கொல்லம் - கொல்லம் கண்டார் இல்லம் திரும்பார்

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12147
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

கொல்லம் - கொல்லம் கண்டார் இல்லம் திரும்பார்

Post by ஆதித்தன் » Mon Jan 14, 2013 4:51 am

கொல்லம் - கொல்லம் கண்டார் இல்லம் திரும்பார் என்பது அந்நாளைய பழமொழி!

குய்லான் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட இந்த கொல்லம் நகரம் அதன் தனித்தன்மையான கலாச்சாரம் மற்றும் வணிகம் போன்றவற்றுக்கு பெயர் பெற்று விளங்குகிறது. கடற்கரை நகரமான இது அஷ்டமுடி ஏரிக்கரையில் அமைந்துள்ளது. கொல்லம் மாவட்டத்தின் தலைநகரமும் இதுவே.
கொல்லம்

கேரளாவின் கலாச்சாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கொல்லம் நகரின் பங்கு மிக முக்கியமானதாகவும் அறியப்படுகிறது. சீனா, ரோம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் பண்டைய காலத்திலேயே வலிமையான வியாபாரத்தொடர்புகளை கொல்லம் நகரம் பெற்றிருந்ததாக வரலாற்றுச்சான்றுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் மற்ற நகரங்களுடனும் வணிகப்பரிமாற்றங்களை கொண்டிருந்த இந்நகரம் பின்னாளில் கேரள மாநிலத்தின் முதன்மையான தொழில் நகரங்களில் ஒன்றாகவும் மாறியுள்ளது.

இன்று முந்திரி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் உலகிலேயே மிகப்பெரிய இடத்தை வகிக்கும் நகரமாக இது புகழ் பெற்றிருக்கிறது. கேரளாவில் கொல்லத்தை முந்திரி நகரம் என்றும் அழைக்கின்றனர். தென்னை நார் தொழிலில் பலவித முன்னேற்றங்களை கண்டு சிறுதொழில் அம்சங்களின் கேந்திரமாகவும் இது விளங்குகிறது.

செழிப்பான கலாச்சாரம்

‘கொல்லம் கண்டவர் இல்லம் திரும்பார்’ என்று அந்நாளில் ஒரு மலையாளப்பழமொழி உண்டு. அதாவது கொல்லம் நகருக்கு விஜயம் செய்யும் ஒருவர் அந்த அளவுக்கு அதன் கலாச்சாரம் மற்றும் செழிப்பில் மயங்கி விடுவார் என்பது அதன் பொருள்.

இன்றும் நாம் கொல்லத்துக்கு விஜயம் செய்தால் அந்த பழமொழி எப்படி உருவாகியிருக்கக்கூடும் என்பதை கண்கூடாக பார்த்து புரிந்து வியக்கலாம். கொல்லம் நகரமானது பண்டைக்காலத்தில் ஒரு கல்வித்தலமாகவும் பாரம்பரிய ஸ்தலமாகவும் கோலோச்சியிருக்கிறது.

தென்னிந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் அறிஞர்கள் இங்கு விஜயம் செய்திருக்கின்றனர். இலக்கியத்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் இந்த கொல்லம் பகுதியிலிருந்து பெறப்பட்டுள்ளன.

14ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘லீலேதிலகம்’ மற்றும் ‘ உன்னுநீலி சந்தேசம்’ என்ற இரு மலையாள மொழி காப்பியங்கள் இந்த கொல்லம் ஸ்தலத்தில் பிறந்திருக்கின்றன.

புகழ்பெற்ற கலைஞரான கொட்டாரக்கரா தம்புரான் முயற்சியில் கதகளி எனும் அற்புத நடனக்கலை வடிவம் இங்கு புதுவடிவம் எடுத்து வளர்ச்சி அடைந்துள்ளது. கே.சி.கேசவ பிள்ளை, பரவூர் கேசவன் ஆசான் மற்றும் ஈ.வி.கிருஷ்ண பிள்ளை போன்ற ஆகச்சிறந்த மேதைகளும் எழுத்தாளர்களும் இப்பகுதியில் தோன்றியுள்ளனர். இப்படி பல பெருமையான அடையாளங்களுடன் கொல்லம் நகரமானது இந்தியா மற்றும் சர்வதேச அளவில் அறியப்படுகிறது.

திருவிழாக்களின் கண்கொள்ளா காட்சிகள்

ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான பயணிகளை ஈர்க்கும் பலவிதமான திருவிழாக்கள் கொல்லம் நகரில் கொண்டாடப்படுகின்றன. ‘பாரம்பர்யா’ எனப்படும் கைவினைப்பொருள் கண்காட்சித்திருவிழா இங்கு வருடாவருடம் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் எல்லாப்பகுதிகளிலிருந்தும் அற்புதமான கைவினைப்பொருட்கள் இந்தகண்காட்சிக்கு கொண்டு வரப்படுகின்றன. இது தவிர கொல்லத்தில் நடைபெறும் படகுப்போட்டிகளும், யானைத்திருவிழாக்களும் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மிகப்பிரசித்தமாக பேசப்படுகின்றன.

அஷ்டமி ரோகிணி, ஓணம் மற்றும் விஷு போன்ற பண்டிகைகள் கொல்லத்தில் மிகக்கோலாகலமாக கொண்டாடப்படுகின்றன. ஓச்சிரக்களி எனும் பாரம்பரிய வாற்சண்டை வருடாவருடம் ஜுன் மாதத்தில் இங்கு நடத்தப்படுகிறது.

வித்தியாசமான இந்த போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவரும் நிகழ்ச்சியாக புகழ் பெற்றுள்ளது. மரமடி மல்சாரம் (காளைப்பந்தயம்), கொல்லம் பூரம், பரிபள்ளி கஜமேளா, ஆனயடி யானை அணிவகுப்பு நிகழ்ச்சி மற்றும் பன்மனா பூரம் ஆகியவையும் கொல்லம் நகரில் பிரசித்தமாக கொண்டாடப்படும் இதர விசேஷ நிகழ்ச்சிகளாகும். இவை யாவுமே இந்திய மற்றும் சர்வதேச பயணிகளால் அதிக அளவில் விரும்பி ரசிக்கப்படும் கொண்டாட்டங்களாகும்.

ஈடு இணயற்ற அழகுக்காட்சிகளும் வசீகரங்களும்

எண்ணற்ற எழில் அம்சங்களையும், சுற்றுலா ஸ்தலங்களையும் தன்னுள் கொண்டுள்ள கொல்லம் நகரம் வருடம் முழுதும் ஏராளமான சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க தவறுவதில்லை.

கொல்லம் பீச், தங்கசேரி பீச், அட்வெஞ்சர் பார்க் மற்றும் திருமுல்லாவரம் பீச் போன்றவை பயணிகளுக்கு எல்லையற்ற உற்சாகத்தை அளிக்கும் பொழுதுபோக்கு அம்சங்களாகும்.

இவை தவிர, அஷ்டமுடி உப்பங்கழி நீர்த்தேக்கம், மன்ரோ தீவு, நீண்டகரா துறைமுகம், அலங்கடவு படகுக்கட்டுமான தளம் மற்றும் சாஸ்தாம்கொட்டா ஏரி ஆகியவை ரம்மியமான இயற்கை எழில் நிரம்பிய சுற்றுலாஸ்தலங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.

ராமேஷ்வரா கோயில், அச்சன்கோயில் மற்றும் மயநாட் போன்றவையும் வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலங்களாகும். மாதா அமிருதானந்தா மாயி’யின் அமிருதபுரி ஆசிரமமும் ஒரு முக்கியமான ஆன்மிக யாத்திரை ஸ்தலமாக கொல்லத்தில் புகழ் பெற்றுள்ளது. ஆரியங்காவு, சவரா, கொட்டாரக்கரா, ஓச்சிரா மற்றும் கருநாகப்பள்ளி போன்ற ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலங்களும் இப்பகுதியில் அமைந்துள்ளன.

தனித்தன்மையான சுவைகளும் வரவேற்கும் சீதோஷ்ணநிலையும்

கொல்லம் நகரம் தனது தனித்தன்மையான கடலுணவு தயாரிப்புகளின் சுவைக்கு புகழ் பெற்றுள்ளது. மீன், நண்டு, எறால் மற்றும் கணவாய் மீன் போன்ற கடலுணவு வகைகள் இங்குள்ள ஏராளமான உணவகங்களில் கேரள பாரம்பரிய சுவையுடன் தயாரிக்கப்பட்டு பரிமாறப்படுகின்றன.

கொல்லம் நகரமானது திருவனந்தபுரம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா போன்ற மாவட்டங்களை தன் எல்லைகளாக கொண்டுள்ளதால் நல்ல சாலைப்போக்குவரத்து வசதிகளைக் கொண்டுள்ளது. வருடமுழுதுமே இனிமையான பருவநிலை இப்பகுதியில் நிலவுகிறது.

மழைக்காலத்தில் கொல்லம் நகரம் இன்னும் அழகாக பசுமையுடன் காட்சியளிக்கவும் தவறுவதில்லை. மேலும், கொல்லம் நகருக்கு விஜயம் செய்து திரும்பும்போது பயணிகள் ஞாபகார்த்தப்பொருட்கள் வாங்குவதற்கேற்ற மார்க்கெட் பகுதிகளும் இங்கு நிறைந்துள்ளன.

பிரமிப்பூட்டும் வரலாற்றுப்பின்னணி, இதமான பருவநிலை, ஏராளமான இயற்கை எழில் அம்சங்கள் மற்றும் குறையில்லாத உணவுச்சுவைகள் போன்றவற்றை ஒருங்கே கொண்டுள்ள கொல்லம் நகரம் ஒரு மாறுபட்ட கனவு போன்ற சுற்றுலா அனுபவத்தை பயணிகளுக்கு அள்ளி வழங்க காத்திருக்கிறது.

Read in English: Kollam - The City of Cashews and Coir
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”