மவுன காலம்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

மவுன காலம்

Post by marmayogi » Sun Nov 15, 2015 6:34 am

மவுனத்தில் பழகிப் பழகித் தான் எண்ணங்களை வெற்றி கொள்ள வேண்டும். மௌனத்தில் கிடைக்கக் கூடிய நல்ல எண்ணங்கள், முன் செய்த நல்ல செயல்களின் பதிவுகள் எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக் கொண்டு அவற்றைச் செயல்படுத்தி விட்டோமானால், வாழ்க்கையில் மேம்பாடு வரும்.

இவைகளை எல்லாம் அனுபவத்தில் நீங்கள் பார்க்கலாம். நாம் பேசிக் கொண்டிருக்கும் போது, உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருக்கிறோம். நமக்கு யார் யாருடைய கருத்துக்கள் வான் காந்தத்திலிருந்து வரும் என்றால், உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உள்ளவர்களின் கருத்து தான் வரும். அவை நமது மூளையோடு சார்ந்து நமது எண்ணங்களாக வரும்.

ஆனால், மவுனத்தில் பேரமைதி நிலைக்கு வந்தால், அமைதியாக இருந்து ஆரய்ச்சி செய்து, இறைநிலையை உணர்ந்து, அதோடு தொடர்பு கொண்டால், அந்த நிலையை உணர்ந்த பெரும் மகான்கள், அவர்களுடைய ஆற்றல்கள், எண்ணங்கள் எல்லாம் நம்முடைய எண்ணங்களாக வரும். அதை எல்லாம் அனுபவித்துப் பார்க்கலாம். அனுபவித்துப் பார்ப்பதற்கு ஏற்ற காலம் தான் 'மவுன காலம்'.

எவ்வளவு காலம் மவுனம் மேற்கொள்ளலாம்?
நீங்கள் ஒரு நாள் மவுனம் இருக்கலாம். இரண்டு நாளும் இருக்கலாம். ஆனால், அந்த மவுன காலத்தில் கிடைத்த பயன்களை நினைவில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.

போகப் போக ஒரு மணி நேரம் மவுனம் இருந்தால் கூடப் போதும். ஆனாலும் அந்த ஒரு மணி நேரமும் வெற்றி அளிப்பதாக இருக்கும். இங்கேயும் அங்கேயும் மனதை ஓடவிடாது இருக்க முடியும்.

அப்படி இருந்து பழகி விட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். எந்தச் செயல் செய்தாலும் பதிவாகி அந்தந்தப் பதிவுகள் அவ்வப்போது எண்ணங்களாக வருகின்றன அல்லவா ? அதேபோல மௌன காலத்தில் நீங்கள் இறைநிலையில் இருந்து ஏற்படுத்திக் கொண்ட மவுனப் பதிவும் சாதாரண காலங்களில் கூட மேலே வந்து அவ்வப்போது அமைதி நிலைக்கு உங்கள் மனதை அழைத்துச் செல்லும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”