தியானம் செய்யும் போது அருட்காப்பு(பாதுகாப்பு வளையம்) மற்றும் சங்கல்பம் எதற்காக சொல்ல வேண்டும்?. இதனால் என்ன பயன்?.

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

தியானம் செய்யும் போது அருட்காப்பு(பாதுகாப்பு வளையம்) மற்றும் சங்கல்பம் எதற்காக சொல்ல வேண்டும்?. இதனால் என்ன பயன்?.

Post by marmayogi » Sat Nov 14, 2015 7:27 am

Image

அருட்காப்பு:
அருட் பேராற்றல் இரவும் பகலும்
எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும்
எல்லா தொழில்களிலும், உறுதுணையாகவும்
பாதுகாப்பாகவும் அமையுமாக.

சங்கல்பம்:
அருட் பேராற்றல் கருணையினால்
உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம்,
உயர் புகழ், மெய்ஞ்ஞானம் ஒங்கி வாழ்வேன்.

இப்போது அருட்காப்பு, சங்கல்பம் விளக்கம் பற்றி இங்கு பார்ப்போம்.

அருட்காப்பு:
அருட்பேராற்றல், எங்கும் நிறைந்திருந்தாலும், அது ஓரிடத்தில் தேங்கியும், அந்த இடத்தை விட்டு விலகாமலும் இருக்க, அத்தூய காந்த ஆற்றல் பாதுகாப்பு, வளையமாக அமையட்டும் என்று எண்ணத்தால அருட்காப்பு கொடுத்துப் பயன்களை அடைவது பலர் அனுபவத்தில் கண்டு, கையாளும் வழக்கம் ஆகும்.

எந்த நோக்கத்தோடு காப்புக் கொடுக்கிறோமோ அதற்கேற்ப பயன் விளையும். எடுத்த காரியத்தில் முயற்சியையும், வெற்றியையும் அது கூட்டுவிக்கும். இதனால் உயிராற்றலின் செலவு தடுக்கப்படுகிறது. ஆற்றல் பெருகிக் கொண்டே இருக்கிறது. முடிக்க வேண்டிய செயல்கள் தடையின்றி நிறைவேறுகின்றன.

இரவில் தூங்கச் செல்லும் போது அருட்காப்பை தன்னைச் சுற்றிலும், தனது வீட்டைச் சுற்றிலும் இட்டுக் கொள்ளலாம். தூக்கத்தின் போது தனக்கோ, இல்லத்திற்கோ எவ்வித தீங்கும் ஏற்படாது.

வாகனங்களில் பயணம் செய்கின்ற போது, அருட்காப்பை வாகனத்தைச் சுற்றிலும் இட்டுக் கொண்டால் பயணம் விபத்தில்லாமல் நடைபெறும். பயணம் மேற்கொள்ள இருக்கின்ற உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ அவர்கள் விடை பெறுகின்ற போது அருட்காப்பு இட்டு அனுப்பலாம். ஊருக்கு நலமாக சென்று அடைவார்கள்.

தன்னை விட வயதில் மூத்தவர்களாக இருந்தால் மெளனமாக அவர்களுக்கு அருட்காப்பைச் சொல்வது நலம். சிறியவர்களாக இருந்தால் வாய்விட்டு சொல்லி அனுப்பி வைக்கலாம். இன்னும் எத்தனையோ விதங்களில் இந்த அருட்காப்பை மெய்யுணர்வாளர்கள் பயன்படுத்தி பலன் காணலாம். புகழுக்காகவோ, பணத்திற்காகவோ இந்த அருட்காப்பினை மற்றவர்களுக்கு அளிக்கக் கூடாது. உயிருக்கு உதவியாக, ஒரு கருணை செயலாக உள்ளம் உவந்து அருட்காப்பிட வேண்டும்.

சுப காரியங்கள், கல்யாண வைபோகங்கள், கோவில் திருவிழாக்கள், தீமிதி, செடல் உற்சவம் ஆகிய விழாக்கள் நல்லபடியாக முடிவதற்காகத் தான் காப்பு கட்டுகிறார்கள். அதேப்போல் தான் இந்த அருட்காப்பும். இந்த அருட்காப்பில் எட்டு 'ம்' உள்ளது. அதாவது எட்டு திசைகளிலிருந்தும் நமக்கு அருட்தந்தை இந்த அருட்காப்பை நமக்கு வழங்கியுள்ளார்கள்.

சங்கல்பம்:
தன் வாழ்த்து என்பது உடல் நலமாகவும், மன வளமாகவும் இருக்க வேண்டும் என்று தன்னைத் தாமே வாழ்த்தி கொள்வதாகும்.

உடல்நலம், நீள் ஆயுள், நிறைச் செல்வம், உயர்புகழ், மெய் ஞானம் ஓங்கி வாழ்வேன் என்று தனக்குள்ளவே சொல்வது தான் வாழ்த்து ஆகும்.

இவ்வாறு ஒருவர் தனக்குள் சொல்லிக் கொள்ளும் போது அவருக்குள் இருக்கும் உயிர் இயக்கத்திற்கு ஓர் ஒலிப்பதிவை ஏற்படுத்தி வருகிறார். ஒருமுறை ஏற்படுத்த கூடிய இந்த பதிவு தானாகவே பலமுறை விரிந்து, விரிந்து இயங்கி கொண்டேயிருக்கும். இதுவே சங்கல்பமாகும். அதனால் உடலை நல்ல முறையில் வைத்துக் கொள்ள இயலும். சங்கல்பத்தை மனதில் நினைக்கும் போது உடலில் சிவகாந்ததில் பதிவாகி பிரதிபலிக்கிறது. அதாவது அதையே ஒலிக்கிறது. அனைத்து உடல் சிற்றறைகளும் ஒலிக்க தொடங்குகின்றன. இந்த சங்கல்பத்திற்குரிய செயல்களும், அதன் பயன்களும் எப்போதும் கிட்டும்.

தன்னையே வாழ்த்திக் கொள்வது என்பது தற்பெருமையோ அல்லது சுயநலமோ ஆகாது. ஒரு மனிதன் அறிவில், உடல்நலத்தில், செல்வத்தில் உயர்வாக இருந்தால் அது சமுதாயத்திற்கு சிறப்பான பல நன்மைகளை விளைவிக்க கூடியதாகும். எனவே ஒவ்வொருவருக்கும் உடல்நலமும், செல்வ வளமும், மனவளமும் அமைய வேண்டும். இவையெல்லாம் அமையும் வகையில் ஒருவர் தன்னை வாழ்த்திக் கொள்வதும் கூட சமுதாயத் தொண்டிற்கு ஏற்றதொரு கடமையுணர்வாகும்.

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் தனிமனிதனும், சமுதாயமும் மேன்மையடையத் தக்க வகையில் இந்த சங்கல்பத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.

உடல்நலம்:
உடல்நலம் மனித வாழ்வுக்கு மிக இன்றியமையாதது. உடல் நலமாக இருந்தால் தான் இன்பமாக வாழ முடியும். மனவளம் பெருகும். கடமைகளை நிறைவாக செய்ய முடியும். முழுமையை அடைய முடியும்.

நீள் ஆயுள்:
மனிதனுடைய ஆயுள் நீளம் 120 ஆண்டுகள் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். நீண்ட காலம் வாழ வேண்டும் என்று தனக்குள்ளாகவே நினைக்கும் பொழுது, அதற்கேற்ற முறையில் எண்ணத்தையும், செயலையும் வைத்துக் கொள்ள கூடிய பொறுப்புணர்ச்சி தானாகவே வந்துவிடும்.

ஆறறிவோடு பிறந்த மனிதனுக்கு அந்த அறிவை பெருக்கிக் கொண்டு அறிவை மேன்படுத்தி இறைநிலையோடு ஒன்றி பிறவி தொடரை அறுக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கம். மனித பிறவியின் நோக்கம் முடிய வேண்டும் என்றால் அதற்குரிய ஆயுளும் வேண்டும். ஏனென்றால் பல காலமாக, பல பிறவிகளிடையே கருத்தொடர் மூலமாக வந்த வினைப் பதிவுகளையெல்லாம் கழித்து ஆன்மாவை புனிதப்படுத்திக் கொண்டு இறைநிலையை அடைவதற்கே காலம் அதிகமாக தேவைப்படுகிறது. எனவே நீள் ஆயுள் வேண்டும்.

நிறைச் செல்வம்:
நிறைச் செல்வம் என்பது அதிகமான செல்வத்தையோ, பணத்தையோ குறிப்பதன்று. வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவு செய்து கொள்ளத்தக்க அனைத்து பொருள்களையும் குறிப்பதே நிறை செல்வம் ஆகும். தேவையின் அளவிற்கு மனதை இருத்திக் கொள்ள வேண்டும். தேவையை நிறைவு செய்யத்தக்க செல்வம் ஒரு மனிதனுக்கு அவசியம் வேண்டும்.

உயர் புகழ்:
புகழ் மூலமாகத்தான் ஒருவருக்கு மற்றவர்களோடு தொடர்பும், நட்பும் கிடைக்கின்றன. புகழ் என்பது தானாகத் தேடிப் போவது அன்று. ஒரு மனிதன் வாழும் வாழ்க்கை இந்தச் சமுதாயத்தில் எத்தனை பேருக்கு இந்த சமுதாயத்தில் நன்மை அளிக்கிறதோ, அந்த நன்மையை பெறும் மக்கள் வாழ்த்தும் வாழ்த்து. அதில் காட்டும் நன்றி இது தான் புகழாக அமைகிறது.

உயர் புகழை எப்படி வேண்டுமானாலும் பெறலாம் என்பது தவறு. உலகத்துக்கு நன்மை அளிக்கும் செயல்களையே செய்து, அதனால் மக்கள் வாழ்க்கை துன்பங்கள் நீங்கி மன நிறைவு பெற்று, இன்பம் மலர காணும் போது அம்மக்கள் உள்ளப்பூரிப்புடன் அளிக்க கூடிய வாழ்த்து தான் உயர் புகழ் என்பதாகும்.

மெய் ஞானம்:
இயற்கையின் அமைப்புகளையும், வளங்களையும், நியதிகளையும், இரகசியங்களையும், உணர்ந்து கொள்வதே மெய்ஞானம் ஆகும்.மெய் பொருள் என்பது இயற்கையின் அடிப்படையான நியதி. ஆறாவது அறிவினுடைய நோக்கம், பிறவியின் நோக்கம் மெய் பொருளை (இறை நிலையை) உணர வேண்டும். பிறவித் தொடர் அறுபட வேண்டும் என்பதே ஆகும். அதற்காகவே மனிதப் பிறவி வந்துள்ளது.

மெய் ஞானம் பெறும்போது தன் முனைப்பு ஒழிகிறது. அனைத்து தோற்றங்களும், மக்களும் இறைவனின் கூறுதான் என்ற தெளிவு ஏற்படுகிறது. இதுவரையில் உணவளித்து, கல்வி கற்க வைத்து, இன்னும் பிற வசதிகளையும் அளித்து உருவாக்கியது சமுதாயம். சமுதாயத்தின் மூலமாக வந்த உடலும், இறைநிலையின் மூலமாக வந்த அறிவும் இரண்டும் சேர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. எனவே இறைநிலை மாறாத எண்ணத்தில் கடமையைச் செய்வதற்கு மெஞ் ஞானம் வேண்டும்.

அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய் ஞானம் ஓங்கி வாழ்வேன் என்று சங்கல்பம் சொல்லி பயன் பெறலாம்.

:- வேதாத்திரி மகரிஷி
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”