ஜென் கதை

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

ஜென் கதை

Post by marmayogi » Sun Aug 30, 2015 12:19 am

தம்மபதத்திலிருந்து இன்னொரு கதை.

★ஸ்ரோனா என்கிற இளைஞன். நல்ல பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவன். சகல சவுகர்யங்களோடும் வசதியாக வாழ்ந்தவன்.
ஆனால் அவனுக்கு இந்த ஆடம்பரங்களில் கொஞ்சம்கூட ஆசை இல்லை. ஞானத்தைத் தேடிப் புறப்பட்டான்.

★அவனுடைய துரதிருஷ்டம், ஸ்ரோனா சந்திக்கச் சென்ற குருநாதர் அவனைச் சீடனாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். ’அப்புறம் பார்க்கலாம்’ என்று திருப்பி அனுப்பிவிட்டார்.
ஸ்ரோனாவுக்கு ஏமாற்றம். ஆனாலும் விடவில்லை. அந்தக் குருநாதரிடம்தான் சீடனாகச் சேரவேண்டும் என்கிற முனைப்போடு தினந்தோறும் அவரைச் சந்திக்கச் சென்றான். அவர் எங்கே பயணம் சென்றாலும் பின்னாலேயே போனான். ஒவ்வொரு நாளும் மிகுந்த எதிர்பார்ப்புடன் அவருடைய முகத்தைப் பார்த்துக்கொண்டு நின்றான்.

★ஆனால் ஸ்ரோனா எவ்வளவுதான் கெஞ்சினாலும் குருநாதரின் மனம் இளகவில்லை. அவரும் சளைக்காமல் அவனைத் திருப்பி அனுப்பிக்கொண்டே இருந்தார்.
இப்படி குருநாதரைத் தேடி நடந்து நடந்து ஸ்ரோனாவின் காலெல்லாம் காயமாகிவிட்டது. ரத்தம் வழிய ஆரம்பித்துவிட்டது.

★இதைப் பார்த்த குருநாதர் அவனைப் பக்கத்தில் அழைத்தார். ‘நீ வீணை பார்த்திருக்கியா?’ என்று கேட்டார்.
‘பார்த்திருக்கேன் குருவே, எங்க வீட்ல இருக்கே!’

★‘அந்த வீணையில தந்திகளை ரொம்ப இறுக்கமாக் கட்டிட்டோம்ன்னா என்ன ஆகும்?’

★‘சரியா வாசிக்கமுடியாது. இன்னும் கொஞ்சம் முடுக்கினா தந்திகள் அறுந்தே போயிடும்.’
’அந்தக் கஷ்டம் நமக்கு எதுக்கு? லேசா தளர்வாக் கட்டிடுவோம். அப்போ என்ன ஆகும்?’

★‘அப்பவும் வாசிக்கமுடியாது குருவே!’
‘ஆக, வீணையில தந்திகளை ரொம்ப இறுக்கமாக் கட்டினாலும் சங்கீதம் பிறக்காது, ரொம்பத் தளர்வா விட்டுட்டாலும் சங்கீதம் பிறக்காது. இந்த ரெண்டுக்கும் நடுவே ஒரு குறிப்பிட்டவிதத்தில தந்திகளை முடுக்கினால்தான் நல்ல இசை கிடைக்கும்’ என்றார் குருநாதர்.

★‘ஞானத்தைத் தேடறதும் அதேமாதிரிதான். உன்னை நீயே ரொம்பக் கஷ்டப்பட்டு வருத்திக்கறதும் கூடாது, வந்தா வரட்டும், வராட்டி போகட்டும்ன்னு அலட்சியமா விட்டுடவும் கூடாது. இந்த ரெண்டு பாதைகளுக்கும் நடுவுல இருக்கிற அந்தச் சரியான பாதையைக் கண்டுபிடிக்கணும்.’
ஸ்ரோனாவுக்குப் புரிந்தது. குருநாதர் சொன்ன வழியில் நடந்து அவன் ஞானம் பெற்றான்.

;- ஓஷோ
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”