந்துள்ள நுண் பதிவுக்கேற்ப சுழற்சி பெற்று, பஞ்சபூதத்தையும் இணைத்து அந்தந்த இரசாயணங்களாக்கி முளை, தண்டு, இலை, கிளை, அரும்பு, மொட்டு, பூ, காய் என்றெல்லாம் மாற்றம் பெறுகிறது. அதனால் உயிர்கள் அனைத்தும் நீர்மப் பொருளின் தன் மாற்றத்தாலே தான் தோன்றி வந்தன.

நாரம் + அயனம் = நாராயணம். “நாரம்” என்றால் நீர். “அயனம்” என்றால் மாற்றம். “நாராயணம்” என்றால் உயிர்கள் அனைத்தும் நீரின் மாற்றத்தால் தோன்றியது எனப் பொருள். திடப் பொருளாக உள்ள அனைத்திற்கும் மூலப் பொருளாக உள்ளது நீர்மப் பொருள் தான். நீருக்கு மூலமாக இருப்பது, எல்லாம் வல்ல இறைவனான “நீயே தான்”. அவ்வாறான நாரா + அயணமான உன்னை நான் கண்டு கொண்டேன்.

பிரணவப் பொருளான மெய்ப்பொருளின் குணம் மௌனம். அதனால் இறைவனைக் குறிக்க “அம்” என்ற மகர மெய்யால் அழைத்தார்கள் நானும் “அதுவாக” – இறைவனாகவே இருக்கிறேன் என்பது தான் “நாம் + அம் = நாமம்”.

நமது நெற்றியில் U வடிவில் இரண்டு நரம்புகள் மேல் நோக்கியுள்ளன. அது சிலருக்கு வெளிப்படையாகவே தோன்றும். அந்த நரம்புகளத் தட்பவெப்பநிலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இராமக் கட்டியை இழைத்து அதன் மேல் போட்டு விட்டார்கள். புருவ மையத்திலிருந்து உயிர் சக்தியை மேலே கொண்டு போய் “பிரம்மரந்திரம்” என்ற துரிய நிலையில் வைக்க வேண்டும் என்பதைக் காட்ட மையத்தில் சிவப்பு நிறத்தில் மேல் நோக்கி ஒரு கோடு இழுத்து விட்டார்கள். இதைப் புலன்களுக்கு காட்ட அமைந்த சடங்கு முறை நாமமாகும். மொழி வழக்கில் “நாமம் போட்டான்” என்றால் இன்று வேறு பொருளாகி விட்டது.

வாழ்க வளமுடன்!!

அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”