தேனி மாவட்டம்: அ.வாடிப்பட்டி உருவான வரலாறு

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

தேனி மாவட்டம்: அ.வாடிப்பட்டி உருவான வரலாறு

Post by cm nair » Fri Nov 29, 2013 9:00 am

தேனி மாவட்டத்தில், ஒவ்வொரு ஊராட்சியும் வரலாற்று பின்னணியில் உருவானது.
அதற்கு அடையாளமாக கல்வெட்டு, கோயில்கள் என பல உள்ளன. தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது அ.வாடிப்பட்டி என்ற ஊராட்சி. அவ்வூராட்சிக்குப் பின்னால் சுவாரஸ்யமான தகவல் உண்டு.

ஒரு ஊருக்கு முன்னால் உள்ள ஒரு எழுத்தால் வரலாற்றில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது, அ.வாடிப்பட்டி ஊராட்சி. கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாட்டை பல பகுதிகளாகப் பிரித்து, அந்த பகுதிகளையும் பாளையங்களாக பிரித்தனர். பாளையத்தை நிர்வகிக்கவும், நிர்வாக பிரதிநிதியாகவும் பாளையக்காரர் என்ற பட்டம் கொடுத்து ஆட்சி புரிந்தனர். அப்படி ஆட்சி புரிந்த பாளையக்காரர்கள் அப்பிநாயக்கர், குப்பிநாயக்கர் என்ற இருவர்கள்.

அதன் பின்னர் ஆங்கிலேயர்கள் நாட்டை கைப்பற்றி பாளையக்காரர்களின் ஆட்சிமுறையை ஒழித்து விட்டு ஜமீன்தாரர்கள் ஆட்சி முறையை உருவாக்கினார்கள். அப்படி உருவாக்கிய போது கண்டமனார் ஜமீனுக்கும், உத்தமநாயக்கனூர் ஜமீனுக்கும் எல்லைகள் பிரிக்கப்பட்டது. அந்த எல்லைகளுக்கு நுழைவு வாயிலாக அ.வாடிப்பட்டி திகழ்ந்துள்ளது. இதனை பண்டையக்காலத்தில் வாடிவாசல் என்று அழைத்துள்ளனர். இப்படி அழைக்கப்பட்ட வாடிவாசல்கள் தாதம்பட்டி வாடிப்பட்டி, முத்துலாபுரம் வாடிப்பட்டி, தேவதானப்பட்டி வாடிப்பட்டி, அப்பித்துநாயக்கர் வாடிப்பட்டி என்று அழைக்கப்பட்டது. அப்பித்து நாயக்கர் ஆண்ட பூமியாதலால் அப்பித்துநாயக்கன் வாடிப்பட்டி என்று இந்த ஊர் அழைக்கப்பட்டது. பெரும்பாலும் நாயக்கர் சமூக மக்கள் கால்நடைகளான ஆடு, மாடுகளை பட்டி போட்டு வளர்த்து வந்ததால் அவர்கள் வசித்த பகுதி பட்டி என்று அழைக்கப்படுகிறது.

கடந்த 03-08-1925 ஆம் ஆண்டு ராவ் சாகிப் வேதநாயகம் என்பவர் உசிலம்பட்டி தாலுகாவில் அம்மை நோய் பற்றி அறிவிப்பு செய்து அந்த அறிவிப்பில் அ.வாடிப்பட்டி என்று கடிதம் எழுதியுள்ளார். அதன் பின்னர் அ.வாடிப்பட்டி என்றே அழைக்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டு வரை குள்ளப்புரம் ஊராட்சியின் கீழ் வாடிப்பட்டி ஒரு வார்டாக இயங்கி வந்துள்ளது. தாதிநாயக்கர் என்பவர் குள்ளப்புரம் ஊராட்சியில் இருந்து அ.வாடிப்பட்டியை பிரித்துள்ளார். அதன் பின்னர் அ.வாடிப்பட்டி, எ.வாடிப்பட்டி, ஏ.வாடிப்பட்டி போன்ற பெயர்களில் இந்த ஊர் அழைக்கப்பட்டு வருகிறது.


இந்த ஊரில் வருடாவருடம் சாதி மத பேதமின்றி ஆயிரம் பழம் கும்பிடுதல் என்ற வழக்கம் உள்ளது. அப்பிநாயக்கர், குப்பிநாயக்கர் வாழ்ந்த பகுதியை குறிக்கும் விதமாக மண்டுக்கல் ஒன்று உள்ளது. அந்தக்கல் காலத்தின் சுவடாக ஊராட்சி மன்றத்தின் முன் இன்றளவும் உள்ளது. இது தொடர்பாக பாலகிருஷ்ணன் என்பவர் கூறுகையில், அப்பித்திநாயக்கன் வாடிப்பட்டி என்ற ஊரை காலப்போக்கில் ஒவ்வொருவரும் தங்களுடைய விருப்பத்திற்கேற்ப அ.வாடிப்பட்டி, ஆ.வாடிப்பட்டி, எ.வாடிப்பட்டி, ஏ.வாடிப்பட்டி என்ற பல பெயர்களில் அழைத்து மக்களை குழப்பி வருகின்றனர். டி.வாடிப்பட்டி என்றால் தேவதானப்பட்டி அருகே உள்ள வாடிப்பட்டியும், எம்.வாடிப்பட்டி என்றால் வத்தலக்குண்டு அருகே உள்ள வாடிப்பட்டியும், டி.வாடிப்பட்டி என்றால் தாதம்பட்டி வாடிப்பட்டி என்றும் மக்கள் ஒரு எழுத்தால் குழம்புகின்றனர். இந்த குழப்பததை தவிர்க்க அரசிற்கு பலமுறை கோரிக்கை வைத்து அ.வாடிப்பட்டி என்று இப்பொழுது அரசு அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்றார். ஒரு எழுத்தால் ஒரு ஊரின் வரலாறே மாறியிருப்பது வியப்பின் சரித்திரக் குறியீடு தான்.
Post Reply

Return to “படுகை ஓரம்”