நினைத்ததை நினைத்தது போல நடத்தி வைக்கும்மந்திரம்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

நினைத்ததை நினைத்தது போல நடத்தி வைக்கும்மந்திரம்

Post by cm nair » Wed Nov 27, 2013 8:23 am

மகாராஷ்டிரா மாநிலத்தின் “பாகா” என்ற ஊரில் கம்பீர ராயர் என்பவர் இருந்தார். இவர் சாஸ்திரங்களையும், புராணங்களையும் நன்கு கற்றவர். இவர் மிகபெரிய பண்டிதர். கம்பீர ராயருக்கு நல்ல குணவதியான “கோனாம்பிகா” என்ற பெண் மனைவியாக அமைந்திருந்தாள். இந்த தம்பதிகளுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு “பாஸ்கர ராயர்” என்று பெயர் வைத்தார்கள். குழந்தை பாஸ்கர ராயரின் 7-வது வயதில் “சரஸ்வதி உபாசனை” செய்ய வைத்தார்கள் பெற்றோர்கள்.

பாஸ்கர ராயர் சிறு வயதிலேயே தேவி உபாசகராக இருந்ததால் இவருக்கு அம்பாளின் அருளாசி பரிபூரணமாக கிடைத்தது. தங்கள் மகனின் அறிவு திறமையை கண்ட பெற்றோர்கள், காசிப்பட்டணத்திற்கு அழைத்து சென்று “நரசிம்மானந்த நாதர்” என்னும் ஆசிரியரிடம் மேலும் பல கலை வித்தைகளை கற்றறிய சேர்த்தார்கள். குருவான நரசிம்மானந்த நாதரின் ஆசியோடும் இறைவனின் ஆசியோடும் ஏழு வயதிலேயே எல்லா வித்தைகளையும் கற்று கொண்டான் பாஸ்கர ராயர்.

“ஒரு சிறுவன் மிக சிறு வயதிலேயே சகல சாஸ்திரங்களையும் கற்றுக்கொண்டு அதை தெளிவாகவும் உச்சரிப்பதை கேள்விப்பட்ட அந்த நாட்டின் அரசர் “சபேச்வரர்” என்பவர், பாஸ்கர ராயரின் மேல் அதிக அன்பும், மரியாதையும் வைத்திருந்தார். தன் திறமையை வளர்த்து கொள்ள பல பண்டிதர்களிடம் பாடம் கற்றுகொண்டார் பாஸ்கர ராயர். காலங்கள் ஓடியது. சிறுவனாக இருந்த பாஸ்கர நாயர், இளைஞன் ஆனார். தேவிபாகவதத்தின் பெருமையை உலக மக்களுக்கு தெரிய படுத்தி, “தேவி பாகவதம்” புகழ் பெற காரணமாக இருந்தார்.

“ஆனந்தி” என்ற பெண்ணை பாஸ்கர ராயருக்கு திருமணம் செய்து வைத்தார்கள் பெற்றோர்கள். இவரின் ஆன்மிக சேவை சிறப்பின் காரணமாக, காவிரிக் கரையில் இவர் வசித்த ஊர் இன்று “பாஸ்கர ராஜபுரம்” என்று அழைக்கப்படுகிறது.

ஒரு சமயம் இவர் காசிக்கு சென்றபோது, “சந்திரசேனன்” என்ற அந்நாட்டு அரசரின் வேண்டுகோளுக்கிணங்கி சிலநாட்கள் அங்கு தங்கி இருந்தார் பாஸ்கர ராயர்.

பொறாமை குணம் கொண்டவர்களின் செயல்

ஒருவருக்கு புகழோ, பணமோ கிடைத்துவிட்டால் சிலரால் அதை கண்டு ஜீரணிக்க முடியாது. எப்படியாவது அவர்களுடைய புகழை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் செயல்படுவார்கள்.

இறைவனின் மீது அவதூறாக பேசிய இறைவனின் புகழையே வீழ்த்திவிட்டதாக சிலர் நினைப்பதுண்டு.

“பரமசிவன் அன்னபூரணியிடம் உணவுக்காக பிச்சை கேட்டவன்” என்றும், “பெருமாள் குபேரனிடம் கடன் வாங்கிய கடன்காரன்” என்றும், “உடுத்த உடையில்லாமல் ஆண்டியாக மலைமேல் நிற்கும் முருகன்” என்றும், “யாரும் பெண் தராததால் ஆற்றங்கரையிலும், குளத்திலும் பெண் தேடுகிறான் விநாயகன்” என்றும் ஒரு புலவர் இப்படி பாடலாக இயற்றி உள்ளார்.

இறைவனே இப்படி விமர்சனத்துக்கும் அவதூறுக்கும் ஆளாகும் போது, இறைவனால் உருவாக்கப்ட்ட திறமையான மனிதர்களை, அதே இறைவனால் உருவாக்கப்பட்ட பொறாமை குணம் கொண்ட மனிதர்கள் தரம் தாழ்த்தி பேசுவது ஒன்றும் ஆச்சரியம் அல்ல.

அப்படியே பாஸ்கர ராயரின் புகழை பிடிக்காதே பொறாமை குணம் கொண்ட காசி பண்டிதர்களில் சிலர், தேவையில்லமல் பாஸ்கர ராயரிடம் வம்புக்கு சென்றார்கள்.

அந்த பண்டிதர்கள் கோஷ்டி ஒன்று கூடி தங்கள் பொறாமை குணத்துக்கு ஒரு தலைமையை உருவாக்கினார்கள். அவர்களின் தலைவர் குங்குமானந்த நாதர் என்ற காசி பண்டிதர்.

லட்சம் அர்த்தம் சொல்லி அசத்திய பாஸ்கர ராயர்

“மஹா சது; சஷ்டி கோடி யோகினீ கணஸேவிதா” என்ற நாமாவளிக்கு சரியான விளக்கம் அதுவரை யாராலும் தரப்படவில்லை. “ஒரு ஆவரணத்துக்கு 64கோடி யோகினிகள் வீதம், எட்டு ஆவரணங்களில் 512 கோடி பரிவார தேவதைகள் சூழ, ஒன்பதாவது ஆவரணத்தில் அம்பிகை வீற்றிருக்கின்றாள்.” (நவாவரணம்) அந்த யோகினிகளின் பெயர்களென்ன? அவர்களின் ஆடையின் நிறம், ஆபரணங்களின் வகை, ஆயுதங்கள் என்று எதுவும் சொல்லப்படவில்லையே ஏன்? என்று ஒரு கேள்வி கேட்டார்கள் பொறாமை கோஷ்டி பண்டிதர்கள்.

அந்த பண்டிதர்களின் நோக்கமே இந்த கேள்விக்கு சரியான விளக்கத்தை இதுவரை யாரும் சொல்லவில்லை. எல்லோரும் போற்றி பாராட்டுகிற பாஸ்கர ராயராலும் இதன் விளக்கதை தர முடியாது என்றே கருதினார்கள்.

ஆனால் பாஸ்கர ராயர் அம்பாளின் பரிபூரண ஆசியை பெற்றவர் ஆயிற்றே. அதனால் பாஸ்கர ராயரின் நாவில் சமஸ்கிருதம் விளையாடியது. “மஹா சது; சஷ்டி கோடி யோகினீ கணஸேவிதா” என்ற நாமாவளிக்கு விளக்கம் தருகிறேன்-எழுதி கொள்ளுங்கள்” என்று கூறி படபடவென சொல்லிக் கொண்டே வந்தார் பாஸ்கர ராயர்.

அவர் சொல்லும் வேகத்திற்கு இணையாக பொறாமை கொண்ட பண்டிதர்களால் எழுத முடியவில்லை. உணவு உறக்கம் இல்லாமல் ஒரு லட்சம் எழுத்துக்களை சரளமாக சொல்லிக் கொண்டே வந்தார் பண்டிதர் பாஸ்கர ராயர்.

மண்ணை கவ்விய பொறாமை பண்டிதர்கள்

கேள்வி கேட்டு தோல்வியடைந்த பண்டிதர்கள், பாஸ்கர ராயர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து, “எங்களை மன்னித்து விடுங்கள். நீங்கள் அம்பாளின் அருளாசி பெற்றவர். அதனால் நீங்கள் “ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமத்தை” உச்சரித்த போது, அந்த லலிதாம்பிகையே உங்களுக்கு நேரில் காட்சி தந்து ஆசி வழங்கியவர். அம்பிகையின் மகிமையால் ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமத்திற்கு தாங்கள் உரை எழுதினீர்கள் என்பதை பொறாமை குணம் புகுந்த எங்கள் அறிவுக்கு தெரியாமல் போனது.

சுவாமி… நீங்கள் இப்போது எப்படி நாங்கள் கேட்ட கேள்விக்கு தெளிவாகவும் அழகாகவும் விளக்கம் தர முடிந்தது என்பதை தயவு செய்து கூறியருள வேண்டும்.” என்று கேட்டார்கள் பண்டிதர்கள்.

“நான் எங்கே உங்கள் கேள்விக்கு விளக்கம் அளித்தேன்.? என் உடலில் அம்பிகை கிளி உருவத்தில் இருந்து உங்களுக்கு என் மூலமாக சொல்லி கொண்டே வந்தாள்.” என்றார் பாஸ்கர ராயர். இதை கேட்ட பண்டிதர்கள், “நாங்களும் அம்பாளை தரிசிக்க முடியுமா?” என்றார்கள்.

“நல்ல மனத் தூய்மையுடன் பக்தியுடன் இருந்தால் நிச்சயமாக தரிசிக்கலாம்.” என்று கூறி, தன் அருகில் இருந்த கமண்டலத்தில் இருந்து அபிஷேக தீர்த்தத்தை பண்டிதர்கள் மீது தெளித்து, “பாருங்கள். என்னுள் அம்பாள் கிளி உருவத்தில் இருப்பதை!.” என்று கூறினார் பாஸ்கர ராயர். ஸ்ரீகாமாக்ஷி அம்மன் பாஸ்கர ராயர் உடலில் கிளி உருவத்தில் காட்சி தந்ததை கண்ட பண்டிதர்கள் அதிசயித்து போனார்கள்.

“சுவாமி எங்களுக்கு ஸ்ரீகாமாக்ஷி அம்மனின் ஆசி கிடைக்க நீங்கள் எங்களுக்கு மந்திர உபதேசம் செய்ய வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டார்கள்.

அன்னை ஸ்ரீகாமாக்ஷி அம்மனுக்கு உகந்த மந்திரத்தை உச்சரித்தாலே சகல கலைகளையும் நாம் கற்க முடியும். காமாக்ஷி என்ற முதல் எழுத்தில் கலைமகள் ஸ்ரீசரஸ்வதியையும், “மா” என்றால் அலைமகள் ஸ்ரீமகாலஷ்மியையும் தன் இரு கண்களாக கொண்டிருப்பவள். காமாக்ஷி அம்மனுக்கு உகந்த காமபீஜமான “க்லீம்” என்ற மந்திரத்தை உச்சரித்தாலே, அன்னை ஸ்ரீசரஸ்வதியின் ஆசியும் அன்னை ஸ்ரீமகாலஷ்மியின் பார்வையும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.!” என்றார் பாஸ்கர ராயர.

ஆம்.. ““கிலீம்” என்ற மந்திரத்தை பக்தியுடன் உறுதியான நம்பிக்கையுடன் உச்சரித்தால், உழைப்புக்கு பலன் கிடைத்திட நல்ல சந்தர்ப்பங்கள் அமைந்து, ஏழையும் செல்வந்தனாவான். மந்த புத்திகாரனும் பண்டிதன் ஆவான்.!” என்றார் பண்டிதர் ஸ்ரீ பாஸ்கர ராயர்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”