Page 1 of 1

அடுத்தடுத்து கடன் அறிவிப்பு - வங்கிகள் வராக்கடனால் மூடப்படுமா?

Posted: Tue Jan 17, 2017 10:39 am
by ஆதித்தன்
சமீபத்தில் நடத்த பணத்தடையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள், வங்கிகள் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். அதுமட்டுமில்லாமல், பணத்தடைக்கு காரணமாக பல்வேறு தகவல்கள் பலரிடமிருந்தும் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.


அதில் முக்கிய காரணம், வங்கிகள் பொதுமக்கள் டெபாசிட் செய்த பணத்தினை பெரிய பெரிய கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு கடனாக வழங்கிவிட்டு வராக்கடன் பகுதியில் சேர்த்துவிட்டதாகவும், இதனால் வங்கிகள் பெரிய நட்டத்தில் இயங்குவதாகவும், இதனைச் சரிகட்ட அரசு பொதுத்துறை வங்கிகளுக்கு இருப்புத்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க வேண்டிய சூழலில்தான், பணத்தடை அறிவிக்கப்பட்டு, மக்கள் பணம் அனைத்தும் வங்கிக்கு இருப்பாக மாற்றப்பட்டது.


செல்லாத நோட்டுக்குப் பதில் புதிய நோட்டுகள் அச்சடித்துக் கொடுக்கப்படும் என்றுக்கூறிய அரசு, அவ்வாறு செய்யவில்லை. மேலும், செலுத்திய பணத்தினை வங்கியிலிருந்து எடுக்க முடியாதபடி கட்டுப்பாடு விதித்ததோடு, இன்று வரையிலும் வாரத்திற்கு 24,000 ரூபாய் மட்டும்தான் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு தொடர்கிறது. அதே நேரத்தில் வங்கிக்கு போதிய பணம் அச்சடித்துக் கொடுக்காத காரணத்தினால், வங்கிகள் அரசு அறிவித்த தொகையைக் கூட அனைவருக்கும் கொடுக்க முடியாமல், 5000... 10000 மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிறது.


நேர்மையான அரசு நிர்வாகத்திற்கு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மட்டுமே துணை. ஆகையால் அனைவரும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என்று அரசு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கையிலேயே, அதிகாரிகள் ஒர் பக்கம் புதிய ரூபாய் நோட்டுகளை கருப்பு பண முதலைகளுக்கு வாரி வழங்கிக் கொண்டிருப்பதனை நாளிதழ்கள் வெளிப்படுத்தின.


அதிகாரிகள் கணக்குக்காட்டா கறுப்பண முதலைகளுக்கு துணை செய்கிறார்கள் என்றால், அரசு கணக்குக்காட்டும் பெரிய கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு துணையாக கோடி கோடியாய் பணத்தினை கடன் வழங்கி வராக்கடனில் கணக்கு வைக்கின்றன.


கொடுத்த வராக்கடனை நிர்வகிப்பதில் இன்றளவும் சரியான நடைமுறை இல்லை. அதுமட்டுமில்லாமல், அரசால் தள்ளுபடி செய்யப்பட்ட வங்கிக்கடன் தொகைகள் ஏராளம். அவ்வாறு கடன் தள்ளுபடி ஜாக்பாட்டினை அனுபவித்தவர்கள் பெரும்பாலும் அரசியல் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனரே தவிர, ஏழை மக்கள் பலன் அடையவில்லை.


இவ்வாறு கடன் மூலம் வங்கிகளை திவாலாக்கிக் கொண்டிருக்கும் அரசு, அடுத்ததாக கடன் திட்டத்தினை அறிமுகம் செய்திருப்பது பொதுமக்களிடத்தில் மேலும் அச்சத்தினை உண்டாக்கியிருக்கிறது.


நிர்வாக குறைபாடு கொண்ட வங்கிகள், அடுத்தடுத்து வராக்கடன் தொகையை உயர்த்திவிட்டால், வங்கியில் போட்டு வைத்துள்ள பொதுமக்களின் பணம்தான் இழப்பாகும்.


ஆகையால் பொதுமக்கள் தங்களது பணத்தினை வங்கியிலிருந்து எடுத்துக் கொண்டிருப்பது தொடர்ந்து கொண்டிருக்கின்றன.


ஒர் சில ஆண்டுகளில் வங்கிக் கிளைகள் பலவற்றினையும் பணம் இல்லாமல் மூட வேண்டிய சூழல் அமைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.