உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியுமா?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியுமா?

Post by marmayogi » Sat Sep 19, 2015 11:28 pm

உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியுமா?

முடியாது.

எதிர்த்துப் போராடினால் என்ன ஆகும்?

உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியாது. அதை எதிர்த்துப் போராடும்போது நாம் வெறுப்படைய நேரிடும் என்கிறார் ஒரு
சிந்தனையாளர். அத்துடன் எந்தவொரு சூழ்நிலையிலும் நாம்
ஆனந்தமாக இருக்க முடியும் என்றும் சொல்கிறார் அவர். ஓஷோ’
தான் அவர். அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் வாருங்கள்.

★அந்தக் கிராமத்தின் ஓய்வு விடுதியில், ஒரு நாள் இரவு ஓஷோவும் மாநில அமைச்சர் ஒருவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர். இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த விடுதியைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. அமைச்சரால் தூங்கவே முடியவில்லை.

★அவர், அன்று காலை முழுவதும் பயணம் செய்திருந்தார்.மறுநாளும் அலைச்சல் இருக்கிறது. அதை நினைக்க நினைக்க அமைச்சருக்குக்
கோபம் அதிகமானது. நாய்களோ வெறித் தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக் கெடுத்தன. ஆனால், இத்தனைக்கும் மத்தியில் ஓஷோ
அடுத்த அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.

★ஓஷோவை எழுப்பிய அமைச்சர், ''என்ன மனிதர் நீங்கள்... இவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது?'' என்று புலம்பினார்.

★ஓஷோ, தனது வழக்கமான கிண்டலுடன் கூறினார்: ''அந்த நாய்கள், உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை; கோஷமிடவில்லை! பாவம், அந்த நாய்களுக்கு... இங்கு ஒரு மந்திரி தங்கி இருப்பது தெரியாது. அவை, பத்திரிகை படிப்பதில்லை. அவற்றுக்கு அறிவும் கிடையாது. அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவை, தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன. நீங்கள், தூங்குகிற வேலையைப் பாருங்கள்!'' என்றார்.

''நாய்கள் இப்படி ஓயாமல் குரைத்தால், நான் எப்படி தூங்க முடியும்?''
என்றார் அமைச்சர்.

★உடனே ஓஷோ, ''நீங்கள், அவை குரைப்பதை எதிர்த்துப் போராடுகிறீர்கள். அப்படிப் போராடாதீர்கள். பிரச்னை குரைப்பொலி அல்ல... உங்கள் எதிர்ப்பு உணர்வு. நீங்கள், சத்தத்துக்கு எதிராக இருக்கிறீர்கள்;இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால்தான் தூங்க முடியும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள். நாய்கள் உங்களது நிபந்தனையைக் கவனிக்கப்
போவது இல்லை. நீங்களும் உங்கள் நிபந்தனையை விலக்கப் போவது இல்லை. ஆனால், நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும். நடைமுறைக்குச் சாத்தியமானதும் அதுதான்! நாய்களின்
குரைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த இரவிலும் எவ்வளவு சக்தியுடன் அவை குரைக்கின்றன...பார்த்தீர்களா? ஏற்பு உணர்ச்சியுடன் கவனித்தால், குரைப்புச் சத்தமும் ஒருவகை மந்திரம்தான்!''என்றார் ஓஷோ.

★'உதவாக்கரை யோசனை!' என்று மனதுக்குள் பழித்தபடி போனார் மந்திரி. ஆனால் காலையில், மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து ஓஷோவைச் சந்தித்தார் அமைச்சர்!

★''ஆச்சரியம்தான்! எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு, நாய்கள் குரைப்பதைக் கவனித்தேன். ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே உறங்கிப் போனேன்'' என்றார் அமைச்சர்.

★ஓஷோ நமக்குச் சொல்கிறார்: ''இதை, நீ ஞாபகத்தில் வைத்துக் கொள். உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ எரிச்சல் அடைந்தால், உன் முகத்தை உள்முகமாகத் திருப்பு. எரிச்சலுக்கான காரணம் நீயாகத்தான் இருப்பாய். உனது எதிர்பார்ப்பு அல்லது ஆசை வேறாக இருந்திருக்கும். அல்லது ஏதோ ஒரு நிபந்தனையை உனக்குள் நீ விதித்திருப்பாய். அதுதான் உனது எரிச்சலுக்குக் காரணம். உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியாது. அதை எதிர்த்துப் போராடும்போது நீ வெறுப்படைகிறாய்'' என்கிறார்.

ஆகவே சுற்றியிருப்பதை, அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்!
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”