ஆரோக்கியம்

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
ரவிபாரதி
Posts: 65
Joined: Mon May 05, 2014 10:17 pm
Cash on hand: Locked

ஆரோக்கியம்

Post by ரவிபாரதி » Tue Jun 24, 2014 3:54 pm

தனியொருவரின் உடல், உள, சமூக நிலை ஆகியன நல்ல நிலையில் இருக்கும் நிலையே ஆரோக்கிய நிலை என உலக ஆரோக்கிய ஸ்தாபனம் (டபிள்யு.எச்.ஓ) 1948ம் ஆண்டில் வரையறுத்துள்ளது. மேலும் ஒருவருக்கு நோயற்ற நிலையை மட்டும் இது குறிப்பதல்ல எனவும் கூறப்பட்டுள்ளது. 1986ம் ஆண்டில் ஆரோக்கியம் என்பது ஒவ்வொரு நாள் வாழ்வின் மூலப்பொருள் எனவும் இதுவே தனிப்பட்ட, சமூக மூலப்பொருளாகவும் அமைவதாகவும் உலக ஆரோக்கிய ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது. ஆரோக்கியம், தனியொருவருக்கும் அதனூடு சமூகத்திற்குமான நல்ல நிலையைப் பெறுவதற்கான நன்மை நோக்கிய குறியாகும். வாழ்வதன் நோக்கமே ஆரோக்கியம் என்றில்லாமல் நல்ல வாழ்வினை தரும் மூலப்பொருள் ஆரோக்கிமாக அமையவேண்டும்.

தனியொருவருக்கு முதலில் உடலாரோக்கியமும், உள ஆரோக்கியமும் முக்கியமானதாகும்;. இவற்றில் உடலாரோக்கியமானது, ஒருவரின் பொதுவான நாளார்ந்த உயிர் வாழ்க்கைக்கான செயற்பாடுகளை செவ்வனே செய்து முடிப்பதற்கான நிலையும் சில குறிப்பிட்ட, சிறப்பான செயற்பாடுகளை செய்வதற்கான ( உ-ம் விளையாட்டு, குறிப்பான சில வேலைகள்) நல்ல உடல் நிலையையும் குறித்து நிற்கிறது. தகுதியான உடல் நிலையென்பது இதயம், குருதிக் குழாய்கள், சுவாசப்பை (நுரையீரல்) தசைத் தொகுதி போன்றன தமது வல்லமையின் மிகச் சிறந்த அளவில் செயற்படுகின்றன என்பதைக் குறித்து நிற்கிறது. ஒருவரின் உடல் ஆரோக்கியம் எனப்படுவது, அவரின் வேலையையும் ஓய்வு நேர செயற்பாடுகளையும் செய்வதற்கு, தமது வல்லமையின் நிலையில் செயற்படு நிலையாகும். இந்நிலையில் உடல் நோய் நொடி அற்றதாகவும், ஏதாவது அவசர நிலைகளைச் சமாளிக்க கூடியதானதாகவும் இருக்கும்.


உடல் ஆரோக்கியமானது, போதியளவு ஒழுங்கான தேக அப்பியாசம், நல்ல தரமான போசாக்குக் கொண்ட முழு உணவு, போதியளவான நல்ல உடல் இளைப்பாறுதல், ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. ஒருவரின் தேக ஆரோக்கியம் நல்ல நிலையில் இருப்பதற்கான அளவு கோல்கள் பின்வருமாறு அமையும்:


- கணிப்புத் திறமை
- உடன் செயலாற்றும் திறனாற்றல்
- சமநிலை
- உடல் வாகு
- செயல் தாங்குதிறன்
- இணைந்து செயலாற்றல்
- நெகிழ்வுத் தன்மை (வளையும்)
- சக்தி
- வேகம்
- செயலில் நீடித்து நிற்றல்
- விசை

ஒருவரின் ஆரோக்கியத்தில் உடல் உள ஆரோக்கியம் முக்கியமானதாகும். உள ஆரோக்கியமானது, ஒருவர் தான் வாழும் சமூகத்தில் உணர்வு சார்ந்த, உளம் சார்ந்த வகையில், சாதாரண வாழ்க்கை ஒன்றின் நிற்பந்தங்களை நல்லபடி சமாளித்து வாழ்வதற்கான நிலையாகும். உள ஆரோக்கியமானது சமூகம் சார்ந்ததாக இருக்கின்றது. சமூக பழக்கவழக்கங்கள், நடைமுறைகள், நம்பிக்கைகள் ஒருவரின் உணர்வுகளையோ அல்லது மன நிலையையோ மாற்றி விடக்கூடும். இங்கு மனநோய்க்கும் உள ஆரோக்கியத்திற்குமான வேறுபாட்டையும் கருத்தில் கொள்ளவேண்டும். உள ஆரோக்கியமென்பது, தனியொருவர் எவ்வாறு திறம்பட காரியங்களை ஆற்றுகிறார், சாதாரண வாழ்வின் சவால்களை எவ்வாறு கையாளுகிறார், தனது உறவுகளை எவ்வாறு செவ்வனே திருப்தி செய்து பேணுகிறார்;, இவற்றூடாக தனது சுதந்திர வாழ்வில் எவ்வாறு வெற்றிகரமாக செயற்படுகிறார் என்பவற்றின் அளவு கோலாகும். கடினமான சூழ்நிலைகளிலிருந்து மீண்டுவருதல் நல்ல உள ஆரோக்கியத்தின் அறிகுறியாகும்.

ஆகவே ஆரோக்கியம் என்பது சமூகமொன்றில் நன்றே வாழ நல்ல உடல் உள நிலையைப் பெற்றிருப்பதாகும்.

ஒருவரின் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பதில் பல சமூக பொருளாதார காரணிகள் பங்குபற்றுகின்றன. அவற்றில் பின்வருவனவற்றைப் பொதுவாக கருதலாம்.

- வருமானமும், சமூக அந்தஸ்தும்
- கல்வியறிவு நிலை
- சமூக உதவி வழங்கள் அல்லது அமைப்புக்கள்
- வாழ் சூழல்
- ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பு சூழல்
- வாழிட சூழல்
- ஒருவரின் தனிப்பட்ட ஆரோக்கியம் பெறும் செயற்பாடுகளும், கடின சூழலை சமாளிக்கும் திறனும்
- உயிரியல் தலைமுறை ரீதியான தொடர்புகள்
- சமூக சுகாதார அமைப்புக்கள்
- பால் (ஆண் அல்லது பெண்)
- கலாச்சாரம்

இவற்றில் சில சமூக காரணிகளாகவும் சில தனியொருவரினால் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் காணப்படுகின்றன. சமூக அமைப்புக்களிடமிருந்து ஆரோக்கியத்திற்கான உதவிகளைப் பெறும் அதே வேளை தனியொருவர் தமது ஆரோக்கியத்தைப் பெறும் பொருட்டு வேண்டிய வாழ்க்கை முறை மாற்றங்களைக் கொண்டுவர முடியும். தனியொருவர், தனதாரோக்கியத்தை நல்ல நிலையில் நன்கு பேணும் பொருட்டு சில முறைகளை வகுத்து அதனை ஒழுங்காக செயற்படுத்தவேண்டும். ஆரோக்கிய நிலையை அடைவதும், அதனை தொடர்ச்சியாகப் பேணுவதும் தொடர்சியாக நடைபெற வேண்டியதாகும். இதனடிப்படையில் பின்வரும் விடயங்களை கருதவேண்டும்.

- சுயகவனம்
- போசாக்குணவு
- விளையாட்டு வீரருக்கான போசாக்குணவு
- உடற் பயிற்சி
- சுகாதாரம்
- மனப்பழுவைக் கையாளுதல்
- இயற்கை ஆரோக்கிய முறைகள்
- வேலைத்தளச் சூழல்
- சமூக ஆரோக்கியம்
- ஆரோக்கியம் சார்ந்த விஞ்ஞானம்


சுய கவனம்

சுய கவனம் என்பதில் தனியொருவரின் ஆரோக்கியத்தை நல்ல நிலையில் பேணுதலாகும். இதில் தனியொருவர் குடும்பம், சமூகம் உள்ளடங்குகின்றனர். இவர்களின் ஆரோக்கியத்தை பேணுதல், நோயற்ற நேரம் ஆரோக்கியத்தை மீளப்பெறுதல், நோய் தடை செய்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இங்கு உடல் உள ஆரோக்கியத்தைப் பெறும் பொருட்டு, உடற்பயிற்சி செய்தல், நிறை உணவு உண்ணல், சுகாதார முறைகளைக் கடைப்பிடித்தல் ஆகியன கருதப்படுகின்றன. பாதகமான விளைவுகளைத் தருமென நன்கு அறியப்பட்டவற்றை கட்டாயம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் (உ-ம் புகைத்தல், போதைவஸ்து பாவித்தல்)

தொடர்ச்சியான சுயகவனம் செலுத்துதல் மூலம் இலகு வழியில் ஆரோக்கியத்தைப் பேணலாம்.

போசாக்குணவு

போசாக்குணவென்பது, ஆரோக்கிய வாழ்க்கையொன்றிற்கு வேண்டியவற்றை உடலுக்கு தருவதாகும். உணவாகவே இவற்றை நாம் உள்ளெடுக்கின்றோம். பல நோய் நிலைகளை, போசாக்குணவுகளை எடுப்பதன் மூலம் தவிர்த்துக் கொள்வதோடு, நோய் நிலையிலிருந்து நீங்கியும் விடலாம். டயற் என ஆங்கிலத்தில் குறிக்கப்படுவது ஒருவர் உண்ணும் உணவாகும். தரத்தில் குறைவான டயற்றை ஒருவர் உண்ணும் பொழுது போசாக்கு, உயிர்ச்சத்து குறைபாட்டினால் நோய்கள் தோன்றுகின்றன. (பெரிபெரி, ஸ்கேவி, உடல் பருமனடைதல், நீரிழிவு, சில இரத்த சுற்று சம்பந்தமான நோய்கள்). நாமுண்ணும் உணவின் கூறுகளென்ன அவை எவ்வாறு உடலுக்கு பயன்படுகிறது என்னும் அறிவு, எமதாரோக்கியத்தை பேண மிகவும் உதவும். எமதுணவில் உடலுக்கு வேண்டிய போசாக்குகள் - உயிர்ச்சத்துக்கள் போதியளவில் இல்லாது போனால் நோய்கள் தோன்றிவிடுகின்றன.


விளையாட்டு வீரருக்கான போசாக்குணவு

இங்கு உணவும், உணவுக் குறைநிரப்பிகளும், விளையாட்டு வீரர்கள் விளையாட்டில் ஈடுபடும் பொழுது, விளையாட்டிற்கு பயிற்சி அல்லது தயார் செய்யும் பொழுது, விளையாட்டின் பின், இழந்தவற்றை அல்லது தேய்ந்தவற்றை புதுப்பிக்க எவ்வாறானவை என்பதனைப் பற்றிய அறிவாகும். ஒவ்வொரு விளையாட்டும் அதன் சக்தி தேவையிலும், சக்தி வெளிவிடப்படவேண்டிய நேர அவகாசத்திலும், வேறுபட்டு நிற்கின்றன. எனவே விளையாட்டைப் பொறுத்து, வீரர்கள் என்ன உண்ணவேண்டும் என தீர்மானிக்கப்படுகிறது. ( உ-ம் நீந்தல், காற்பந்தாட்டம், மரதன் ஓட்டம், துடுப்பெடுத்தாட்டம்)

உடற்பயிற்சி

உடல் அப்பியாசம் (பயிற்சி) என்பது ஆரோக்கியத்தையும், உடலுறுதியையும் பேணுவதற்கான உடற் செய்முறையாகும். உடற் பயிற்சியின் பொழுது என்புகள், தசைகள் வலுப்பெறுவதோடு, குருதிச் சுற்றேட்டம், சுவாசம் மேம்படுகிறது. பல சந்தர்ப்பங்களில், நோயெதிர்ப்பு தன்மை மேம்படுவதால் நோய் வராது தடுக்கப்படுகிறது. மேலும் பயிற்சியின் போது கவனம் பயிற்சியில் குவிக்கப்படுவதனால், மனவழுத்தம், போன்ற நிலைகளுக்கும் தீர்வாகின்றது. நோயுற்றவர், நோயற்றவர் என்ற வேறுபாடில்லாது அனைவருக்கும் ஒழுங்கான அல்லது கிரமமான உடற்பயிற்சி வேண்டும். சில நோய் நிலையுள்ளவர்களுக்கு தேகாப்பியாசம் கட்டாயம் வேண்டியிருக்கிறது. (உ-ம் நீரிழிவு, உடற்பருமனடைந்தோர், நித்திரையின்மை, மனவழுத்தம் போன்றன). உடல் எடையையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். பல விதமான உடற்பயிற்சிகள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் தனது உடலின் தன்மைக்கும், அப்பியாச தேவைக்கும் (உ-ம் விளையாட்டு வீரர், உடற்கட்டு வளர்ப்போர்), வயதிற்குமேற்ப அப்பியாசங்களை தெரிவு செய்யவேண்டும். அப்பியாசம் செய்யும் கதியும், நேரவளவும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். யோக அப்பியாசத்தையும் ஒருவர் தெரிவு செய்யலாம். அளவுக்கும் அல்லது தேவைக்கும் மேலாக உடற்பயிற்சி செய்வது உடலிற்கு தீங்காக அமையலாம். உடற்பயிற்சியின் பின்பு உடலிற்கு ஓய்வு (மீள் கட்டமைப்பிற்காக) தேவைப்படுகின்றது. போதியளவு ஓய்வு கிடைக்காத பொழுது, பாவித்தழிக்கப்பட்ட போசாக்கு கூறுகள் மீளக் கிடைக்காத பொழுது உடல் நோய் நிலைகள் தோன்றுவதற்கு இடமளிக்கிறது.

சுகாதாரம்

சுத்தம் சுகம் தரும் என்று கூறப்படும். நோய் தொற்றை உடல் வருத்தங்களையும் தவிர்த்துக் கொள்ளுமுகமாக அனைவரும் உடலைச் சுத்தமாக பேணவேண்டும். காலையில் பல்துலக்கி, குளித்து அல்லது முழுகி, நாவழித்து, அல்லது காலைக்கடன்களை காலையிலேயே முடித்தல் நல்லது. உணவுத் தயாரிப்பு பாத்திரங்களையும், சமையலின் முன்பும் பின்பும் கழுவுதல், உணவின் முன்பும் பின்பும் கைகளையும் கழுவவேண்டும். மலசல கூடத்திற்கு போயிருந்தால் தொற்றுநீக்கி பயன்படுத்தி கைகளைக் கழுவவேண்டும்.


மனவழுத்தக் கட்டுப்பாடு

நீண்ட நாளாக விருக்கும் உளவியல் தாக்கங்கள், உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை வலுக்குறைப்பதன் மூலம் உடலாரோக்கியத்தைக் குலைத்துவிடுகிறது. மனவழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய முறைகளைக் கையாளுவதன் மூலம்; மனவழுத்தத்தைக் குறைக்கமுடிவதோடு. மனவழுத்த நிலையை சகித்துக் கொள்ளும் நிலையுமேற்படுகிறது. உடல் அப்பியாசம் செய்தல், தியானம், ஆக்க வழிதிடசிந்தனை, உடலையும் மனதையும் அமைதியுறச் செய்யும் முறைகள் (ரிலாக்கேசன் முறைகள்) போன்றவை மனவழுத்தத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரக்கூடிய முறைகளாகும். இம்முறைகளை அப்பியாசிக்கும் பொழுது, வாழ்க்கைக்கு வேண்டிய செயற்திறனிலும், செய்யும் நுட்பத்திலும் முன்னேற்றம் காணப்படுவதோடு தன்னம்பிக்கை வலுப்படுகிறது. மனவழுத்தம் தந்த பட்டறிவு மீண்டுமொரு சந்தர்ப்பத்தை தவிர்க்கவுதவுகிறது. உடல் வருத்தம் உளத்தையும், உளவருத்தம் உடலையும் பாதிக்கும். உடல், உள நிலைகள் ஆரோக்கியமாக இருந்தால்தான் தனியொருவரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.


இயற்கையான ஆரோக்கியம்

பல, இயற்கையான முறைகளால் ஆரோக்கியத்தைப் பேணக்கூடிய வழிகள் பலவாண்டுகாலம் பயன்பாட்டில் இருந்துவருகின்றன. அலோபதிக் மருத்துவ முறை ஒப்பீட்டு ரீதியில் குறுகிய கால சரித்திரத்தைக் கொண்ட போதிலும், அதுவே முதன்மையான மருத்துவ முறையாக நடைமுறையிலுள்ளது. ஏனைய சிகிச்சை முறைகள் பதிலான சிகிச்சை முறையாகவோ (ஓல்ரநேரிவ்) அல்லது ஒத்துதவும் முறையாகவோ (கொம்பிளிமென்ரறி) கருதப்பட்டு செய்யப்படுகின்றன. இம்முறைகளில் சில பின்வருமாறு:

- உணவு முறை
- உடற்பயிற்சி
- மூலிகை வைத்தியம்
- கோமியோபதி
- அக்கியூபஙசர்
- ஆயுர்வேதம்
- நச்சுரோபதி
- முசாச் சிகிச்சைமுறை
- அரோமாதரப்பி
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”