எதை முன்னேற்றம் என்று சொல்கிறார்கள் இந்திய பெண்கள்?

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

எதை முன்னேற்றம் என்று சொல்கிறார்கள் இந்திய பெண்கள்?

Post by cm nair » Tue Nov 12, 2013 11:16 am

மார்ச் 8, உலக மகளிர் தினம் உலகமெங்கிலும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. பெண்கள் மீது அக்கறையைக் காட்டும் வண்ணம் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகள்! பெண்கள் மேம்பாட்டிற்கான காதுகளைப் பிளக்கும் கோஷங்கள்... ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தில் வலியுறுத்தும் கோரிக்கைகள்.. இப்படியே வருஷந்தோரும் தடைகளை தகர்த்தெரிந்து பல படிகளை தாண்டும் பெண்கள் முன்னேற்றம் என்று எதை சொல்கிறார்கள்?

மகளிர் தினத்தன்று பெண்கள் அடைந்து விட்ட முன்னேற்றத்திற்கு எடுத்து வைக்கப்பட்ட ஆதாரங்கள்:

அடுப்பு ஊதும் பெண்ணிற்குப் படிப்பெதற்கு என்ற காலம் மலையேறிப் போய், பெண்கள் கல்வித் துறையில் ஆண்களை மிஞ்சிவிட்டனர்.

வீட்டிற்கு வெளியே வந்தாலே அதிசயமாகப் பார்க்கப்பட்ட பெண், விண்வெளிப் பயணம் வரை செல்லுமளவிற்கு முன்னேற்றம்.

உலகத்தில் அதிக ஊதியம் பெறக் கூடியவராக உயர்ந்த பதவியில் இந்திரா நூயி என்ற பெண்மணி தான் இருக்கிறார்.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண்மணி குடியரசுத் தலைவராக உள்ளார்.

உலகத்தின் தற்போதைய வல்லரசாகக் கருதப்படும் அமெரிக்காவிலும் கூட ஜனாதிபதி பதவிக்கு ஒரு பெண் போட்டியிடும் அளவிற்கு முன்னேற்றம்.

இந்தியா உள்பட பல நாடுகளில் அரசியல் ரீதியாகப் பெண்கள் உயர்ந்த பதவியில் இருக்கும் யதார்த்த நிலை.

நகர்மன்றங்களிலும் ஊராட்சிகளிலும் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள தனி வார்டுகள்.

இவ்வாறு பல படித்தரங்களை பெண் சமுதாயம் அடைந்து விட்டதாக உரைகளின் வாயிலாகவும் செய்தித் தாள்கள் வாயிலாகவும் தொலைக்காட்சிகளின் சிறப்புச் செய்திகளின் வாயிலாகவும் அறிய முடிந்தது.

ஆனால் இன்னும் பாராளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை கோரிக்கைளாகவே இருக்கிறது.

ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் வெளியே சென்று வேலை செய்வதால் வீட்டு வேலைகளில் பெண்களுடன் சேர்ந்து ஆண்களும் பங்கெடுக்க வேண்டும்.

இவையெல்லாம் ஒரு புறமிருக்க, பெண்களைப் போகப் பொருட்களாகக் காட்டும் சினிமாக்களைப் பற்றியும் சின்னத்திரைகளைப் பற்றியும் ஒரு சிறு கருத்தைக் கூட யாரும் கூறவில்லை. இதுவும் பெண்கள் அடைந்து விட்ட முன்னேற்றத்தின் அறிகுறியா? அல்லது இவ்வாறு காட்சிப் பொருட்களாக ஆக்கப்படுவதை நவீன சமுதாயம் ஆதரிக்கிறதா?

எவ்வளவு தான் கல்வியில் முன்னேறி விட்டாலும் அமெரிக்கா உள்ளிட்ட பொருளாதாரத்தில் செழிப்பான நிலையிலுள்ள நாடுகளில் பணியாற்றினாலும், ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வரதட்சணை கேட்டுக் கொடுமைகளை நிகழ்த்தும் வக்கிர புத்தியுள்ளவர்களின் (மாமியார் என்ற பெண் உள்பட) கொடூரங்களிலிருந்து பெண்ணினத்தைக் காப்பாற்ற என்ன வழி?

சமுதாயத்தில் சம அந்தஸ்து எனக் கருதப்படக் கூடிய வேலை வாய்ப்புகளில் பெண்களின் பங்கு கணிசமாக இருந்தாலும் வேலை செய்யும் இடத்திலும் அதற்கு வெளியேயும் பெண்களுக்கு இழைக்கப்படும் தொல்லைகளிலிருந்து பெண்ணினம் விடுபட என்ன தீர்வு?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையைத் தேடாமல் வெறும் கோஷங்களுடன் முன்னேற்றம் என மார்தட்டிக் கொள்வதில் எவ்விதப் பயனுமில்லை.

நாம் வாழக்கூடிய காலச் சூழ்நிலையில் நம்முடைய சமுதாயப் பெண்களுக்கும் நிறையவே பொறுப்பு இருக்கிறது. உணர்வுகளுக்கு ஆட்படுத்த வைக்கும் சீரியல்கள் மற்றும் சினிமா போன்ற மாயைகளிலிருந்து நம் சமுதாயப் பெண்மணிகள் வெளியே வந்து, சமுதாயத்தின் கல்வி நிலையை மேம்படுத்த எல்லா வித முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு அமைத்த சச்சார் கமிட்டி, முஸ்லிம்களின் பொருளாதார மற்றும் கல்வி நிலையை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியது. இத்துயர நிலையிலிருந்து சமுதாயம் விடுபட பெண்களின் பங்கு மிகவும் அவசியமானது. இன்னும் சிறு வயதில் வாழ்க்கைப்பட்டு, தாயாகி வாழ்க்கை முழுவதும் அவதிப்படும் பெண்கள் நம் தமிழக கிராமங்களில் இருக்கத்தானே செய்கிறார்கள்.

இன்னும் சில பெண்கள் பெற்றதை விட இழந்தது அதிகம். சுயமாய் காலில் நின்று, சுய தொழில் செய்து, கால் கடுத்துப்போனதுதான் மிச்சம். சிலர் இழந்த இன்பங்களையும் தொலைத்த சந்தோஷங்களையும் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். கணவனுக்கு அடிமையாய் இருந்த காலம் போய் கணிணிகளுக்கு அடிமைகளான அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 33 சதவீதம் கேட்டு மள்ளுக்கட்டும் பெண்களுக்கு சரிசமம் கொடுத்தாலும்... சில காலங்கள் கழித்து பார்த்தோமானால் தற்போது பெண்களுக்கு கிடைக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையும் மிச்சமிருக்குமா? என்பது ஏட்டில் எழுதப்படாத நிதர்சனம்.
Post Reply

Return to “படுகை ஓரம்”